
விஜய்யுடன் இணையும் விக்ரம்!
விஜய் - அஜித் இணைந்து நடித்த படம், ராஜாவின் பார்வையிலே! அதன்பின், அவர்கள் இணைந்து நடிக்கவில்லை. அவர்களை இணைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கிய, மங்காத்தா பட இயக்குனர் வெங்கடேஷ், அதில் தோல்வியடைந்தார். ஆனால், இயக்குனர் சங்கரோ, விஜய் - அஜித்தை இணைத்து படமெடுப்பது நடக்காத காரியம் என்பது புரிந்து, தற்போது எடுத்து வரும், 2.0 படத்தை அடுத்து, விஜய் - விக்ரமை வைத்து பிரமாண்டமாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
- சினிமா பொன்னையா
கவர்ச்சிக்கொடி ஏற்றும் கீர்த்தி சுரேஷ்!
ரஜினி முருகன் படத்தை தொடர்ந்து, தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்த, நேனு சைலஜா படமும் வெற்றி பெற்றதால், ஒரே நேரத்தில், இரு மொழிகளிலும் பிசியான நடிகையாகி விட்டார். தமிழில், விஜய்யுடன் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது போல், தெலுங்கில் மகேஷ்பாபு, பவன் கல்யாண் நடிக்கும் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதனால், இதுவரை கிளாமருக்கு, 'நோ - என்ட்ரி' போட்டிருந்தவர், தற்போது, கதைக்கேற்ற கவர்ச்சி என்று சூழ்நிலைக்கேற்ப, ரூட்டை மாற்றியுள்ளார். கொடுக்கிறதைக் கொடுத்தால், குடம் கொண்டு தண்ணீருக்கு போவாள்! 
— எலீசா
ஜாக்கிசான் கொடுத்த பரிசு!
கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடித்த, அனேகன் படத்தில் நாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை அமைரா. இவர், இந்தியா - சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும், குங்பூ யோகா என்ற படத்தில், ஜாக்கிசானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்காக முறைப்படி கராத்தே பயிற்சி எடுத்துவரும், இவரது நடிப்பு ஆர்வத்தை வியந்து, அதை பாராட்டும் விதமாக, குளிருக்கு அணியும் உடையை, பரிசாக கொடுத்துள்ளார் ஜாக்கிசான். அந்த உடையை அணிந்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்களை, பாலிவுட்டில் வெளியிட்டுள்ளார் அமைரா. ஆற்றுதே, என்னைத் தேற்றுதே, அம்பலத்திலே என்னை ஏற்றுதே!
— எலீசா
விஜய் அவசர செய்தி!
தன் ரசிகர் மன்றத்தினர், சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால், மன்றத்தையே கலைத்தார் அஜித். தற்போது, விஜய்யின், 'மக்கள் இயக்கம்' சார்பாக, அவரது ரசிகர் மன்றத்தினர், வெவ்வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளனர். இத்தகவல், விஜய்யின் காதுக்கு வர, 'இந்த சட்டசபை தேர்தலில், மக்கள் இயக்கம் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை; அதனால், என் ரசிகர் மன்றத்தினர் யாரும், எக்கட்சிக்காகவும் ரசிகர் மன்றத்தை பயன்படுத்தக் கூடாது...' என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
தளபதி நடிகருக்கு ஜோடியானதும், தன் படக் கூலியை கண்டபடி உயர்த்தி விட்டார் ரஜினி முருகன் நடிகை. அத்துடன், தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடிப்பதிலும் உறுதியாக உள்ளார். இதன் காரணமாக, தன்னிடம் கால்ஷீட் கேட்டு வரும் பட்ஜெட் பட வாய்ப்புகளை நிராகரிக்கிறார்.
சமீப காலமாக அரசியலில் நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரயில் நடிகைக்கும் அந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தற்போது, நாட்டாமைக்கு உறுதுணையாக இருப்பவர், வரும் சட்டசபை தேர்தலில், தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட விருக்கிறார் அதற்காக, மக்கள் மன்றத்தில் என்னென்ன பேச வேண்டும் என்பது குறித்த விஷயங்களை, கட்சி அடிபொடிகளுடன் சேர்ந்து தயார் செய்து வருகிறார்.
சினி துளிகள்!
* நானும் ரவுடி தான் படத்தையடுத்து, தர்மதுரை படத்திலும் விஜயசேதுபதியின் அம்மாவாக நடிக்கிறார் ராதிகா.
* லண்டனில் குடியேறியுள்ள, இந்திரா பட நாயகி அனுஹாசன், ஹாக்கி என்ற படத்தில், கோட்சாக நடித்துள்ளார்.
* தன் இளைய மகன் யுவன் மயில்சாமியை, என்று தணியும் என்ற படத்தில், நாயகனாக அறிமுகம் செய்துள்ளார், காமெடி நடிகர் மயில்சாமி.
அவ்ளோதான்!

