
எகிப்து மொழி படத்தில், அஜீத்!
மறைந்த நடிகை, ஸ்ரீதேவியின் கணவர் தயாரிப்பில், இரண்டு படங்களில் நடிப்பதாக, ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தார், அஜித். தற்போது, பிங்க் இந்தி படத்தின், தமிழ், 'ரீ-மேக்'கான, நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், எகிப்து மொழியில் வெளியான, ஹெப்டா தி லாஸ்ட் லெக்சர் என்ற படத்தின், 'ரீ-மேக்' உரிமையும் வாங்கியுள்ள, போனி கபூர், அடுத்தபடியாக, அந்த படத்தையும், அஜீத்தை வைத்து, தமிழில், 'ரீ-மேக்' செய்யப் போகிறார்.
— சினிமா பொன்னையா
இளவட்ட நடிகையரை, 'காண்டேற்றும்' நயன்தாரா!
முப்பத்தைந்து வயதாகி விட்ட, நயன்தாராவின் மார்க்கெட், இப்போது தான் உச்சத்தில் இருக்கிறது. கதையின் நாயகி, கதாநாயகி என, நடித்து வரும் அவர், முன்பெல்லாம், 'வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்தால், என், 'இமேஜ்' போய் விடும்...' என்று மறுத்து வந்தார். ஆனால், இப்போது, வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வருகிறார். இதனால், வளர்ந்து வரும் இளவட்ட நடிகையர், தங்களுக்கான வாய்ப்புகளையும் அபகரித்துக் கொள்கிறாரே என்று, நயன்தாரா மீது, பயங்கர கடுப்பில் இருக்கின்றனர். அதுக்கும் இருப்பாள்; இதுக்கும் இருப்பாள்; ஆக்கின சோற்றுக்கு பங்கும் இருப்பாள்.
— எலீசா
செழிப்பாக காணப்படும், லட்சுமி மேனன்!
சுந்தரபாண்டியன், கும்கி, றெக்க மற்றும் ஜிகர்தண்டா என, தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்த, லட்சுமிமேனன், திடீரென உடல் எடை அதிகரித்து, சினிமா உலகில் காணாமல் போனார். இந்நிலையில், ஓராண்டாக, நடன பயிற்சி மேற்கொண்டு, உடல் இளைத்து, மீண்டும் செழிப்பாக காணப்படுகிறார். வாய்ப்புகள், மீண்டும் தேடி வரும் என, அவர் நம்புகிறார். இட்டாருக்கு இட்ட பலன்.
— எலீசா
தனுசுக்கு அம்மாவான, சினேகா!
திருமணமான பல நடிகையர், நடுத்தர வயது அம்மா வேடங்களில் நடித்து வந்தபோதும், சினேகாவிற்கு அந்த மாதிரியான வேடங்கள் சென்றபோது, 'எனக்கு, இன்னும் அவ்வளவு வயதாகி விடவில்லை...' என்று வாய்ப்புகளை திருப்பி விட்டார். தற்போது, கொடி படத்தை இயக்கிய, துரை செந்தில்குமாரின் படத்தில், அப்பா - மகன் என, இரண்டு வேடங்களில் நடிக்கிறார், தனுஷ். இதில், அப்பா தனுஷுக்கு ஜோடியாகவும், மகன் தனுஷுக்கு, அம்மாவாகவும் நடிக்கிறார், சினேகா. ஆனபோதும், 'பிளாஷ் பேக்'கில் வரும் இளமையான அம்மா வேடம் என்பதால், 'டபுள் ஓ.கே.,' சொல்லி விட்டார். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்!
— எலீசா
வில்லனாக சிம்பு!
கஜினிகாந்த் படத்திற்கு பிறகு, கே.வி.ஆனந்த் இயக்கும், காப்பான் படத்தில், வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார், ஆர்யா. அதே சமயம், ஒரு கன்னட படத்தின், தமிழ், 'ரீ-மேக்'கில், ஆர்யா, கதாநாயகனாக நடிக்க, அவருடன் வில்லனாக மோதுகிறார், சிம்பு. தொடர்ந்து, கதாநாயகனாக மட்டுமே நடித்து வரும், சிம்பு, ஒரு மாறுதலுக்காக, வில்லன் அவதாரம் எடுக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* தன்னுடன் நடித்த பாலிவுட் நடிகையை, திருமணம் செய்து கொண்டார், 'பிக்கப்' நடிகர். ஆனால், பல ஆண்டுகளாக பல நடிகையரின், ஆண் நண்பராக இருந்து வந்துள்ள மேற்படி நடிகர், பெண் நண்பிகளுடன் நட்பை இனியும் தொடர்ந்தால், குடும்பத்தில் குழப்பம் வந்து விடும் என்பதால், அவர்களை கத்தரித்து வருகிறார்.
'டேய் தம்பி... வெளியூரில் வீடு எடுத்து தங்கி, வேலைக்கு போகப் போற... அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களிடம் அளவோடு பழகுப்பா... உன் வீட்டுக்கு பக்கத்திலேயே... எனக்கு தெரிஞ்சவரோட, ஆர்யா பவன் ஓட்டல் இருக்கு; சாப்பாடு சூப்பரா இருக்கும். அங்கேயே சாப்பிட்டுக்கோ...' என்றார், பெரியப்பா.
* ஆபாச பட நடிகையான அந்த பாலிவுட் புயல், தற்போது, தமிழில் ஒரு சரித்திர படத்தில், கதையின் நாயகியாக நடிப்பதுடன், சில படங்களில், கவர்ச்சி நடனம் ஆடவும் கல்லெறிந்தார். அம்மணிக்கான ரசிகர்களை கருத்தில் வைத்து, அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் முண்டியடித்த போது, ஒரு பாட்டுக்கு குத்து போடவே, கதாநாயகியரை
விட கூடுதல் கரன்சி கேட்டார். இதனால், அம்மணியை முற்றுகையிட்ட படாதிபதிகள், தெறித்து ஓடி விட்டனர்.
'அம்மா... நம்ம ஆன்ட்டியை, ஏன் எல்லாரும், 'சன்னி பாபி'ன்னு கூப்பிடறாங்க...'
'அது ஒண்ணுமில்லடி... அத்தையும், அவர் வீட்டுக்காரரும், மும்பையில் பல வருஷம் இருந்தாங்க... பக்கத்தில் இருப்பவர்கள், அத்தை பேரு வாயில் நுழையாததால், நீளமான பெயரை சுருக்கி, 'சன்னி பாபி'ன்னு ஆக்கிட்டாங்க...' என்றார்.
சினி துளிகள்!
* அவ்வப்போது, சென்னை சாலைகளில், தலையில், 'ஹெல்மெட்' அணிந்தபடி, சைக்கிளில் வலம் வருகிறார், ஆர்யா.
* 'வீரமாதேவி படம், என் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தும்...' என்கிறார், சன்னி லியோன்.
அவ்ளோதான்!

