
கீர்த்தி சுரேஷின் மறக்க முடியாத தீபாவளி!
'போக்கிரி படத்தின், 100வது நாள் விழாவிற்காக, நடிகர் விஜய், கேரளா வந்திருந்த போது தான், அவரை முதன் முதலாக பார்த்தேன். அப்போது, அவருடன் எடுத்த புகைப்படத்தை, இன்று வரை, பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். விஜயுடன் நான் நடித்த, சர்கார் படம், கடந்த ஆண்டு, தீபாவளிக்கு வெளியானது. அன்று, சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில், ரசிகர்களுடன் அமர்ந்து, அந்த படத்தை பார்த்தேன். அவர்கள், உற்சாகமாக கை தட்டியதை, பட்டாசு வெடித்தது போலவே உணர்ந்தேன். அந்த வகையில், எத்தனை தீபாவளியை கடந்து சென்றாலும், விஜயுடன் நான் நடித்த, சர்கார் படம் வெளியான, 2018ன் தீபாவளியை, ஒருநாளும் என்னால் மறக்க முடியாது...' என்று சொல்லி, மத்தாப்பூவாக சிரிக்கிறார், கீர்த்தி சுரேஷ்.
— எலீசா
'பட்டாசு வெடிக்கிற பழக்கமில்லை...' -த்ரிஷா!
'என்னைப் பொறுத்த வரைக்கும், தீபாவளிக்கு, பட்டாசு வெடிச்சு, சுற்றுச் சூழலை மாசு படுத்துவது பிடிக்காது. அதோடு, பட்டாசு வெடிக்கிற சத்தம் கேட்டு, விலங்குகள், பறவைகளெல்லாம் பயந்து போயிடும். அதனால், நான் பட்டாசு வெடிக்க மாட்டேன். ஆனால், 'ஆயில்பாத்' எடுப்பேன். புது, 'டிரஸ்' உடுத்தி, தோழியரை சந்திச்சு, 'ஸ்வீட் பாக்ஸ்' கொடுத்து, தீபாவளி வாழ்த்து சொல்வேன்; யாராவது ஏழைகளை பார்த்தால், உதவி செய்வேன். இப்படித்தான், நான் பல வருஷமா தீபாவளி கொண்டாடுறேன்...' என்கிறார், த்ரிஷா.
— எலீசா
தமன்னாவின் சிலிர்க்க வைக்கும் தீபாவளி!
'சின்ன வயசுல, தீபாவளி வருதுன்னா, புது, 'டிரஸ்' கிடைக்கும்ன்னு, ரொம்ப சந்தோஷப்படுவேன். அதே சமயம், பக்கத்து வீடுகளில், யாராவது பட்டாசு வெடிச்சா, பயத்துல வெளியே வரவே மாட்டேன். ஆனால், இப்பல்லாம் அப்படியில்லை. நானே பட்டாசு வெடிக்கிறேன்; அதிலயும், தீபாவளி அன்னைக்கு, எங்க வீட்டு மொட்டை மாடியில நின்னு, மும்பை சிட்டியைப் பார்த்தா, இது பூலோகமா, இல்லை தேவலோகமாங்கிற மாதிரி, வெளிச்சத்தில் பிரகாசமா இருக்கும். குடும்பத்தோடு அதை பார்த்து ரசிக்கிற சுகமே, அலாதி தான். அதனால், தீபாவளி வருதுன்னாலே, மற்றவர்கள் பட்டாசு வெடிச்சு மகிழ்ச்சியை வெளிப்படுத்துறதைப் பார்த்து, எனக்குள்ளேயும் சந்தோஷம் பீறிட்டு வரும்...' என்று சொல்லி, சிலிர்க்கிறார், தமன்னா.
— எலீசா
காஜல் அகர்வாலின் ஆனந்த தீபாவளி!
'மற்றவர்கள் மாதிரி, தீபாவளி வந்தால், பட்டாசு வெடிக்கணும், மத்தாப்பு கொளுத்தணும் என்று, நான் ஆசைப்பட மாட்டேன். ஆனால், விதவிதமாக, 'டிரஸ்' எடுக்க ஆசைப்படுவேன். தீபாவளிக்கு, எந்த, 'ஷோரூமில்' புதிய, 'டிசைன் டிரஸ்'கள் வந்துள்ளன என்பதை தெரிந்து, அங்கு சென்று, எனக்கு தேவையானதை எடுப்பதோடு, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், கேட்டதை வாங்கிக் கொடுத்து, மகிழ்வேன். அதோடு, தீபாவளி அன்று, விதவிதமான, 'டிரஸ்'களை உடுத்தி, தோழியரோடு ஆனந்தமாக பொழுதை கழிப்பேன்...' என்கிறார், காஜல்அகர்வால்.
— எலீசா
கறுப்புபூனை!
* 'நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தபோதே, 'இன்றைய அரசியல், பணத்தை மையமாக வைத்து நடக்கிறது. அதனால், உங்களுக்கு அரசியல் வேண்டாம்' என்று, 'அட்வைஸ்' கொடுத்தேன். ஆனால், சிரஞ்சீவி, என் வார்த்தையை கேட்கவில்லை. அவரைத் தொடர்ந்து அரசியலுக்கு வர தயாராகிக் கொண்டிருக்கும், ரஜினியிடமும் அதே, 'அட்வைசை' கொடுத்திருக்கிறேன். இவராவது, என் சொல்லை கேட்பாரா... இல்லை, சிரஞ்சீவியை போலவே, இவரும் அரசியலில் இறங்கி, பாடம் கற்று வருவாரா என்பது தெரியவில்லை...' என்கிறார், அமிதாப்பச்சன்.
— சி.பொ.,
* இமயமலையில் உள்ள கீழ் கங்கை வரைக்கும், சமீபத்தில், ஆன்மிக பயணம் சென்று வந்துள்ளார், அமலாபால். அப்படி செல்லும்போது, காட்டுப் பகுதிகளில் சமைத்து சாப்பிட்ட அவருக்கு, வீட்டு சாப்பாடு மற்றும் ஓட்டல் சாப்பாட்டை விட, அது தான் அதிகம் பிடித்திருக்கிறதாம். அதனால், இப்போதெல்லாம், நண்பர்களுடன், வாரம் ஒருநாள், வனப்பகுதிக்கு சென்று, சமைத்து சாப்பிட்டு, வீடு திரும்புவதாக சொல்கிறார்.
— எலீசா
அவ்ளோதான்!