
அன்புள்ள அம்மா —
என் வயது, 34; கணிப்பொறி அறிவியலில் முதுகலை பட்டதாரி; எல்லாரிடமும், கலகலப்பாக பழகும் சுபாவம் கொண்டவள். கல்லூரியில் படித்த காலத்தில் நிறைய நண்பர்கள், நண்பிகள் உண்டு.
என், 22 வயதில் திருமணம் ஆனது. பெற்றோர் பார்த்து நடத்தியது தான். என் கணவர் சாப்ட்வேர் இன்ஜினியர். திருமணத்தன்று இரவே, 'எனக்கு உன்னைப் பிடிக்கல; என் பெற்றோரின் வற்புறுத்தலால் தான், உன்னை திருமணம் செய்தேன். அதனால, என்னிடம் எதையும் எதிர்பாக்காதே...' என்று, என் தலையில் பெரிய இடியை இறக்கினார் என் கணவர். இதை, என் பெற்றோரிடம் சொல்லி, நம் வீட்டுக்கே போய் விடலாமா என்று எண்ணினேன். ஆனாலும், கொஞ்ச காலம் பொறுத்து பார்ப்போம் என்று அமைதியாக இருந்தேன்.
ஆனால், எந்த மாற்றமும் இல்லை; என்னுடன் பேச கூட மாட்டார். என் நண்பர்கள் போன் செய்து பேசினால், என் மாமியார், 'அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது; இனிமேல் நீங்க, அவளுடன் பேசக் கூடாது...' என்று, என் எல்லா நட்பையும் கத்தரித்து விட்டார்.
தனிமையில் எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது. அதனால், ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தேன். மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனால், ஆறு மாதங்களுக்கு மேல், அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லி விட்டனர். எனக்கும் எதிர்த்து பேச தைரியம் இல்லை.
இந்நிலையில், என் பெற்றோருக்கு, என் நிலையை கூறினேன். 'கணவனுடன் வாழாமல் அந்த வீட்டில் இருப்பதற்கு, அவனை விவாகரத்து செய்துட்டு, எங்களுடன் வந்துவிடு; நான் வேறொரு திருமணம் செய்து வைக்கிறேன்...' என்றார் என் அப்பா.
ஆனால், நான் என் கணவரை, விவாகரத்து செய்ய மறுத்து, அந்த வீட்டிலேயே இருந்தேன். என் கவலையினாலேயே என் அப்பாவிற்கு மாரடைப்பு வந்து பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டார். இதனால், எனக்கு என்ன பிரச்னை வந்தாலும் இனி பெற்றோரிடம் சொல்லக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். அதனால், நிறைய கைவேலைகளை கற்று; அவற்றில் முழுமையாக ஈடுபட்டு என் கவலைகளை மறந்தேன்.
என்னை ஒரு டாக்டரிடம் கூட்டிச் சென்றார் என் மாமியார். அவரிடம், எங்கள் இருவருக்கும் எந்த உறவும் இல்லை என்பதை வெளிப்படையாக கூறிவிட்டேன். என் மாமியார், என் கணவரை கூப்பிட்டு அறிவுரை கூறுவார் என்று நினைத்தேன். ஆனால், அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
திருமணம் முடிந்து, நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், என் கணவருக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. நான் கூடவே இருந்து அவரை கவனித்துக் கொண்டேன். அதன்பின், என் மீது கொஞ்சம் கொஞ்சமாக அன்பு காட்டத் துவங்கினார்; நான் மிகவும் சந்தோஷமானேன். ஒரு ஆண்டில் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது; அவனுக்கு இப்போது, ஏழு வயது ஆகிறது.
குழந்தை பிறந்த பின், மீண்டும் அவர் பழைய நிலைக்கே மாறிவிட்டார். ஆனால், குழந்தை மீது உயிரையே வைத்திருக்கிறார். நான் என்ன செய்தாலும், குழந்தை மற்றும் மாமியார், மாமனார் முன் என்னை மட்டம் தட்டுவார். இதனால், நான் அவருடன் பேசுவதையும், வெளியே செல்வதையும் தவிர்த்து விடுவேன். அப்படி மீறி எங்கேயாவது வெளியே சென்றாலும், அங்கேயும் சண்டை போடுவார்; நிம்மதியே போய்விடும்.
