PUBLISHED ON : அக் 23, 2016

அனல் பறக்கும் பைரவா விஜய்!
தன் படங்களில், 'பஞ்ச்' டயலாக் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தவர், விஜய். இதனால், அவரது சில படங்களுக்கு, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, 'பஞ்ச்' டயலாக் பேசுவதை, சமீபத்திய படங்களில் குறைத்து விட்டார். என்றாலும், ரசிகர்களுக்கு அது பெருங்குறையாகி விட்டதால், தற்போது நடித்துள்ள, பைரவா படத்தில், 'பஞ்ச்' டயலாக்குகளுக்கு இணையாக, அனல் பறக்கும் வசனங்களை பேசியிருக்கிறார் விஜய். கிட்டத்தட்ட, அதுவும், 'பஞ்ச்' டயலாக் போன்று தான் இருக்கும் என்கின்றனர்.
— சினிமா பொன்னையா
ரஜினியை சந்திக்க விரும்பும், 'பேட்மிண்டன்' வி.பி.சிந்து!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, சென்னை வந்து, ரஜினியை சந்தித்ததுடன், 'நான் ரஜினியின் தீவிர ரசிகன்...' என்று சொன்னார். அவரைத் தொடர்ந்து, ரியோ ஒலிம்பிக்கில், 'பேட்மிண்டன்' விளையாட்டில், இந்தியாவுக்கு, வெள்ளி பதக்கம் வாங்கி தந்த, வி.பி.சிந்துவும், தற்போது ரஜினியை சந்திக்க, ஆசைப்படுவதாக தெரிவித்தவர், தான் வெள்ளி பதக்கம் பெற்றதுக்கு, ரஜினி, 'டுவிட்டரில்' வாழ்த்து தெரிவித்ததையும், பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.
— எலீசா
பிரகாஷ்ராஜ்க்கு திருப்தி கொடுத்த படம்!
பிரியதர்ஷன் இயக்கிய, காஞ்சிவரம் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், தற்போது, அவர் இயக்கியுள்ள, சில சமயங்களில் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். 'எய்ட்ஸ் நோயாளிகள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள, இப்படம் குறித்து, 'இதுவரை, நான் நடித்த, 300 படங்களில், எனக்கு திருப்தி கொடுத்த படம்; அதோடு, 'இப்படம், உலக அரங்கில், தமிழ் சினிமாவின், தரத்தை உயர்த்திக் காட்டக் கூடிய, தகுதியான படைப்பு...' என்கிறார் பிரகாஷ்ராஜ்.
— சி.பொ.,
அதிர்ச்சியில் த்ரிஷா!
தன் சம காலத்து நடிகைகளான, அனுஷ்கா மற்றும் நயன்தாரா இருவரும், கதையின் நாயகிகளாக நடித்து, ஜெயித்து விட்ட நிலையில், தான் நடித்த, நாயகி படம் தோல்வியடைந்து விட்டதால், அதிர்ச்சியடைந்துள்ளார், த்ரிஷா. அதனால், தொடர்ந்து, இந்த, 'ரிஸ்க்'கை எடுக்க வேண்டாமென்று, தற்போது, முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளுக்கு, கல்லெறிந்து வருபவர், இனிமேல், கதாநாயகி, கதையின் நாயகி என்ற, இரு வழிப்பாதையில் பயணிக்கப் போவதாக கூறுகிறார். வகை அறிந்து செய்தால், வாதம் பலிக்கும்!
— எலீசா
'டேக்வாண்டோ' தூதுவரான நீதுசந்திரா
யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை மற்றும் ஆதிபகவன் என, பல படங்களில் நடித்தவர், நீது சந்திரா. பீகாரைச் சேர்ந்த இவர், சினிமாவில் நடிகையாவதற்கு முன், கொரியாவின், டேக்வாண்டோ கலையில், 'பிளாக் பெல்ட்' வாங்கியவர். அதன் காரணமாக, தற்போது, கொரியா, 'டேக்வாண்டோ' கூட்டமைப்பு, இந்தியாவுக்கான, 'டேக்வாண்டோ' தூதுவராக இவரை நியமித்துள்ளது.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
வாரிசு நடிகைக்கு, தந்தை மொழியான தமிழ், தாய்மொழியான, இந்தி இரண்டிலுமே, தற்போது, பெரிதாக வரவேற்பு இல்லை. அதனால், ஆந்திரா சினிமாவில், ஐக்கியமாகி விட்ட நடிகை, 'இனிமேல், தெலுங்கு மொழிக்கு மட்டும் தான் முதலிடம் கொடுக்கப் போகிறேன்; அதோடு, மிரட்டல்களுக்கு அஞ்சாமல், கதைக்கு தேவையான கவர்ச்சியை வெளிப்படுத்தி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறேன்...' என்று, அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
யானை படத்தின் மூலம், தமிழுக்கு வந்த சேச்சி நடிகையை, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒதுக்கி வைத்து, வேறொரு நடிகையை நடிக்க வைக்க, இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தியது அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார், நடிகை. இரண்டாம் பாகத்திலும், தான் நடித்து விட வேண்டும் என்று, அப்படத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் உள்ள முக்கியஸ்தர்களிடம், சிபாரிசு கோரி வருகிறார், சேச்சி நடிகை.
சினி துளிகள்
* சபாஷ் நாயுடு படத்தில், தனக்கான காட்சிகளில் நடித்து முடித்து விட்டார் ஸ்ருதிஹாசன்
* 'சிங்கிள் கதாநாயகி கதைகளில் மட்டுமே நடிப்பேன்...' என்று கூறி வருகிறார், லட்சுமிமேனன்.
* இரண்டு பிள்ளைகளுக்கு, அம்மாவான நடிகை ஜெனிலியா, மீண்டும் சினிமாவில், 'என்ட்ரி' ஆகியுள்ளார்.
அவ்ளோதான்!
