
மணிரத்னத்தின் கனவு படம்!
'கல்கியின், பொன்னியின் செல்வன் கதையை படமாக்குவது தான், என் நீண்டகால கனவு...' என, கூறி வந்தார், மணிரத்னம். தற்போது, அதை அவர், நனவாக்கப் போகிறார். அந்த படத்தில் நடிப்பதற்கு, விக்ரம், சிம்புவை ஒப்பந்தம் செய்தவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகளான ஐஸ்வர்யாராய் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
பாட்டிக்காக படவேட்டை நடத்தும், கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவைப் போன்று, அவரது பாட்டி சரோஜாவும், நடிகை தான். மேனகா நடித்து வந்த போதே, சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர்; தற்போது, பேத்தி கீர்த்தி சுரேஷ் நடித்து வரும்போதும், கடைக்குட்டி சிங்கம் மற்றும் தாதா 87 என, சில படங்களில் நடித்து வருகிறார். இதனால், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், பாட்டிக்கும், வாய்ப்பு கேட்கும் கீர்த்தி சுரேஷ், 'டம்மியான வேடத்தை கொடுத்து, என் பாட்டியின் திறமையை அவமதித்து விடாதீர். அவர் மூன்று தலைமுறை நடிகை. அதனால், நல்ல வேடமாக கொடுங்கள்...' என, இயக்குனர்களிடம், பாட்டிக்காக, படவேட்டை நடத்துகிறார். தனக்குத் தனக்கு என்றால், தாய் சீலையும் பதக்குக் கொள்ளும்!
— எலீசா
'இமேஜை' மாற்ற, ஜெயம் ரவி எடுத்த முயற்சி!
சமூக நோக்கமுள்ள கதைகளில் நடிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டி வரும், ஜெயம் ரவி, புதுமுக இயக்குனர்கள், தன்னை வைத்து படம் இயக்க, கதை தயார் பண்ணும்போது, தானும் கதை விவாதங்களில் பங்கேற்கிறார். தனக்கு தோன்றும் விஷயங்களை, இயக்குனர்களிடமும் பகிர்ந்து கொள்கிறார். இப்படி செய்வதால், அந்த படங்களில் நடிக்கும்போது, தனக்கு கூடுதல் ஈர்ப்பு ஏற்படுவதாக சொல்கிறார், ஜெயம் ரவி.
— சி.பொ.,
முதன்முறையாக, 'ரிஸ்க்' எடுக்கும், காஜல் அகர்வால்!
படத்துக்கு படம் ஹீரோக்களுடன் ஜாலியாக, 'ரொமான்ஸ்' செய்து கொண்டிருந்தவர், காஜல் அகர்வால். தற்போது முதன்முறையாக, கமலுடன் நடிக்கும், இந்தியன் - 2 படத்திற்காக, வர்மக்கலை பயின்று வருகிறார். இந்த படத்தில், இந்தியன் தாத்தாவாக நடிக்கும் கமல்ஹாசனைப் போலவே, காஜலும், வர்மக் கலை தெரிந்தவராக நடிக்கிறார். அதனால், ஒரு வர்மக்கலை நிபுணரை வைத்து, அவருக்கு தீவிர பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
— எலீசா
முதலிடம் பிடித்த, சாய் பல்லவி!
அனிருத் இசையில், தனுஷ் எழுதி, பாடிய, 'ஒய் திஸ் கொலவெறி...' என்ற பாடலின், 'வீடியோ'வானது, 'யூ - டியூப்'பில், தென் மாநில அளவில், 17.2 கோடி ரசிகர்களால் பார்க்கப்பட்டு, முதலிடம் பிடித்திருந்தது. ஆனால், தெலுங்கில், சாய் பல்லவி நடித்து, வெளியான, பிடா என்ற படத்தின், 'வச்சின்டே...' என்ற பாடல் வீடியோவை, யூ - டியூபில் தற்போது, 17.3 கோடி பேர் பார்த்துள்ளனர். அதனால், தனுஷின், 'கொலவெறி' பாடல், தென் மாநில அளவில் செய்திருந்த சாதனையை, சாய் பல்லவியின் பாடல் முறியடித்து, முதலிடம் பிடித்துள்ளது.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* தனக்கு, 'ரெட் கார்டு' போடப் போவதாக மிரட்டிய, சண்டக்கோழி நடிகருக்கு, சரியான அதிர்ச்சி கொடுக்க, தன் நட்பு வட்டார நடிகர், நடிகையரை ஒன்று திரட்டி, ஒரு கோஷ்டி உருவாக்கியிருக்கிறார், வம்பு நடிகர். இதனால், சண்டக்கோழிக்கான எதிர்ப்பு அதிகரித்து வருவதோடு, வம்பு நடிகரின் கை ஓங்கியும் வருகிறது. இதையடுத்து, தன் பக்கமும் சில இளவட்ட நடிகர்கள் இருப்பது தான் தனக்கு நல்லது என்று, தன்னை காத்துக்கொள்ள, தானும் ஒரு கோஷ்டியை உருவாக்கி வருகிறார், சண்டைக்கோழி.
'தம்பி விஷால்... நான் சொல்றத கேளுப்பா... மாணவர் சங்க தலைவனா இருந்தா மட்டும் போதாது; மற்ற மாணவர்களிடம், அனுசரிச்சு நடந்துக்கணும்... அப்ப தான் அவங்களோட ஒத்துழைப்பு கிடைக்கும். உங்க கோரிக்கைகளும் நிறைவேறும்...' என்றார், ஆசிரியர்.
* கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில், எக்கச்சக்க பந்தாக்களை கட்டவிழ்த்து விட்டார், அந்த பாலிவுட் நடிகை. அதோடு, மும்பை ஆண் நண்பர்களை அழைத்து வந்து, 'கேரவனுக்குள்' ஆட்டம், பாட்டம் என்று, செம லுாட்டி அடித்தார். அதைப் பார்த்து, 'இந்த பாலிவுட் புயல், நம் ஊருக்கு ஒத்து வராது போலிருக்கே...' என்று அவரை ஒப்பந்தம் செய்ய, வட்டம் போட்ட தயாரிப்பாளர்கள், தெறித்து ஓடி விட்டனர். இதனால், கைவசம் உள்ள ஒரேயொரு படத்தோடு அம்மணியின் ஆட்டம், 'குளோஸ்' ஆகப் போகிறது.
'புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கும் சாய்ஷா ரொம்ப தான் அலட்டுறா... நம்மோட சேர்ந்து, 'லஞ்ச்' சாப்பிட வரமாட்டேங்கறா... அவள, இனி, நம்முடன் எதற்கும் சேர்த்துக் கொள்ள வேண்டாம்டி, சாரதா...' என்றாள், வேணி.
சினி துளிகள்!
* 'பாட்டுக்கு நடனமாடுவது தான் என் பொழுதுபோக்கு...' என்கிறார், சாய்ஷா சாய்கல்.
* விஷால் நடித்து வரும், அயோக்யா படத்தில், ஆர்.பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
அவ்ளோதான்!