இதனால், பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளேன். பையனும் ஸ்கூல் போக ஆரம்பித்ததால், என் ஓய்வு நேரங்களில் கைவேலை செய்வது, பாட்டு கேட்பது என்று பொழுதை போக்கியபடி இருக்கிறேன். இவற்றில் ஈடுபடும்போது, மனம் நிம்மதியாக இருக்கிறது. ஆனால், மனதின் ஓரத்தில் ஒருவித தவிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. நமக்கு தாயாக, தகப்பனாக, தோழனாக இருக்க வேண்டிய கணவன், நம் மீது வெறுப்பை காட்டுகிறானே என்று வருத்தமாக உள்ளது. தோள் சாய, ஒரு தோழனை மனம் எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடத்தில், ஒரு பெரிய பிளாட் கட்ட ஆரம்பித்தனர். மூன்று, நான்கு இன்ஜினியர்கள் அங்கே வேலை செய்தனர். அதில் ஒருவர், வயதில் என்னை விட மிகவும் சிறியவராக இருந்தார். என் மனம், என்னையும் அறியாமல் அவரிடம் சென்றது. ஒவ்வொரு நாளும் விடியும் போது இனி அவரை பார்க்கக் கூடாது என்று நினைப்பேன்; ஆனால், முடியாது. அவரும் என்னை பார்க்க துவங்கினார்; சந்தோஷமாக இருந்தது.
இப்படியாக இந்த பார்வை பரிமாற்றம், ஒரு மாதம் போனது. பின், ஒருநாள் தனிமையில் உட்கார்ந்து, நான் அவரிடம் எதிர்பார்ப்பது காதலா, காமமா, நட்பா என்று யோசித்த போது, கண்டிப்பாக இவை இரண்டும் இல்லை; தூய நட்பு தான் தேவை என்று தோன்றியது. இதைப்பற்றி அவரிடம் பேச எனக்கு பயம். ஆனால், எப்படியாவது அவரது நட்பை பெற்று, வாழ்நாள் முழுவதும், அதை காக்க வேண்டும் என்று மனம் எண்ணியது. ஆனால், என் மனதை அவரிடம் தெரிவிக்க வழி தெரியவில்லை.
தற்போது, அவர்களது பில்டிங்கில் வேலை ஓரளவு முடிந்து, அவருக்கு வேறு ஒரு, 'புராஜக்ட்' கிடைத்ததால் அங்கு சென்று விட்டார்.
இப்போது, நான் வெளியே நின்றிருந்தால், அவருடன் வேலை பார்த்தவர்கள் என்னை ஒரு மாதிரி பார்க்கின்றனர். அவர்களிடம் என்னைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு கல்யாணமான பெண், தன்னை பார்ப்பதைப் பற்றி கேவலமாக சொல்லி இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அவருடன் வெளிப்படையாக பேசி இருந்தால், என் மனம் தெளிவாகி இருக்கும். இப்போது, அவர் என்னை தவறாக எண்ணி விட்டாரோ என்று மனம் குழம்புகிறது. நான் பார்க்காமல் இருந்திருந்தால், இந்த தவறு நடத்திருக்காது. என் மீது அவர் கொண்டிருக்கும் தவறான அபிப்பிராயத்தை போக்க வேண்டும் என்று மனம் நினைக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் அம்மா. உங்களின் அறிவுரைப்படி நடக்க காத்திருக்கிறேன்.
— இப்படிக்கு, அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு,
உன் கணவர் உன்னிடம் ஒட்டாமல் இருப்பதற்கு காரணம், உனக்கே தெரியாமல், உன்னிடம் இருக்கும் குறைபாடாக இருக்கலாம். குண்டாய் இருப்பாயோ, குண்டூசி வைத்து குத்துவது போல, காயப்படுத்தும் வார்த்தைகளை பிறர் மீது அள்ளி வீசுவாயோ? உறவுகளை, நட்புகளை பலப்படுத்தி கொள்ளும் விதத்தில், உன் நடவடிக்கைகள் இருக்காதோ? திருமணத்திற்கு முன், உனக்கு ஆண் நண்பர்கள் அதிகம் என்பதை, தவறான வழியில் புரிந்து வைத்திருப்பாரோ உன் கணவர்.
