
போலீஸ் வேடத்தில் விஜய்!
விஜய் நடித்து வரும், 59வது படத்திற்கு, அவர் முதன்முதலாக நடித்த, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய, நன்றி படத்தின் தலைப்பை வைப்பது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது. இப்படத்தில், ஜூனியர் விஜயகாந்தாக நடித்திருந்தார் விஜய். தற்போது, போலீஸ் வேடத்தில் விஜய் நடிக்கயிருக்கும் படம், சத்ரியன் பட பாணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில், இயக்குனர் மகேந்திரன், வில்லனாக நடிப்பதாக, செய்தி வெளியாகியுள்ளது.
— சினிமா பொன்னையா
இரும்பு மனிதன் பட்டத்துக்காக ஆர்யா பயிற்சி!
தன் ஆரோக்கியத்துக்கும், பாடி பிட்னஸ்க்கும், கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, தினமும் சைக்கிள் ஓட்டுவதை கடைபிடித்து வரும் ஆர்யா, இதை, தன் ரசிகர்களும் பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகிறார். மேலும், சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற சைக்கிள் பந்தயம் ஒன்றில், 300 கி.மீ., கடந்து பரிசு வென்ற ஆர்யா, அடுத்து, 'இரும்பு மனிதன்' பட்டத்தை வெல்வதற்காக, சைக்கிள் பயிற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
— சி.பொ.,
ஜீவா படத்திலும் முன்னணி நடிகைகள்!
சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி போன்ற நடிகர்கள் போல, ஜீவாவும் முன்னணி கதாநாயகிகள், தன் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வகையில், ஈ படத்திற்கு பின், திருநாள் படத்தில் நயன்தாராவுடன் நடித்திருப்பவர், கவலை வேண்டாம் படத்தில், நிக்கி கல்ராணி நடிக்க, இன்னொரு முக்கிய நாயகி வேடத்துக்கு, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார். ஏற்கனவே, தங்களது சூப்பர் குட் பிலிம்ஸ், விஜய்யை வைத்து தயாரித்த, ஜில்லா படத்தில் காஜல் நடித்தவர் என்பதால், ஜீவா கால்ஷீட்
கேட்டதும், மறு பேச்சின்றி கொடுத்து விட்டார்.
— சி.பொ.,
ரஜினி படத்தில் தீபிகா படுகோனே!
ரஜினியின், கோச்சடையான் படத்தில் நாயகியாக நடித்தவர், இந்தி நடிகை தீபிகா படுகோனே! அதன் பின், தமிழில் நடிக்காத அவரை, ரஜினியை வைத்து இயக்கும், எந்திரன் 2 படத்திற்காக மீண்டும் அழைத்து வருகிறார் சங்கர். தற்போது, அப்படத்தில் வில்லனாக நடிக்க, சில இந்தி கதாநாயகர்களிடம், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள ஷங்கர், தீபிகாவிடமும் பேசியுள்ளார். அதையடுத்து, இந்தியில், 'பிசி'யாக இருந்த போதும், ரஜினி படம் என்பதால், அவசியம் நடிப்பதாக உறுதி அளித்துள்ளார். ராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; ராஜா திசையில் கெட்டவனும் இல்லை.
— எலீசா
லிங்குசாமிக்கு கை கொடுப்பாரா விஷால்!
செல்லமே படத்தில் அறிமுகமான விஷாலுக்கு, சண்டக்கோழி படம் மூலம் கதாநாயகன் அந்தஸ்தை ஏறபடுத்தி கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. ஆனால், தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க, விஷாலை அவர் அழைத்த போது, அவர் பிடிகொடுக்கவில்லை. காரணம், உத்தம வில்லன் படத்திற்கு பின், 100 கோடி ரூபாய் கடனில் உள்ளார் லிங்குசாமி. அதனால், இந்நேரத்தில் அவர் தயாரித்து, இயக்கும் படத்தில் நடித்தால், படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்படும் என்று நழுவி வருகிறார் விஷால். இருப்பினும், அவரை விடாமல் துரத்தி வருகிறார் லிங்குசாமி.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
நவரச நடிகரை, சுள்ளானுடன் நடித்த படம் பேச வைத்தபோதும், புதிய படவாய்ப்புகள் இல்லாமல் போராடி வந்தவர், தற்போது, ஒரு படத்தை கைப்பற்றி விட்டார். ஆனால், அந்த படத்தில் நடிகர் கேட்ட சம்பளத்திற்கு ஒத்துக் கொள்ளாததால், பேரம் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில், அந்த வாய்ப்பையும் கைப்பற்ற, வேறு சில நடிகர்கள் போட்டி கோதாவில் இறங்கியுள்ளதால், விட்டால் அதையும் அபகரித்துக் கொள்வர் என்கிற பயத்தில், பேரம் பேசுவதை நிறுத்தி, அப்படத்தில் ஒப்பந்தமாகி விட்டார் நவரசம்.
தளபதி நடிகரைப் போலவே, சண்டக்கோழி நடிகரும், நலத்திட்ட உதவிகளை செய்து வருவதால், திரைக்குப்பின், அவர்களுக்கிடையே புதிய போட்டி உருவாகியிருக்கிறது. குறிப்பாக, தன் பிறந்த நாளன்று ஏதாவது ஒரு அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், மோதிரம் அணிவிக்கும் தளபதி நடிகரின் திட்டத்தை சமீபத்தில், சண்டக்கோழியும் காப்பியடித்திருப்பது தளபதியை இன்னும், டென்ஷனாக்கி உள்ளது.
சினி துளிகள்!
* விஜயின், புலி இன்னும் திரைக்கு வராதபோதும், அட்லி இயக்கத்தில், அவர் நடிக்கும் படம், 50 சதவீதம் முடிந்து விட்டது.
* ஜெயம் ரவி, லட்சுமி மேனன் இணைந்துள்ள படத்துக்கு, மிருதன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட கார்த்திக்கின், அமரன் 2 படப்பிடிப்பு, இன்னும் துவங்க வில்லை.
அவ்ளோதான்!

