PUBLISHED ON : ஜூலை 19, 2015

நேற்றின் நிழல்!
மலர் சருகாக மாறுவதை
ஏற்றுக் கொள்ளும்
எதார்த்தம் இல்லாமல்
ஏன் புலம்புகிறாய்!
ஆயுள் முழுவதும்
வளமை வற்றாத
ஜீவநதி தான்
வாழ்க்கை என்று
யார் சொன்னது?
இன்பத்தை
சில நிகழ்வுகள்
அழைத்து வந்து
அறிமுகம் செய்வதைப் போல
துன்பத்தை
சில முடிவுகள்
விளைத்தெடுத்து
சோகத்தை குவிக்கும்!
காத்திருந்த கனவுகளை
கலைத்து விட்டு
நெஞ்சை காயப்படுத்தி
சில உறவுகள் செல்லும்!
எப்படியாயினும்
எதார்த்தத்தை
ஏற்கும் துணிவை
உன் தோழனாக்கு!
எதிர்பார்ப்புகளை
வெளியே வைத்து விட்டு
எதார்த்தத்துடன் மட்டும்
உறவாடு!
இன்றைய நிகழ்வு
நேற்றைய நிழல் அல்ல
இது - நிகழ்காலத்தின் நிஜம்!
நேற்று மலராக இருந்தது
இன்று சருகாகியிருக்கலாம்
அரும்பாமல் இருந்தது
மலர்ந்தும் இருக்கலாம்
முள்ளாக இருந்தது கூட
கொஞ்சம் முகம்
மலர்ந்திருக்கலாம்!
எதிர்பார்ப்புகளையே
எதிர்பார்க்கக் கூடாது!
எதார்த்தமே என்றும்
நிரந்தரமானது!
— ரஜினிசெந்தில், கோவை..
