
வெற்றிமாறனின் மாற்று சிந்தனை!
தமிழ் சினிமாவில், பெரும்பாலான இயக்குனர்கள், தங்கள் சொந்த கதைகளையே படமாக்கி வருகின்றனர். ஆனால், வெற்றிமாறனோ, மாறுபட்ட சிந்தனை கொண்ட நாவல்களை படமாக்குவதில், ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில், பூமணி எழுதிய, வெக்கை என்ற நாவலை தழுவி, தனுஷ் நடித்த, அசுரன் படத்தை இயக்கினார். இதையடுத்து, காமெடியன் சூரியை வைத்து, ஒரு படம் இயக்கப் போகிறார். அந்த படத்தின் கதையை, மறைந்த பாடலாசிரியர், நா.முத்துக்குமார் எழுதிய, பட்டாம் பூச்சி விற்பவன் என்ற கவிதை தொகுப்பை தழுவி உருவாக்குகிறார்.
- சினிமா பொன்னையா
நயன்தாராவுக்கு அதிர்ச்சி கொடுத்த, தீபிகா படுகோனே!
தெலுங்கில் வெளியான, ஸ்ரீ ராம ராஜ்ஜியம் என்ற படத்தில், சீதை வேடத்தில் நடித்த நயன்தாரா, தற்போது, ராமாயணம் என்ற பெயரில் உருவாகும், '3டி' படத்திலும், சீதையாக நடிக்க கல்லெறிந்தார். ஆனால், சீதை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதை, நீண்டநாள் கனவாக வைத்திருந்த, ஹிந்தி நடிகை, தீபிகா படுகோனே, அந்த வாய்ப்பை மின்னல் வேகத்தில் கைப்பற்றி, நயன்தாராவுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்து விட்டார்.
உனக்கும் பெப்பே; உங்கள் அப்பனுக்கும் பெப்பே!
- எலீசா
அரை நிர்வாணமாக நடித்த, பிரியங்கா!
சில ஆண்டுகள் தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போயிருந்தார், மலையாள நடிகையான, வெயில் பிரியங்கா. தற்போது, ஒரு படத்தில், அரை நிர்வாண காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார். அதோடு, 'தமிழ் சினிமாவில், அரை நுாற்றாண்டுக்கு பேசப்படும் கதாபாத்திரமாக, இது இருக்கும். அவசியப்பட்டால், கதைக்கு, முழு நிர்வாணமாக நடித்தால் கூட தப்பில்லை...' என்று, 'ஸ்டேட்மென்ட்' கொடுத்து, கோலிவுட் நடிகைகளை அதிர வைத்திருக்கிறார்.
எவ்வளவு புரண்டாலும், ஒட்டுவது தான் ஒட்டும்!
— எலீசா
சிவாஜி - கமலை மிஞ்சிய, யோகிபாபு!
காமெடியன் மட்டுமின்றி, கதையின் நாயகனாகவும் நடித்து வரும், யோகிபாபு, வித்தியாசமான, 'கெட் - அப்'களில் நடிக்கவும் ஆர்வமாக இருப்பதாக சொல்லி வந்தார். அதையடுத்து, காவி ஆவி நடுவுல தேவி என்ற படத்தில், 11 'கெட் - அப்'களில் இவரை நடிக்க வைக்கின்றனர். அந்த வகையில், நவராத்திரி படத்தில், சிவாஜி ஒன்பது வேடங்களிலும், தசாவதாரம் படத்தில், கமல், 10 வேடங்களிலும் நடித்த நிலையில், தற்போது, யோகிபாபு, 11 வேடங்களில் நடிக்கிறார்.
- சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* கன்னடத்தில் இருந்து தமிழுக்கு, 'என்ட்ரி' ஆகியுள்ள, அந்த நடிகை, தல, தளபதி என்று ஜோடி போட, 'ரூட்' போட்டு வருகிறார். குறிப்பாக, மேற்படி நடிகர்களின் படங்களில் நடிக்க, தன்னை யாருமே தொடர்பு கொள்ளாத போதும், 'அவர்களின் அடுத்த படத்தில், நான் தான் ஜோடி...' என்று, தன் சார்பில் இருந்து பரபரப்பு செய்திகளை பரப்பி விடுகிறார், நடிகை. இதனால் தல, தளபதி படங்களின் இயக்குனர்களே குழம்பிப் போயுள்ளனர். புதுவரவு நடிகையின் இந்த அதிரடி அட்டகாசத்தால், கோலிவுட்டின் மேல்தட்டு அம்மணிகள் கடுப்பில் உள்ளனர்.
'ஏண்டியம்மா... குழந்தைக்கு, 'ஆர்' எழுத்தில் பெயர் சூட்டணும்ன்னா, ராகினி, ரோகிணி,
ராதிகான்னு, எத்தனையோ அழகான பெயர் இருக்க, அதென்ன, ராஷ்மிகா, ரோஷ்மிகான்னு வாயில் நுழையாத பெயரா வைக்கறீங்க...' என்று கடிந்து கொண்டாள், கொள்ளு பேத்தியின், பெயர் சூட்டு விழாவுக்கு வந்திருந்த, பாட்டி.
சினி துளிகள்!
* ஹன்சிகா நடிக்கும் ஒரு படத்தில், அவரது மாமியாராக நடிக்க, ஓ.கே., சொல்லி இருக்கிறார், சினேகா. மருமகளை மிரட்டி வைக்கும் அதிரடியான மாமியார் வேடம் என்பதால், 'நெகடீவ் பர்பாமென்ஸ்' கொடுக்க தயாராகிவிட்டார்.
* அஜீத்துடன், பில்லா - 2 படத்தில் நடித்த, புரூனா அப்துல்லா, தண்ணீருக்குள், குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
* தமிழில் கார்த்தி நடித்து வரும், சுல்தான் படத்தில் நடித்து வருகிறார், ராஷ்மிகா மந்தனா.
அவ்ளோதான்!