PUBLISHED ON : ஜூன் 24, 2018

'கெட்டப்'பை மாற்றும் ரஜினிகாந்த்!
கபாலி மற்றும் காலா என்று கேங்ஸ்டர் கதைகளாக நடித்து வந்த ரஜினிகாந்த், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும், தன், 165வது படத்தில் கல்லுாரி பேராசிரியராக இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் வேடத்தில் நடிக்கிறார். குறிப்பாக, கல்லுாரி காலம், வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்கும் ஒரு அழுத்தமான, பொறுப்பான வேடத்தில் நடிக்கிறார். அதோடு நரைமுடி மற்றும் தாடியில் இருந்து விடுபட்டு இளமையான, 'கெட்டப்'புக்கும் மாறுகிறார் ரஜினி.
— சினிமா பொன்னையா
கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் இனியா!
நடிகை இனியா, மியா என்ற நடன பெண்ணின் வாழ்க்கையை, எட்டு நிமிட வீடியோ ஆல்பமாக தயாரித்துள்ளார். இந்த ஆல்பத்தில், மியா என்ற கேரக்டரிலும் நடித்துள்ள இனியா, இந்த ஆல்பத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, 10 கேன்சர் நோயாளகளுக்கு உதவி செய்ய திட்டமிட்டுள்ளார்.
— எலீசா
இயக்குனரான நந்திதா தாஸ்!
தமிழில், கன்னத்தில் முத்தமிட்டால், அழகி மற்றும் நீர்ப்பறவை என சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நந்திதா தாஸ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, மக்கள் அடைந்த துயரத்தை மையமாக வைத்து, மன்ட்டோ என்ற எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து, மன்ட்டோ என்ற பெயரிலேயே ஒரு படம் இயக்கியுள்ளார் நந்திதா தாஸ். இந்த படத்தை, சிட்னி திரைப்பட விழாவில் திரையிட்ட நந்திதா தாஸ், இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் வெளியிட போவதாக கூறுகிறார். அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!
— எலீசா
தற்காப்பு கலையில் கலக்கும் நிவேதா பெத்துராஜ்!
தாய்லாந்தில் படித்து வந்தபோது, இரண்டு ஆண்டுகளாக தற்காப்பு கலை பயிற்சி எடுத்ததாக சொல்லும் நிவேதா பெத்துராஜ், 'அதன் காரணமாக, என்னையும் அறியாமல் மனதளவில் துணிச்சல் அதிகமாகவே உள்ளது என்றும், தற்காப்பு கலை பயிற்சி எடுத்துக் கொண்டால், பயந்த சுபாவம் கொண்ட பெண்களுக்கு கூட தைரியம் தானாக வந்து விடும். அதோடு, தற்காப்பு கலை பயின்ற பெண்களை, தவறான நோக்கத்துடன் ஆண்கள் நெருங்கவே அச்சப்படுவர். அதனால், ஒவ்வொரு பெண்ணும் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டும்...' என்கிறார். அடிப்பானேன், பிடிப்பானேன்; அடக்குகிற வழியில் அடக்குவோம்!
— எலீசா
இயக்குனர் ஷங்கருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை கதையில் உருவாகியுள்ள, டிராபிக் ராமசாமி படத்தில், கதையின் நாயகனாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். ஆனால், இந்த கதையை ரஜினியை வைத்து படமாக்க முன்பே திட்டமிட்டிருந்தாராம் இயக்குனர் ஷங்கர். அதுகுறித்து அவர் கூறுகையில், 'டிராபிக் ராமசாமி, என்னை பாதித்த ஒரு மனிதர். அவருக்குள் ஒரு ரியல் ஹீரோயிசம் உண்டு. கத்தி எடுக்காத இந்தியனான அவரது கதையில், ரஜினி சாரை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது, எஸ்.ஏ.சி., நடித்ததில் மகிழ்ச்சி தான். என்றாலும், என்னால் அந்த கதையை இயக்க முடியவில்லையே என்கிறபோது ஏமாற்றமாகவே உள்ளது...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
தளபதி நடிகருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள அந்த வாரிசு நடிகையின் கெடுபிடி அதிகரித்து விட்டது. இயக்குனர் கதை சொல்லி முடித்ததும், தனக்கான காட்சிகளில் திருத்தம் சொல்கிறாராம். குறிப்பாக, ஹீரோக்களுக்கு இணையாக தன் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும், என்கிறார். நடிகையின் இந்த திடீர் கெடுபிடி, இயக்குனர்களுக்கு, அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தன் மூன்றாவது காதலரை பெரிய இயக்குனராக்கி விட வேண்டும் என்று முழுவீச்சில் செயல்படுகிறார் தாரா நடிகை. அதனால், ஏற்கனவே ஒரு மூன்றெழுத்து முன்னணி நடிகரிடத்தில் அவருக்கு கால்ஷீட் வாங்கிக்கொடுத்த தாரா, தற்போது காதலர் இயக்கத்தில், தளபதி நடிகரை நடிக்க வைக்கவும் சீரியசாக சிபாரிசு செய்து கொண்டிருக்கிறார்.
சினி துளிகள்!
* கோலமாவு கோகிலா, தனக்கு பெரிய பெயர் வாங்கித் தரும் என்று எதிர்பார்க்கிறார் நயன்தாரா.
* கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ராதிகாவின் மகள் ரேயானுக்கு, ஜூன் 7ம் தேதி, ஆண் குழந்தை பிறந்துள்ளது. பாட்டியாகி விட்டார் ராதிகா.
* நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் நாயகனாக நடித்துள்ள, தாதா 87 என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அவளோதான்!
