
தயாரிப்பாளர்களை புலம்ப விடும் வடிவேலு!
மீண்டும் காமெடியனான போதும், தன் கெத்தை விடவில்லை வடிவேலு. 'காமெடியன் என்றாலும், படம் முழுக்க கதாநாயகனுடன் தான் பயணிக்க வேண்டும்...' என்று சொல்பவர், தனக்கும், தடபுடல் கவனிப்புகள் இருக்க வேண்டும் என்கிறார். இதனால், அவருக்கும் கதாநாயகனுக்குரிய வசதிகளை செய்து கொடுக்கின்றனர், தயாரிப்பாளர்கள். அதேசமயம், 'மீண்டும் காமெடியனாக இறங்கி வந்தபோதும், சம்பள விஷயத்தில் இன்னும் கதாநாயகனாகத்தான் இருக்கிறார்...' என்று புலம்புகின்றனர்.
— சினிமாபொன்னையா
மேகா ஆகாஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசுடன், ஒரு பக்க கதை என்ற படத்தில் அறிமுகமானவர், மேகா ஆகாஷ். இரண்டு ஆண்டுகளாகியும் அப்படம் வெளிவராத நிலையில், தற்போது, கவுதம்மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நாயகியாகி விட்டார். இதனால், மிகுந்த சந்தோஷத்தில் இருப்பவர், ஒரு பக்க கதை படத்தை அடுத்து, சில சிறிய படங்களில் நடிக்கயிருந்தவர், தற்போது அப்படங்களுக்கு வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார். அடுத்தபடியாக, மேல்தட்டு கதாநாயகர்களுடன் நடிக்க, தூது விட்டு வருகிறார். உருண்டு, புரண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும்!
— எலீசா
பட தயாரிப்பில் இறங்கும் மீனா!
தென்னிந்திய சினிமாவில், முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், மீனா. சமீபத்தில், விஜய் நடிப்பில் வெளியான, தெறி படத்தில், மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ள நிலையில், தன் நண்பர்கள் அதிகமாக உள்ள தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். தமிழில், கமல் மற்றும் தனுஷ், தெலுங்கில் மகேஷ்பாபு ஆகியோரை வைத்து படங்கள் தயாரிக்க, அவர்களிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார். காணி காணியாய் சம்பாதித்து, கோடி கோடியாய் செலவழிக்கிறது!
— எலீசா
மாதவன் மீதான அதிருப்தி நீங்கியது!
முன்பெல்லாம், முன்னணி இயக்குனர்கள் அல்லது தனக்கு அறிமுகமானவர்கள் கதை கூறினால் தான், காது கொடுத்து கேட்பார், மாதவன். ஆனால், இப்போது புது இயக்குனர்களே, 'ஹிட்' கொடுத்து வருவதால், தனக்கு பரிச்சயமில்லாதவர்களாக இருந்தாலும், அலட்சியப்படுத்தாமல் அப்பாய்ன்மென்ட் கொடுத்து, கதை கேட்கிறார். இதனால், 'மாதவன் புதியவர்களிடம் கதை கேட்பதில்லை...' என்று கோலிவுட்டில் நிலவி வந்த அதிருப்தி, தற்போது மாறத் துவங்கியுள்ளது.
— சினிமாபொன்னையா
கறுப்பு பூனை
அங்காடி நடிகையின் கைவசம், சில படங்கள் இருப்பதால், தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் எக்குத்தப்பாக சம்பளம் கேட்கிறார். அத்துடன், 'படப்பிடிப்பு தளத்தில் நவீன கேரவன், தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல் போன்ற வசதிகளை செய்து தருவதாக இருந்தால் மட்டும் என்னை தேடி வாருங்கள்; இல்லையேல், திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டேயிருங்கள்...' என்று பேசி, தயாரிப்பாளர்களை தலைசுற்ற வைக்கிறார்.
சரித்திர படத்தின், இரண்டாம் பாகத்தில் நடித்து வரும், பையா நடிகைக்கு, முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில், 'டம்மி'யான வேடம் தான். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, முதல் பாகத்தைப் போன்று, இரண்டாவது பாகத்திலும், தனக்கு முக்கியத்துவம் தருமாறு, மேற்படி இயக்குனரை நச்சரித்து வருவதோடு, அப்பட நாயகனின் உயிர்தோழியாகி, அவரிடமும், சிபாரிசு கேட்டு வருகிறார்.
சினி துளிகள்!
* புதுமுக நடிகர்களுடன் நடித்தால், மார்க்கெட் சரிந்து விடும் என்று அவர்களுடன் நடிக்க மறுத்து வருகிறார் தமன்னா.
* தமிழில், கற்றது தமிழ் படத்தில் தன்னை அறிமுகம் செய்த ராமின், தரமணி படத்தில், நட்புக்காக, சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஞ்சலி.
அவ்ளோதான்!

