PUBLISHED ON : ஜன 31, 2016
குற்றப்பரம்பரை கதையை படமாக்கும் பாலா!
பாரதிராஜா பலமுறை இயக்க முயற்சி எடுத்து, பின் கைவிடப்பட்ட, குற்றப்பரம்பரை கதையை, தற்போது, படமாக்க, களமிறங்கியுள்ளார் பாலா. இப்படத்தில், நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால், அத்தனை கதாபாத்திரங்களிலுமே, பிரபல நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளவர், அரவிந்த்சாமி, விஷால், ராணா, அதர்வா, மனீஷா கொய்ராலா மற்றும் அனுஷ்கா போன்றோரை அப்படத்தில் நடிக்க வைக்கிறார். இதில், மனீஷா கொய்ராலா முதிய, 'கெட்டப்'பில் நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா
நடிகரான சிற்பி!
இசையமைப்பாளர்கள் விஜய் ஆன்டனி மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் இருவரும், கதாநாயகர்களாகி விட்டதையடுத்து, இப்போது, நாட்டாமை மற்றும் உள்ளத்தை அள்ளித்தா உட்பட பல படங்களுக்கு இசையமைத்த சிற்பியும் நடிகராகியிருக்கிறார்.
பசங்க ௨ படத்தில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், தற்போது, தான் முழுநேர நடிகராகியிருப்பதாக செய்தி வெளியிட்டு, தன் அபிமான இயக்குனர்களிடம் நடிக்க, வாய்ப்பு கேட்டு வருகிறார்.
— சி.பொ.,
மீண்டும் மதுமிதா!
குடைக்குள் மழை மற்றும் இங்கிலீஸ்காரன் உட்பட பல படங்களில் நடித்தவர் மதுமிதா. சரியான பட வாய்ப்புகள் இல்லாததால், திருமணம் செய்து செட்டிலானார். பின், சின்னத்திரைகளில் நடித்து வந்தவர், தற்போது, புத்தன் இயேசு காந்தி என்ற படத்தில், புரட்சி பெண்ணாக நடிக்கிறார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசைப்படும் மதுமிதா, 'ஓரளவு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக இருந்தாலும் நடிப்பேன்...' என்று தன் மாஜி கதாநாயகர்களை சந்தித்து, சிபாரிசு கோரி வருகிறார். காணக் கிடைத்தது, கார்த்திகை பிறை போல!
— எலீசா
கமலுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்!
கடந்த, 27 ஆண்டுகளுக்கு முன், மலையாளத்தில் கமல் நடித்த படம், சாணக்கியன்; இப்படத்தை, ராஜீவ்குமார் இயக்கியிருந்தார். அவர், மீண்டும் கமலை வைத்து, தமிழ் மற்றும் மலையாளத்தில், ஒரு படத்தை இயக்குகிறார். அப்படத்தில், கமலின் மகளான ஸ்ருதிஹாசனும் ஒரு வேடத்தில் நடிக்கிறார். சிறிய அளவிலான கதாபாத்திரம் என்ற போதும், தன் தந்தையுடன் இணைந்து நடிக்க, சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாலேயே, அப்படத்தில் நடிக்க, சம்மதித்திருப்பதாக கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன். அதிலே இது புதுமை; அவள் செய்து வைத்த புதுமை!
— எலீசா
தேசிய விருது இயக்குனர்களின் படங்களில் அதர்வா!
பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான அதர்வா, அதையடுத்து, பாலா இயக்கத்தில், தேசிய விருது பெற்ற, பரதேசி, சற்குணம் இயக்கத்தில், சண்டிவீரன் படங்களில் நடித்தவர், அடுத்தபடியாக, அங்காடித்தெரு படத்தை இயக்கிய வசந்தபாலன் இயக்கத்திலும் நடிக்கிறார். மேலும், தனுஷ், விஷால் மற்றும் ஆர்யா பாணியில், ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ள அதர்வா, இனிமேல் தான் நடிக்கும் முக்கியமான படங்களை, தன் கம்பெனி மூலமே தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
அம்மா கணக்கு படத்தில் அமலா பால்!
திருமணத்திற்கு பின், பசங்க ௨ படத்தில் நடித்த அமலாபால், தற்போது, தனுஷ் தயாரிக்கும், அம்மா கணக்கு என்ற படத்தில் நடிக்கிறார். இந்தியில், நில் பட்டே சன்னாட்டா என்ற பெயரில் வெளியான இப்படத்தின் ரீ மேக்கையும், இந்தியில் அப்படத்தை இயக்கிய, அஸ்வினி ஐயரே இயக்குகிறார். மேலும், அம்மா மகளுக்கிடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையப்படுத்திய இப்படத்தில், மாஜி கதாநாயகி ரேவதி அம்மாவாக நடிக்க, அவரது மகளாக அமலாபால் நடிக்கிறார். அதிர்ஷ்டம் ஆறாய்ப் பெருகுகிறது!
—எலீசா
கறுப்பு பூனை!
தனக்கு மார்க்கெட்டில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு காரணம், நடிகைகள் தான் என்பதை உணர்ந்து விட்டார் பிரியாணி நடிகர். அதனால், இதுவரை அம்மணிகள் பின்னாடியே சுற்றிய நடிகர், தற்போது, கதை விஷயத்தில் கவனத்தை திருப்பியுள்ளார். அத்துடன், இதுவரை நடிகைகளுக்கு பார்ட்டி கொடுத்து, கவிழ்த்து வந்தவர், இப்போது, சில கமர்ஷியல் இயக்குனர்களுக்கு பார்ட்டி வைத்து, தன் பக்கம் இழுத்து வருகிறார்.
மெரினா நடிகருடன் நடித்த படமே தனக்கு திருப்புமுனையாக அமைந்ததால், மீண்டும் அவருடன் நடிக்க முண்டியடித்து வரும் ஸ்ரீ நடிகை, அவர் ஏதாவது அவுட்டோர்களில் இருந்தால், அவரை சந்தித்து ரகசிய, 'மீட்டிங்' போட்டு வருகிறார். ஆனால், தற்போது மேல்தட்டு நடிகைகள் பக்கம் திரும்பியுள்ள நடிகர், அம்மணியின் மீது கடைக்கண் பார்வை வீச மறுக்கிறார்.
சினி துளிகள்!
* பேராண்மை படம் போன்று, ஒரு படத்தில் நடிக்க கதை கேட்டிருக்கிறார் ஆர்யா.
* தமிழில் தனக்கு இருந்த பரபரப்பு குறைந்து விட்டதால், தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் ஸ்ரீ திவ்யா.
* வேதாளம் படத்தை தொடர்ந்து, விஷ்ணுவர்தன் மற்றும் சிவா இயக்கும் படங்களில், ஒரே நேரத்தில் நடிக்கிறார் அஜித்.
அவ்ளோதான்!
