
திருநங்கை வேடத்தில் விஜயசேதுபதி!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரசாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட, பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களில், இருமுகன் படத்தில் திருநங்கையாக நடித்தார், விக்ரம். அவரைத் தொடர்ந்து, தற்போது, விஜயசேதுபதியும், சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில், திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக, சில திருநங்கைகளை ஸ்பாட்டுக்கு வரவைத்து அவர்களின் நடை, உடை பாவனைகளை உள்வாங்கி, நடிக்கிறார், விஜயசேதுபதி!
- சினிமா பொன்னையா
மாறுபட்ட கெட்டப்பில் ஸ்ரேயா!
அரவிந்த்சாமி நடிக்கும், நரகாசுரன் படத்தில் நடிக்கும், ஸ்ரேயா, இனி, தனக்கு, கதாநாயகி வேடங்கள் கிடைப்பது அரிது என்பதால், தன் ரூட்டை மாற்றியுள்ளார், வீர போக வசந்த ராயலு என்ற தெலுங்கு படத்தில், ஆண்களை போன்று தன் தலைமுடியை, கத்தரித்து, ஆக் ஷன் அவதாரம் எடுத்துள்ளார். மேலும், மலையாளத்தில், பிரகாசம் பிரதுன்ன பெண்குட்டி என்ற படத்திலும், இதுவரை நடிக்காத மாறுபட்ட வேடத்தில் நடிப்பதாக சொல்கிறார். திக்குக் கெட்டு திசை மாறி போகிறது!
— எலீசா.
மலையாள சினிமாவை குற்றம் சாட்டும் பாவனா!
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மலையாள நடிகை, பாவனா, 'மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; அதோடு, பெண்களுக்கு சரியான கதாபாத்திரங்கள் தருவதில்ல. முன்னணி நடிகையான பின்னும், சம்பளத்தை அதிகப்படுத்துவதில்லை...' என்று புகார் கூறி வருகிறார். மேலும், 'பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் இறங்கிச் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர்...'என்கிறார்.
கண் பறிகொடுத்துக் கலங்கினாற் போல!
— எலீசா.
வில்லி வேடத்தில் வரலட்சுமி!
விஷாலுடன், வரலட்சுமி இணைந்து நடித்த, மதகஜராஜா படம் வெளியாகாமல் கிடப்பில் கிடக்கும் நிலையில், தற்போது, சண்டக்கோழி - 2 படத்தில், மீண்டும் விஷாலுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில், கதைப்படி விஷாலின் முறைப்பெண் என்றாலும், ஒரு கட்டத்தில் அவருக்கே வில்லியாக மாறுகிறார். பாலாவின், தாரைத்தப்பட்டை படத்தில், வரலட்சுமி நடித்த அதிரடியான வேடத்தைப் பார்த்து, இந்த வில்லி வேடத்தை அவருக்கு கொடுத்துள்ளார், இயக்குனர் லிங்குசாமி. போனதும், வந்ததும் பொன்னம்பலம்; திரும்பி வந்ததும் திருவம்பலம்!
— எலீசா.
நிக்கி கல்ராணியின் டாக்டர் கனவு!
நடிகை நிக்கி கல்ராணி, டாக்டராக வேண்டும் என்ற ஆசையில், அறிவியல் பாடம் எடுத்து படித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக, சினிமா நடிகையாகி விட்டதால், அவரது டாக்டர் கனவு நிறைவேறவில்லை. இந்நிலையில், நெருப்புடா படத்தில், மருத்துவ கல்லுாரி மாணவி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, மகிழ்ச்சி அடைந்து, தன்னை நிஜ டாக்டராகவே நினைத்து, அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர், 'இந்த வேடம், என் கேரியரில் மறக்க முடியாததாக அமைந்து விட்டது...' என்கிறார். காணக் கிடைத்தது, கார்த்திகை பிறைப் போல!
— எலீசா.
வடிவேலு படத்தில், 'கிராபிக்ஸ்' தொழில்நுட்பம்!
சிம்புதேவன் இயக்கத்தில், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில், கதாநாயகனாக நடித்த வடிவேலு, தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். ஆனால், அவரது உடல், 'வெயிட்' போட்டிருப்பதால், அவரை, 'ஸ்லிம்'மாக காட்டுவதற்காக, 'கிராபிக்ஸ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். அத்துடன், ஒரு பாடல் காட்சியில், கதாநாயகி பார்வதி ஓமனக்குட்டனும் இணைந்து, இன்றைய இளவட்ட நடிகர்களுக்கு இணையாக, ஸ்டைலிஷாக நடனமாடவும், வடிவேலுவுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.
- சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* சினேகமான நடிகை, குழந்தை பெற்ற கையோடு, அரிதாரம் பூச வந்து விட்டார். திருமணத்திற்கு பின், செக் போஸ்ட் வைத்து தான் பழகுவார் என்று, அவரது அபிமானிகள் அவரை விட்டு விலகி நிற்க, இவ்விஷயம் நடிகையின் காதுகளை எட்டியதை அடுத்து, 'நான் எப்போதுமே, 'ப்ரி பேர்டு' தான்; என்னை சுற்றி எந்த செக் போஸ்டும் கிடையாது...' என்று, அபிமானிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பி, நட்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
* பையா நடிகை, துக்கடா டிரஸ் அணிந்து நடிக்க தயாரான போதும், படங்கள் இல்லை. இதனால், படத்துக்குப் படம் தன் படக்கூலியை உயர்த்திவந்தவர், தற்போது, படக்கூலியை குறைத்திருப்பதாக சொல்லி, தீவிர பட வேட்டையை முடுக்கி விட்டுள்ளார்.
சினி துளிகள்!
* சிவகார்த்திகேயன் நடித்துள்ள, வேலைக்காரன் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், சினேகா.
* ஸ்கெட்ச் படத்தில், ஹோம்லியான வேடத்தில் நடித்துள்ளார், தமன்னா.
அவ்ளோதான்!