PUBLISHED ON : மார் 13, 2011

நார்வேயில் தமிழ் திரைப்பட விழா!
சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கு, விருது வழங்கும் விழா, நார்வேயில் வரும் ஏப்ரல் மாதம் நடக்கிறது. இந்தப் போட்டிக்காக, அங்காடித் தெரு, களவாணி, மதராசப்பட்டினம், மைனா, பாஸ் என்ற பாஸ்கரன், விண்ணைத் தாண்டி வருவாயா, தா, பயணம், தென்மேற்கு பருவக்காற்று, என் சுவாசம், செங்கடல், எல்லாளன் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், பார்வையாளர்களின் அதிக ஓட்டுகளை பெறும் படம், சிறந்த படத்திற்கான விருது பெற இருக்கிறது.
-சினிமா பொன்னையா
இந்தியை தவிர்க்கும் காஜல் அகர்வால்!
அசினைத் தொடர்ந்து த்ரிஷா, இலியானா, ப்ரியாமணி என்று பலரும் இந்திக்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், காஜல் அகர்வாலுக்கோ, இந்தி சினிமா ஆசை துளியும் இல்லை. தேடிவந்த சில வாய்ப்புகளை கூட திருப்பி விட்டுள்ளார். 'என்னால் இந்த ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு கவர்ச்சி உடை தரிக்க முடியாது என்பதே இதற்கு காரணம்...' என்கிறார். கொட்டிக் கொட்டி அளந்தாலும், குறுணி பதக்காகுமா?
— எலீசா.
தமிழுக்கு, 'டப்' ஆகும் இந்திப் படம்!
உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட யுக்தா முகி, இந்தியில் படு கிளாமராக நடித்த படம், மேம்சாப்! காதலனே விபச்சார விடுதியில் விற்றுவிட, அங்கிருந்து தப்பித்து, அவனை பழி வாங்குவது போன்ற வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் யுக்தா முகி. இப்படம், தற்போது அரங்கேற்ற நாள் என்ற பெயரில், தமிழுக்கு, 'டப்'ஆக உள்ளது. பழைய கள்; புதிய மொந்தை!
— எலீசா.
அனன்யா செய்த சமையலுக்கு பரிசு!
பெரும்பாலான நடிகைகளுக்கு சாப்பிட மட்டுமே தெரியும். ஆனால், நடிகை அனன்யாவுக்கு நன்றாக சமைக்கவும் தெரியும். கேரளாவில், மாவட்ட அளவில் நடந்த ஒரு சமையல் போட்டியின் போது, மூன்று மணி நேரத்தில், 50 உணவு வகைகளை தயார் செய்து அசத்தியுள்ளார். இதை பாராட்டி, அவருக்கு பரிசு கூட கொடுத்துள்ளனர்.
இட்டுப் பேர் பெறு; வெட்டிப் பேர் பெறு!
— எலீசா.
மைனா படத்தை பார்த்து விட்டு, ஏ.ஆர்.முருகதாஸ், தான் தயாரிக்கும் படத்துக்கும், களவாணி இயக்குனர் சற்குணம் தன் புதிய படத்துக்கும் அமலா பாலை, 'புக்' பண்ணினர். ஆனால், அந்த நேரம் பார்த்து விக்ரமுடன் நடிக்க தெய்வ மகன் பட வாய்ப்பு கிடைக்க, முந்தைய படங்களுக்கு கொடுத்திருந்த அதே கால்ஷீட்டை இப்படத்துக்கு கொடுத்து விட்டார். இதனால், டென்ஷனான அக்கம்பெனிகள் அமலா கொடுத்த மாற்று கால்ஷீட்டை வாங்காமல், அவரையே தங்களது படத்திலிருந்து நீக்கி விட்டு, வேறு நடிகைகளை, 'புக்' பண்ணி விட்டனர். ஆக, ஒரு படத்துக்காக இரண்டு படங்களை இழந்துள்ளார் அமலா பால்.
அம்ரேஷுக்கு ஜோடி தமன்னா!
நானே என்னுள் இல்லை என்ற படத்தில் இசையமைத்து, ஹீரோவாகவும் நடித்தார் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ். அதைத் தொடர்ந்து, தமிழில், கலியுக காதலன் என்ற படத்தில் நடிக்கும் அவர், தமிழ், தெலுங்கில் உருவாகும் இன்னொரு படத்திலும் நடிக்கிறார். இப்படத்தில், அம்ரேஷுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, அனுஷ்காவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
— சி.பொ.,
த்ரிஷா அதிர்ச்சி!
அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, சமீரா ரெட்டி உள்ளிட்ட நடிகைகளின் பிரவேசத்தால், புதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இந்நிலையில், 'தொழிலதிபரை த்ரிஷா மணக்கிறார்...' என்று டுவிட்டரில் வெளியான செய்தியால், மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதை கண்டு கொள்ளாமல் விட்டால், சினிமாத் துறையினர் அதை நம்பி, தன்னை ஓரங்கட்டி விடுவர் என்று, ஒட்டுமொத்த சினிமா நண்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, தெளிவுபடுத்தி வருகிறார். மலை விழுங்கி அம்மை
யாருக்குக் கதவு சுண்டாங்கி!
— எலீசா.
வாகை சூடவா...படத்துக்காக ஒரு கோடி ரூபாயில் செட்!
களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அடுத்து, வாகை சூடவா என்ற படத்தை இயக்குகிறார். 1960களில் நடந்த கதையை படமாக்குவதோடு, அந்த கால கட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தும் வகையில், இப்படத்துக்காக அருப்புக்கோட்டையில் ஒரு செட் அமைத்துள்ளார். இந்த செட்டை உருவாக்க, ஒரு கோடி ரூபாய் செலவானது. படத்தின் பெரும்பகுதி காட்சிகளை, இந்த செட்டில்தான் படமாக்குகிறார்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!
