PUBLISHED ON : ஜூலை 24, 2016

உடல் எடையை குறைக்கும் விஜய்!
அழகிய தமிழ் மகன் படத்திற்கு பின், விஜய், இரு வேடங்களில் நடித்து வரும் படம், எங்க வீட்டு பிள்ளை. இப்படத்தில், அண்ணன் - தம்பியாக, நல்லவன் - கெட்டவனாக இரு வேடங்களில் நடித்து வருகிறார். இதில், ஒரு வேடத்துக்காக, தன் உடல் எடையை, 10 கிலோ வரை குறைத்து, 'ஸ்லிம்'மாக நடிக்கிறார். அவ்வேடத்துக்கான காட்சிகள், படத்தின் மற்ற காட்சிகள் படமாக்கப்பட்ட பின், இறுதியில் படமாக்கப்பட உள்ளது.
— சினிமா பொன்னையா
'சாப்ட்'பேயாக நடிக்கும் ரெஜினா!
சிம்புவை வைத்து, கான் என்ற படத்தை இயக்கயிருந்த செல்வராகவன், அம்முயற்சியை கிடப்பில் போட்டு விட்டார். அதையடுத்து, எஸ்.ஜே.சூர்யாவை, நாயகனாக வைத்து, நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி வருபவர், முதன்முறையாக, இப்படத்தில், ரெஜினாவை பேய் வேடத்தில் நடிக்க வைத்துள்ளார். இதற்கு முன், த்ரிஷா மற்றும் ஹன்சிகா நடித்தது போன்று, அதிரடி பேயாக இல்லாமல், 'சாப்ட்' பேயாக நடிக்கிறார், ரெஜினா.
— எலீசா
மீண்டும் அஜித்துடன் இணையும் அனுஷ்கா!
தற்போது, பாகுபலி - 2 மற்றும் எஸ் - 3 படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, அதையடுத்து, பாகமதி என்ற தெலுங்கு சரித்திர படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், என்னை அறிந்தால் படத்தை அடுத்து, அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவும், அவரிடம் கால்ஷீட் கேட்டு வந்தனர். முதலில் இழுத்தடித்தவர், தற்போது, பாகமதி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பின், ஆகஸ்ட் மாதத்தில் அஜித் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். வரும் விதி எங்கிருந்தாலும் வரும்!
— எலீசா
சம்பளம் வாங்காமல் நடிக்கும் நடிகர்கள்!
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட, சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி, நிதி வசூலித்தனர். அதையடுத்து, இரண்டு படங்கள் தயாரிக்கப்பட்டு, அப்படங்களின் வசூலையும், இதற்கு பயன்படுத்த இருக்கின்றனர். அப்படி தயாராகும் ஒரு படத்தில், கார்த்தி - விஷால், மற்றொரு படத்தில் ஜெயம் ரவி - ஆர்யா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இவர்கள் யாரும், அப்படத்தில் நடிக்க சம்பளம் வாங்கவில்லை. அவர்களுக்கான சம்பளம் சங்கத்திற்கு கொடுக்கப்படுகிறது.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
படப்பிடிப்புக்கு சொன்னபடி செல்லாமல், டேக்கா கொடுத்து வருகிறார், வம்பு நடிகர். அவ்வகையில், மேனன் இயக்குனரின் படப்பிடிப்பு, துருக்கியில் நடந்த போது, நடிகர் செல்லாததால், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டமாகி விட்டது. இதனால், மேற்படி நடிகருக்கும், இயக்குனருக்குமிடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
நாக்கமுக்க இசையமைப்பாளர் நடித்த படங்கள் ஹிட்டாகி வருவதை அடுத்து, அவரது நடவடிக்கைகளும் மாறி வருகிறது. குறிப்பாக, சில பாடலாசிரியர்களை அவர் அவமதித்து வருகிறார். அதனால், 'இசையமைப்பாளராக இருந்த போது மதித்தவர், நடிகரான பின், எங்களை மதிப்பதில்லை...' என்று சொல்லி, அவரது கூடாரத்தை விட்டு வெளியேறுகின்றனர், பாடலாசிரியர்கள்.
புதிய படங்களை கைப்பற்றுவதில், அதிரடியாக செயல்பட்டு வருகிறார், டார்லிங் நடிகை. குறிப்பாக, முன்னணி கதாநாயகர்களை இயக்கும் இயக்குனர்களாக தேடிப்பிடித்து, படவேட்டை நடத்துபவர், அவர்களுடன், நள்ளிரவு விருந்துகளுக்கும் ஜோடி போட்டு செல்கிறார். இதனால், திரைக்கு பின், அம்மணிக்கு ரகசிய தோழர்கள் அதிகரித்துள்ளனர்.
சினி துளிகள்!
* கவுதம்மேனனின், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில், இரு வேடங்களில் நடிக்கிறார், தனுஷ்.
* பிச்சைக்காரன் படத்தை அடுத்து, சைத்தான் மற்றும் எமன் படங்களில் நடித்து வருகிறார், விஜய் ஆண்டனி.
* முழு நேர தமிழ் நடிகையாகியிருக்கும் நிக்கி கல்ராணி, மலையாள படங்களை தற்காலிகமாக தவிர்த்து வருகிறார்.
அவ்ளோதான்!