ஆனாலும் மகளே... சுமாரான பெண்கள் கூட, சில வித்தைகள் செய்து படியாத கணவனை மடக்கி போட்டு விடுகின்றனர். உனக்கு அவ்வித்தைகள் செய்ய தெரியவில்லையா அல்லது செய்ய விருப்பமில்லையா?
நான்கு ஆண்டுகள் கழித்து, உன்னுடன் உன் கணவர் உறவு வைத்துக் கொண்டது, 'நோய்வாய்ப்பட்ட நேரத்தில் நம்மை பார்த்துக் கொண்டாளே...' என்கிற நன்றிக் கடன் தான்.
கை வேலை செய்வது, பாட்டு கேட்பது, வயலின் கற்றுக் கொள்வது, மன அழுத்தத்தை போக்கும் அருமருந்துகள். திருமணமாகாத அல்லது திருமணமான ஆணோ, பெண்ணோ எதிர்பாலினரை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது ஒரு குறுகுறுப்பு தான்.
பக்கத்து பிளாட்டில் வீடு கட்ட வந்த பொறியாளரை, நீ பார்த்தது, காதலாலோ, நட்பாலோ அல்ல; காமத்தால் தான்! கணவருடன் ஏற்பட்ட ஏமாற்றத்தை, புதியவனுடன் உறவு வைத்து ஈடுகட்ட விரும்பியிருக்கிறாய். நீயும் பார்த்திருக்கிறாய்; அவனும் பார்த்திருக்கிறான். ஆனால், இருவருக்குமே உறவுக்கு அச்சாரம் போடும் துணிவில்லை.
முன்பின் தெரியாத அன்னியன், அவன் பெண்கள் விஷயத்தில் எப்படிப்பட்டவன், அவனுடைய குணநலன்கள் என்ன என, எதுவும் தெரியாதவனிடம் நட்பு பாராட்டி, அந்நட்பை ஆயுளுக்கும், பாதுகாக்க விரும்புவதாக கூறுவது உன் அறியாமை. அதிகமாய் கதைகள் படித்து, சினிமாக்கள் பார்த்து உன் மனம் கற்பனை உலகில் சஞ்சரிக்க விரும்புகிறது.
ஒருவார்த்தை கூட பேசாதவன் பறந்து போய் விட்டான். போனால் போகட்டும் என விடாமல் அவன் உன் மீது வைத்திருக்கும் தவறான எண்ணத்தை பேசி களைய வேண்டும் என, நீ ஆவலாதிப்பது, வேலியில் செல்லும் ஓணானை மடியில் எடுத்து போட்டுக் கொள்வது போன்றது.
'பக்கத்து வீட்டு பிளாட் ஆன்ட்டி என்னை செக்சியா பாக்குதடா...' என, நண்பர்களிடம் அவன் கட்டாயம் கமென்ட் அடித்திருப்பான். வாழ்க்கையில் நம்மை பற்றி ஆயிரம் பேர் தவறான அபிப்ராயம் வைத்திருப்பர்; அத்தனையும் களைய கச்சைக்கட்டி கிளம்புவது தேவையற்ற அறிவீனம். அவன் சம்பந்தப்பட்ட எபிசோடுக்கு மிகப் பெரிய முற்றுப்புள்ளி வை.
கணவனிடம் மனம் விட்டு பேசு. அவர் உன்னிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டினால் அவற்றை திருத்திக் கொள். கணவனிடம் நீ எதிர்பார்ப்பதை கூறு. அவர் அவற்றை நிறைவேற்றட்டும். மகனுக்கு, சிறந்த அம்மாவாக மாறு. தாம்பத்யத்தில் ஈடுபாட்டை உன் கணவனுக்கு உருவாக்கு. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மாமியாருடனான உறவை மேம்படுத்து. தந்தையின் உடல் சுகவீனத்துக்கு நீ காரணம் என்கிற குற்ற உணர்விலிருந்து விடுபடு. கைவேலைகள் கற்றுக் கொள்வது போன்ற பயனுள்ள பொழுதுபோக்குகளை ஒரு போதும் கைவிடாதே. குண்டாக இருந்தால், உணவுக்கட்டுப்பாடு, நடைபயிற்சி மூலம், 'ஸ்லிம்' ஆகு. புதிய பிறவி, புதிய வாழ்க்கை, புதிய அவதாரம் எடுத்தது போல, முழு மாற்றத்துக்கு ஆயத்தப்படு. இறுதி வெற்றி உனதே!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.