தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதைப்படிங்க முதல்ல....

இதைப்படிங்க முதல்ல....

இதைப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : செப் 16, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமிதாப்பச்சனை வரவேற்ற, ரஜினிகாந்த்!

இந்தி சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன், இதுவரை எந்த நேரடி தமிழ்ப்படத்திலும் நடித்ததில்லை. முதன்முறையாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கும், உயர்ந்த மனிதன் என்ற படத்தில் அவர் தமிழில் அறிமுகமாகிறார். தமிழ் மற்றும் இந்தியில் தயாராகும் இந்த படத்தில், அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா என இருவருமே நாயகர்களாக நடிக்கின்றனர். இந்த படத்தின், 'பர்ஸ்ட் லுக்'கை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், 'என் நண்பர், அமிதாப்பச்சன் தமிழ் படத்தில் நடிப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன்...' என்று தெரிவித்துள்ளார்.

— சினிமா பொன்னையா

அதிர்ச்சி கொடுக்கும் நடிகை!

தமிழில் மார்க்கெட்டை பிடிப்பதிலும், உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார், ரகுல்பிரீத் சிங். ஐதராபாத்தில் தான் நடத்தி வரும், 'ஜிம்'மில் காலை, மாலை என, இரு வேளையும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வருகிறார். அப்படி தான், உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகளை அவ்வப்போது இணைய பக்கத்தில் வெளியிட்டும், அவர், தன் அபிமான ஹீரோக்கள், இயக்குனர்களுக்கு அனுப்பியும், இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். காரணம் இன்றி காரியம் இல்லை!

— எலீசா

கீர்த்தி சுரேஷ் கொடுக்கும், 'ஓவர் ஆக்டிங்!'

நடிகையர் திலகம் படத்தில், சாவித்ரி வேடத்தில் நடித்த பின், 'பர்பாமென்ஸ்' நடிகையாகி விட்டார், கீர்த்தி சுரேஷ். அதேசமயம், அடுத்தபடியாக கதையின் நாயகியாக வேண்டும் என்பதற்காக, தற்போது நடிக்கும் படங்களில், அழுத்தமான காட்சிகளில் கூடுதல் அக்கறை காட்டுகிறார். இதனால், 'அதிக உணர்ச்சிவசப்படாமல், யதார்த்தமான நடிப்பை பதிவு செய்தாலே போதும்...' என்கின்றனர், இயக்குனர்கள். சிந்தாது இருந்தால், மங்காது இருக்கலாம்!

—எலீசா

பேய் ஆராய்ச்சியில் ஈடுபடும், நயன்தாரா!

த்ரிஷா, அனுஷ்கா மற்றும் ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகள் பேய் படங்களில் நடித்து வரும் நிலையில், நயன்தாராவோ, பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு கதையில் நடிக்கயிருக்கிறார். லட்சுமி மற்றும் மா போன்ற குறும் படங்களை இயக்கிய சர்ஜுன் என்பவர் இயக்கும் அப்படத்திற்காக, தற்போது, பேய் பங்களா செட் உருவாகி வருகிறது. இதில், கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டராக நடிக்கும் நயன்தாரா, தன் கெட்டப்பையும் முதன்முறையாக மாற்றி நடித்துள்ளார். சிலுக்கு சின்னம்மா, சிங்கார பொன்னம்மா!

— எலீசா

மம்மூட்டியிடம் நடிப்பு பயின்ற அஞ்சலி!

பேரன்பு படத்தில், மம்மூட்டியின் நடிப்பைப் பார்த்து மலைத்து விட்டதாக சொல்கிறார் அஞ்சலி. 'சின்னச்சின்ன அசைவுகளினாலும், பார்வையினாலும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்யலாம் என்பதை, அவரது நடிப்பில் கண்கூடாக பார்த்தேன்...' என்று கூறும் அஞ்சலி, 'அந்த படத்தில் நடித்து முடித்த பின், நடிப்பு யுனிவர்சிட்டியில் படித்து விட்டு வெளியே வந்த அனுபவம் கிடைத்துள்ளது. 'அதோடு, நடிப்பின் சூட்சுமம் புரிந்து விட்டதால், இனிமேல் எந்த மாதிரியான வேடம் என்றாலும், அசால்டாக, 'ஸ்கோர்' பண்ணுவேன்...' என்கிறார். சுடர் விளக்கு ஆனாலும், துாண்டுகோல் வேண்டும்!

— எலீசா

பறந்து பறந்து சண்டை போடும் பிரபுதேவா!

பிரபுதேவா நடித்த படமென்றாலே வித்தியாசமான நடன அசைவுகள் இடம்பெறும். ஆனால், சமீபகாலமாக ஆக் ஷன் கதைகளில் பயணிக்கத் துவங்கி விட்டார். அந்த வகையில், பொன்.மாணிக்கவேல் என்ற படத்தில் முதன் முதலாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா, அடுத்தபடியாக, தேள் என்ற படத்தில் எமோஷனல் ஆக் ஷன் கதையில் நடிக்கிறார். ஆக, இது வரை பறந்து பறந்து நடனமாடி வந்த பிரபுதேவா, இப்போது பறந்து பறந்து சண்டை செய்யத் துவங்கி உள்ளார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

* எப்போதுமே நடிகையர் கூட்டத்துடன் காணப்படும், 'பிக்கப்' நடிகரின் மார்க்கெட் வீழ்ச்சி காரணமாக, அவரது அபிமான நடிகையர் அனைவருமே அவரை, 'கட்' பண்ணி விட்டதோடு, அவரது மொபைல் நம்பரையே பிளாக் பண்ணி விட்டனர். ஆன போதும் அடங்கவில்லை நடிகர், தற்போது கோலிவுட்டில் இறக்குமதியாகியுள்ள சில இளவட்ட நடிகையரை தன், 'டீமில்' சேர்த்து, மறுபடியும், 'ஜாலி' அரட்டையை தொடர்ந்து வருகிறார்.

''டேய் ராசா... வாய் என்னமோ நம நமங்கறது... ஆர்யா பவன் ஓட்டலிலிருந்து இரண்டு போண்டாவும், மெது பக்கோடாவும் வாங்கிட்டு வாடாப்பா!'' என்றார், சினிமா பொன்னையா.

* பல ஆண்டுகளாக சைவ நடிகையாக இருந்த அந்த மூன்றெழுத்து நடிகை, சமீபத்தில் ஒரு படத்தில் அசைவ நடிகையாக உருவெடுத்தார். விளைவு, ஆடைகளை குறைத்த அதே வேகத்தில் படக்கூலியையும் கடுமையாக உயர்த்தி விட்டார். லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த நடிகை, தற்போது, கோடிகளை சொல்லி வருகிறார். இதனால், பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர், கோலிவுட் தயாரிப்பாளர்கள்.

''ரெஜினா டீச்சர்... ரெஜினா டீச்சர்... பார்ட்டியில் நாங்களும், 'டான்ஸ்' ஆட, ஒரே ஒரு, 'சான்ஸ்' வாங்கிக் கொடுங்களேன்!'' என்றான், பிரபுவெங்கட்.

சினி துளிகள்!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தில் கமல்ஹாசன்,மோகன்லால் ஆகிய இருவரும், 'கெஸ்ட் ரோலில்' நடிக்கின்றனர்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us