தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஆக 10, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

பாக்யராஜ் படத்தில் அரசியல் நய்யாண்டி!

பாக்யராஜ் என்றாலே, முருங்கைக்காய் தான் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு, குடும்ப படங்களை இயக்கி வந்த அவருக்கு, சாந்தனு நடித்த, சிந்து பிளஸ்-2 படம் தோல்வியை கொடுத்தது. அதனால், படம் இயக்குவதை தவிர்த்து, கேரக்டர் நடிகராக உருவெடுத்த அவர், தற்போது, துணை முதல்வர் என்ற படத்துக்கு, கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி நடித்து வருகிறார். இப்படம், இன்றைய அரசியலையும், அரசியல்வாதிகளையும் நய்யாண்டி செய்யும் வகையில் தயாராகி உள்ளது. அதே சமயம், தன் வழக்கமான குடும்ப சமாசாரங்களையும் விட்டு விடக்கூடாது என்பதற்காக, மலையாள நடிகை ஸ்வேதா மேனனை, தன் மனைவி வேடத்தில் நடிக்க வைத்து, 'கிளுகிளு'ப்பு காட்சிகளையும் புகுத்தியிருக்கிறார் பாக்யராஜ்.

— சினிமா பொன்னையா.

தாய்மொழியில் கால்பதிக்கும் லட்சுமி மேனன்!

மலையாளத்தில் இரண்டு படங்களில் சிறிய வேடங்களில் நடித்த பின், தமிழுக்கு வந்தவர் லட்சுமி மேனன். அந்த வகையில், கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் மஞ்சப்பை என்று வரிசையாக வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவருக்கு, தன் தாய்மொழியான மலையாளத்திலும் காலூன்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது திலீப்புடன், அவதாரம் என்ற படத்தில் வெயிட்டான ரோலில் நடித்துள்ள லட்சுமி மேனன், அப்படம் தனக்கு வெற்றிப்படமாக அமைந்தால், இனி இரண்டு மொழி நடிகையாகி விடுவேன் என்றும் ஒருவேளை அப்படம் கவிழ்த்து விட்டால் முழுநேர கோலிவுட் நடிகையாகி விடுவதாகவும் கூறுகிறார். அதனால், அடுத்தடுத்து நடிக்க சில மலையாள இயக்குனர்கள் முற்றுகையிட்ட போதும், 'அவதாரம் பட ரிலீசுக்கு பின் தான் முடிவு சொல்வேன்...' என்று, அவர்களை நிலுவையில் வைத்திருக்கிறார். காரையும், எள்ளையும் காலம் கருதி பயிர் செய் என்ற கதை!

- எலீசா.

விஷால் நடிக்கும் ஆம்பள!

தாமிரபரணி படத்தை தொடர்ந்து, ஹரி இயக்கும், பூஜை படத்தில் தற்போது நடித்துக் கொண்டிக்கிறார் விஷால். இப்படத்தை, சிங்கம் படத்துக்கு இணையாக, இயக்குகிறார் ஹரி. கோவை மண்வாசனை கதையில் உருவாகும் இப்படத்தை அடுத்து, சுந்தர்.சி இயக்கும், ஆம்பள படத்தில் நடிக்கிறார் விஷால். இதே தலைப்பில், இருபது ஆண்டுகளுக்கு முன், டாக்டர் ராஜசேகர் ஒரு படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த, ஆம்பள பழைய, ஆம்பள படத்தை விடவும் அதிரடியான கதையில் உருவாகிறது. அத்துடன், முதன் முறையாக முறுக்கு மீசை கெட்டப்புக்கும் மாறுகிறார் விஷால்.

— சி.பொ.,

எமி ஜாக்சனின் ரொமான்ஸ் அனுபவம்!

