PUBLISHED ON : அக் 09, 2016

ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப் படங்கள்!
இதுவரை, எந்தவொரு இந்திய படத்துக்கும், ஆஸ்கர் விருது கிடைத்ததில்லை. அத்துடன், இப்போட்டிக்கு, தமிழ் சினிமாவில், தெய்வமகன், நாயகன், அஞ்சலி, தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஜீன்ஸ் மற்றும் ஹேராம் போன்ற படங்கள் பரிந்துரைக்கப்பட்டும், விருது கிடைக்க வில்லை. இந்நிலையில், தற்போது, வெற்றிமாறன் இயக்கிய, விசாரணை படமும், ஆஸ்கர் விருது போட்டி பட பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இப்படத்தோடு, ஆஸ்கர் விருது போட்டிக்கு, ஒன்பது தமிழ்ப் படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
— சினிமா பொன்னையா
பயத்தில் ரித்திகா சிங்!
மாதவன் நடித்த, இறுதிச்சுற்று படத்தில், பாக்சராக நடித்தவர், பாக்சர் ரித்திகா சிங். அப்படத்திற்கு பின், ஆண்டவன் கட்டளை மற்றும் சிவலிங்கா படங்களிலும் நாயகியாக நடித்துள்ள அவர், 'பாக்சிங் செய்வது கூட, எளிதாக உள்ளது; நடிப்பு தான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. குறிப்பாக, 'எமோஷனலான' காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றாலே, பயமாகி விடுகிறது. அதனால், பரீட்சைக்கு படிப்பது போன்று, நடிப்பு பயிற்சி எடுத்து, படப்பிடிப்புக்கு செல்கிறேன்...' என்று கூறுகிறார். வந்த கூத்து ஆடித்தானே தீர வேண்டும்!
— எலீசா
மோகன்லாலை இயக்கும் பிருத்விராஜ்!
சமீபத்தில், நடிகர் ராஜ்கிரணை வைத்து, பவர்பாண்டி என்ற படத்தை, இயக்கப் போவதாக அறிவித்தார் தனுஷ். அவரை தொடர்ந்து, தற்போது, மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான ப்ருத்விராஜும், லூசிபர் என்ற படத்தை இயக்க உள்ளார். குடும்ப, 'சென்டிமென்ட்' கதையில் தயாராகும் இப்படத்தில், நாயகனாக நடிக்கிறார், மோகன்லால்.
— சி.பொ.,
சிவகார்த்திகேயனின், 'மாஸ்டர்' பிளான்!
'சிறு வயதில் இருந்தே, ரஜினியின் தீவிர ரசிகன்...' என்று சொல்லும் சிவகார்த்திகேயன், தற்போது நடித்துள்ள, ரெமோ படத்தில், ரஜினி மற்றும் அஜித் ஆகியோரின் படங்களில் இடம் பெறும் வசனங்களை பேசி, அவர்களது ரசிகன் போலவே நடித்துள்ளார். அதை, 'ட்ரெய்லரில்' வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தியுள்ள சிவகார்த்திகேயன், ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களை, ஒட்டு மொத்தமாக, ரெமோ படம் ஓடும் தியேட்டர்களுக்கு இழுக்கவே, இந்த, 'மாஸ்டர்' பிளானை போட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
சில படங்களில், உலக நடிகர்களையே திரும்பிப் பார்க்கும் வகையில், உடலை வருத்தி நடித்து, தன் திறமையை நிரூபித்த சீயான் நடிகருக்கு, தற்போது, திருப்திகரமான கதைகளே கிடைப்பதில்லை. அதனால், தன்னை சந்திக்க வரும் இயக்குனரிடம், தான் பார்த்து, ரசித்த, ஆங்கில படங்களின், சி.டி.,களை கொடுத்து, 'இதைப் பார்த்து, வித்தியாசமான கோணத்தில், 'ஸ்கிரிப்ட்' செய்யுங்கள்...' என்று கூறி வருகிறார்.
காட்டுவாசி படத்தில் நடித்து வரும், 'பிக்கப்' நடிகர், தான் எந்த படத்தில் நடித்தாலும், அப்படங்களின் நாயகிகளுக்கு, பிரியாணி விருந்து கொடுத்து, உபசரிப்பது வழக்கம்.அதே போன்று, காட்டுவாசி பட நாயகியை, அழைத்த போது, மறுத்து விட்டார், நடிகை. 'பிரியாணியில் ஆரம்பிக்கும் விருந்துக்கு பின், நடிகர், நெருக்கத்தை அதிகப்படுத்தி விடுவார்...' என்று, சில அனுபவ நடிகைகள் கூறியதை அடுத்து, முன் கூட்டியே, உஷராகி விட்டார், மெட்ராஸ் நடிகை.
சினி துளிகள்
* கடம்பன் படத்தில், பழங்குடி பெண்ணாக நடித்து வருகிறார், கேத்ரின் தெரசா.
* விக்ரம் நடிக்கயிருக்கும், சாமி படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த ஆண்டு துவங்கயிருக்கிறது.
* சதுரங்கவேட்டை - 2 படத்தில், நாயகனாக நடிக்கிறார் அரவிந்த்சாமி.
* சென்னையில், 18 கோடி ரூபாய் செலவில், நவீன, 'ரெக்கார்டிங்' தியேட்டர் கட்டியுள்ளார், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
* குத்துப்பாட்டுக்கு ஆட மறுக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவ்ளோதான்!
