
நடிகரானார் ரசூல் பூக்குட்டி!
ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்திற்கு, ஒலிப்பதிவாளராக பணியாற்றி, ஆஸ்கர் விருது பெற்றவர் ரசூல் பூக்குட்டி. தமிழில், எந்திரன், கோச்சடையான் மற்றும் ரெமோ என, பல படங்களில், ஒலிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இவர், தற்போது, ஒலிப்பதிவு கலைஞரை பற்றி உருவாகும், ஒரு கதை சொல்லட்டுமா என்ற படத்தில், கதையின் நாயகனாக நடித்து வருகிறார். கண் பார்வை இல்லாதவர்களுக்காக தயாராகும் இப்படம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில், தி சவுண்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
—சினிமா பொன்னையா
கொடி பிடிக்கும் ரம்யா நம்பீசன்!
மலையாள நடிகை பாவனா, பாலியல் கொடுமைக்கு ஆளானதை அடுத்து, மலையாள நடிகையர் ஒன்று திரண்டு, 'டபிள்யு.சி.சி., அண்ட் கோ' என்ற பெயரில், பெண்களுக்கான பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதில், நடிகையர் மஞ்சுவாரியார், ரம்யா நம்பீசன், பார்வதி, ரீமா கல்லிங்கல் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்நிலையில், திரையுலகில், பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, மலையாள நடிகர் சங்கமான, 'அம்மா' அமைப்பில், நடிகைகளுக்கும் பாதி பொறுப்பு வழங்க வேண்டும் என்று, நடிகை ரம்யா நம்பீசன் தற்போது கொடி பிடித்துள்ளார். இதனால், நடிகர் சங்கத்தில் பதற்றம் நிலவி வருகிறது. ஆகாச வல்லிடி அதிர இடித்தது.
— எலீசா
மனசைத் தொட ஆசைப்படும் தமன்னா!
தமன்னா என்றாலே, கவர்ச்சி நடிகை என்றாகி விட்டது. ஆனால், அவரோ சமீபகாலமாக, கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து வருவதோடு, 'மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசை தற்போது, எனக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், மனதை தொடும் வேடங்களில் நடிக்க சான்ஸ் கொடுத்தால், குறைவான சம்பளத்தில், நிறைவான நடிப்பை கொடுக்க தயாராக இருக்கிறேன்...' என, சில மேல் தட்டு இயக்குனர்களின் காது கடித்து வருகிறார். இட்டபடியே ஒழிய, ஆசைப்பட்டு பலன் இல்லை!
—எலீசா
பஞ்ச் டயலாக் பேசும் சந்தானம்!
காமெடியனாக இருந்து ஹீரோவான சந்தானம், தன்னை சினிமாவுக்கு அழைத்து வந்த சிம்புவை, தான் நடித்துள்ள, சக்க போடு போடு ராஜா, படத்தில் இசையமைப்பாளராக்கி இருக்கிறார். அத்துடன், எப்போதும் தான் நடிக்கும் படங்களில் தனக்கான, 'பஞ்ச்' டயலாக்குகளை எழுதி, பேசும் வழக்கம் கொண்ட சிம்பு, இந்த படத்தில், தன் ஸ்டைலில் சில, 'பஞ்ச்' டயலாக்குகளை எழுதிக் கொடுத்து, சந்தானத்தை பேச வைத்திருக்கிறார். ஆக, இந்த படத்தில், சந்தானமும், பஞ்ச் டயலாக் பேசும் அதிரடி ஹீரோவாகியிருக்கிறார்.
—சினிமா பொன்னையா
கறுப்பு பூனை
பூ நடிகையின் கணவர் இயக்க இருந்த பிரமாண்ட சரித்திர படத்தில் இருந்து, ஹாசன் நடிகை விலகியதால், அந்த படமே நின்று விட்டது. இதனால், கடுப்பான பூ நடிகை, வாரிசு நடிகையின் மார்க்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, அவர் புதிய படங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தும் கம்பெனிகளுக்கு போன் செய்து, அவரைப் பற்றி போட்டுக் கொடுத்து, அவருக்கு படம் கிடைக்க விடாமல் செய்து வருகிறார். இதனால், பூ நடிகைக்கும், வாரிசு நடிகைக்குமிடையே திரைக்குப் பின், வாய்ச்சண்டை தகராறு தீவிரம் அடைந்துள்ளது.
ஜெயமான நடிகர் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்ததால், அவரது சம்பளத்தில் கை வைத்து விட்டனர், தயாரிப்பாளர்கள். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகர், தனக்கு அவசர கதியில் ஒரு சூப்பர் ஹிட் தேவைப்படுவதால், அடுத்தபடியாக தான் நடிக்கும் படங்களில், கூடுதல் கவனம் செலுத்துவதோடு, தன் சார்பிலும், பப்ளிசிட்டிகளை முடுக்கி, படத்தை ஓட வைக்க களமிறங்கியுள்ளார்.
சினி துளிகள்!
* சபாஷ் நாயுடு படத்தில், கமலின் மகளாகவே நடிக்கிறார், ஸ்ருதிஹாசன்.
* ஜெயம் ரவி நடித்து வரும், டிக் டிக் டிக் படம், திகில் கதையில் உருவாகிறது.
* ஜி.வி.பிரகாஷ், நடிகை ஆனந்தி நடித்த, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்குகிறது.
அவ்ளோதான்!