மதராசப்பட்டினம் மற்றும் தாண்டவம் படங்களையடுத்து, ஐ படத்தில் நடித்துள்ள எமி ஜாக்சன், அந்த படத்தில் விக்ரமுடன் நடித்த அனுபவங்களை சில மேடைகளில் பகிர்ந்து வருகிறார். அதில், ஒரு பாடல் காட்சியில், ௧௧௦ கிலோ எடைக்கு தன் உடம்பை மாற்றி நடித்துள்ள விக்ரமின் நடிப்பை, பெருமையாக சொல்லும் எமி, சிங்கம், காண்டா மிருகம் மற்றும் கொரில்லா போன்ற வேடங்களில் விக்ரம் ரொமான்ஸ் செய்ததை வியப்புடன் கூறுகிறார். 'அப்பாடல் ரசிகர்களுக்கு பெரிய காமெடி விருந்தாக இருக்கும்; மேலும், இதுவரை, நான் நடித்த பாடல் காட்சிகளில், இப்பாடலில் தான் அதிக, 'என்ஜாய்' செய்து நடித்தேன்...' என்கிறார் எமி ஜாக்சன்.

-எலீசா.

படம் இயக்கும் ஜேம்ஸ் வசந்தன்!

சின்னத்திரையில், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜேம்ஸ் வசந்தன். பின், சுப்பிரமணியபுரம் படம் மூலம் இசையமைப்பாளராக சினிமாவுக்குள் வந்தவர், தொடர்ந்து இசையமைத்து வருகிறார். தற்போது, வானவில் வாழ்க்கை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், 'ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என் லட்சியம்; அதனால் தான், கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, இப்படத்தை இயக்குகிறேன்; முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில், ௧௯ பாடல்கள் உள்ளன. இந்த பாடல்களை கர்நாடிக், இந்துஸ்தானி, வெஸ்டர்ன், ராப் மற்றும் பாப் என, இசையில் எத்தனை வகை உள்ளதோ, அத்தனை வகையிலும் ஒவ்வொரு பாடல் அமைத்திருக்கிறேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா.

கறுப்பு பூனை!

ரத்னமான தயாரிப்பாளர் பேனரில் தொடர்ந்து நடித்து வரும் தல நடிகர், திரைக்குப்பின்னால், அவருடன் ஒரு பங்குதாரராக இருப்பதாக செய்தி பரவியுள்ளது. இதையடுத்து, நடிகருடன் பார்ட்னர்ஷிப் ஆகிக் கொண்டால், தங்கள் நிறுவனத்துக்கு படம் செய்து தருவார் என்று மேலும் சில பட அதிபர்களும், அவரை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நான்கெழுத்து நடிகையின் முகத்தில் பளபளப்பு குறைந்து விட்டது. அதனால், வெளியில் தலைகாட்டும் போது மட்டுமின்றி, வீடு தேடி யாராவது சினிமாக்காரர்கள் தன்னை சந்திக்க வந்தாலும், முழு மேக்கப் போட்டுக் கொண்டு தான் அவர்களை சந்திக்கிறார். இதற்காக எப்போதும் ஒரு மேக்கப்மேனை கூடவே வைத்திருக்கிறார்.

துளிகள்!

* தெலுங்கில் நம்பர்ஒன் நடிகையாக வலம்வந்த போதும், சமந்தாவின் சம்பளம், இன்னும், இரண்டு கோடியை தாண்டவில்லை.

* சினிமாவில் நடிகராவது எளிது; ஆனால், நிலைப்பது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம்...' என்கிறார் தனுஷ்.

* மலையாள நடிகர் தீலிப்பை விவகாரத்து செய்யும் மஞ்சுவாரியார், தன் பெயரில் அவர் எழுதி வைத்திருந்த, 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அவரிடமே திரும்ப ஒப்படைக்கிறார்.

* நண்பேன்டா படப்பிடிப்பிற்கு, நயன்தாரா தாமதமாக வந்தாலும், அவருக்காக காத்திருந்து படப்பிடிப்பு நடத்துகிறார் உதயநிதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us