PUBLISHED ON : அக் 03, 2010

சட்டம் ஒரு இருட்டறை !
விஜயகாந்தை வைத்து 28 வருடங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய படம், 'சட்டம் ஒரு இருட்டறை!' இப்படத்தை மீண்டும் தமிழில் தயாரிக்கிறார் அவர். என்றாலும், இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப கதையிலும், காட்சியமைப்பிலும் நவீனப்படுத்த திட்டமிட்டுள்ள எஸ்.ஏ.சந்திரசேகரன், விரைவில் பட வேலைகளை துவங்க உள்ளார்.
'7 ஆம் அறிவு'
படத்தை, கி.மு., 600ல் நடக்கிற கதையாக இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்காக, அந்த காலக் கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் நாகரிகம், சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் கண்முன்னே நிறுத்துகிறார். பீரியட் பிலிம் என்பதால், பல கோடி செலவில் செட் அமைத்தும் வருகிறார்.
நான் சம்பளம் கேட்கும் காமெடியன் !
வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடியன்கள் தான் நாள் சம்பளம் பேசி, நடித்து வந்தனர். ஆனால், இப்போது அந்த பட்டியலில் எம்.எஸ்.பாஸ்கரும் சேர்ந்துள்ளார். காமெடி வேடமோ அல்லது சென்டிமென்ட் வேடமோ எதுவாக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் கேட்கிறார். சினிமா பொன்னையா.
ஷாம் புதிய முடிவு !
'தில்லாலங்கடி'க்குப் பிறகு தமிழில் நல்ல வாய்ப்புகள் வருமென்று காத்திருந்த ஷாமுக்கு, அதே மாதிரியான வில்லன் வேடம் கூட கமிட்டாகவில்லை. அதனால், ஹீரோ, வில்லன் என்ற இரண்டையும் கடந்து, நல்ல வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தாலும் நடிக்கும் முடிவில் இருக்கிறார். இதுகுறித்து சில நட்பு வட்டார இயக்குனர்களிடமும் கலந்து பேசி வருகிறார். — சி.பொ.,
தெலுங்கு ஹீரோக்களை வளைத்து போடும் தமன்னா !
தெலுங்கில் அனுஷ்காவின் மார்க்கெட் ஆட்டம் கண்டிருப்பதோடு, இலியானாவும் தமிழுக்கு வருவதால் அவர்களுக்கு செல்லவிருந்த படங்களை ஆட்டை போடுவதில் படு தீவிரமடைந்துள்ளார் தமன்னா. முக்கியமாக சில முன்வரிசை ஹீரோக்களுடன் அடிக்கடி மீட்டிங் போடும் தமன்னா, தன் இல்லத்தில் ஏதேனும் சிறிய விசேஷம் என்றாலும் மேற்படி ஹீரோக்களை அழைத்து ஸ்பெஷல் பார்ட்டி வைக்கிறார். ஆட்டுக் கறியும், நெல்லுச் சோறும் தம்மா கும்மா; அந்த கடன் கேட்கப் போனால் கிய்யா மிய்யா! — எலீசா.
ஜெனிலியாவுக்கு கிடுக்கிப்பிடி !
இந்தியில் நடித்து வரும் ஜெனிலியா, தமிழ் படங்களில் கால்ஷீட் சொதப்பல் செய்வதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். இருப்பினும், விஜய்யுடன், 'வேலாயுதம்' படத்துக்கு ஜெனிலியாவை ஒப்பந்தம் செய்தபோது, 'எக்காரணம் கொண்டும் கால்ஷீட் பிரச்னை செய்ய மாட்டேன்...' என்று கைப்பட எழுதி வாங்கியுள்ளனர். பட்டவர்கள் பதத்தில் இருப்பர்! — எலீசா.
தாராளமயக் கொள்கை !
தமன்னாவின் மார்க்கெட்டை அனுஷ்காதான் வீழ்த்துவார் என்று கணக்குப் போட்டவர்கள் இப்போது ஹன்சிகா மோத்வானிதான் வீழ்த்துவார் என்று உரக்கச் சொல்கின்றனர். காரணம், வந்த வேகத்திலேயே விஜய்யுடன் வேலாயுதம், தனுஷûடன் மாப்பிள்ளை படங்களை கைப்பற்றியுள்ள ஹன்சிகா, நடிப்பிலும் படு சுட்டியாக இருக்கிறார். அதோடு, கவர்ச்சியிலும் கட்டுப்பாடு விதிக்கவில்லை. தாராளமய கொள்கையை அமல்படுத்தியிருக்கிறார். இது ஒன்று போதாதா தமன்னாவை வீழ்த்த என்கின்றனர். வந்தது சண்டை, இறக்கடி கூடையை! — எலீசா.
ஹீரோக்களை துரத்தும் பியா !
'பலே பாண்டியா'விற்கு பிறகு, 'கோ' படத்தில் நடித்து வரும் பியாவுக்கு புதிதாக படமில்லை. என்றாலும் தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நிலைக்க வேண்டும் என்று ஆசைப்படும் பியா, ஏற்கனவே தன்னுடன் டூயட் பாடிய ஹீரோக்களிடம் தனக்கு சிபாரிசு செய்யுமாறு துரத்தி வருகிறார். இதையொட்டி, ஜெய், விஷ்ணு, பிரேம்ஜி என பல நடிகர்கள் பியாவுக்கு நேரடி சிபாரிசு செய்து வருகின்றனர். அடுத்து, அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்! — எலீசா.
