
'வி' சென்டிமென்டை தொடரும், அஜீத்!
நடிகர் அஜீத்குமார், அதிகமாக, 'சென்டிமென்ட்' பார்ப்பவர். இயக்குனரின் ஒரு படம், 'ஹிட்' ஆனால், அவர்களுடன் அடுத்தடுத்து படம் பண்ணுவார். அதேபோல், தான் நடித்த, வீரம் படம் வெற்றி பெற்றதால், பின், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என்று தன் படங்களுக்கு, 'வி' முதல் எழுத்து வருவது போல், 'டைட்டில்' வைத்து வந்தார். தற்போது, தன், 60வது படத்திற்கும், வலிமை என்று வைத்து, 'வி' சென்டிமென்டை தொடர்ந்துள்ளார்.
— சினிமா பொன்னையா
'கெத்து' காட்டும், ஸ்ரேயா!
ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபர், ஆண்ட்ரூ கோர்சேவ் என்பவரை திருமணம் செய்த கையோடு, மீண்டும் கலைசேவையாற்ற வந்து விட்டார், ஸ்ரேயா. ஏற்கனவே, ரஜினியுடன், சிவாஜி படத்தில், 'டூயட்' பாடியவர், தற்போது, , தர்பார் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை உலகிற்கு உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக, ரஜினியுடன், தர்பார், 'ஸ்பாட்'டில், தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, மறுபடியும், தான், 'சூப்பர் ஸ்டாரை' எட்டி பிடித்து விட்டதாக, கோலிவுட்டில், 'கெத்து' காட்டி வருகிறார், ஸ்ரேயா. தின்ன தவிடு இல்லை; தங்க சரப்பளி தொங்க தொங்க ஆடுகிறது!
— எலீசா
காமசூத்ரா - 2வில், சன்னிலியோன்!
மீரா நாயர் இயக்கத்தில், 1996ல், ரேகா நடித்த படம், காமசூத்ரா. கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த படம், இந்தியா - -பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது, காமசூத்ரா படத்தின் இரண்டாம் பாகத்தை, 'வெப் சீரிஸ்' ஆக எடுக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க விடுத்த அழைப்பை கண்டு, பாலிவுட்டின் மெகா நடிகைகள் மிரண்டு ஓடிய நிலையில், பிரபல, 'அடல்ட்' பட நடிகையான, சன்னிலியோன், தானே முன்வந்து சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சன்னிலியோன் நடிக்க ஒப்பந்தமானதுமே, படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி விட்டது. கதை முடிந்தது, கத்தரிக்காய் காய்த்தது!
— எலீசா
தமிழ் சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்த, இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
மஹா படத்தை அடுத்து, மீண்டும் ஒரு, 'திரில்லர்' படத்தில் நடிக்கிறார், ஹன்சிகா. இந்த படத்தில், இந்திய கிரிக்கெட் அணி வீரரான, ஸ்ரீசாந்த் வில்லனாக நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து, விக்ரம் நடிக்கும், 58வது படத்தில், இர்பான் பதான் மற்றும் சந்தானம் நடிக்கும், டிக்கிலோனா படத்தில், ஹர்பஜன் சிங்கும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆக, ஒரே நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மூவர், தமிழ் படங்களில் நடித்து வருகின்றனர்.
- சி.பொ.,
கறுப்புப் பூனை!
பையா நடிகையின் பிடியில் இருந்து வந்த, பருத்தி வீரன், அவரிடமிருந்து விடுபட்டு விட்டதால், இப்போது, மேற்படி நடிகரிடம் சிபாரிசு கேட்டு துரத்துகிறார், மெட்ராஸ் நடிகை. 'அவுட்டோர்'களில் நடிகர் இருந்தாலும், நேரில் சென்று சந்திக்கும் நடிகை, சில நாட்கள் அவருடன் பொழுதை கழித்து விட்டே, 'ரிட்டன்' ஆகிறார். இந்த சந்திப்பு, சங்கமங்களுக்குப் பின், தன்னிடம் யார் கதை சொல்ல வந்தாலும், முதல் வேளையாக, அம்மணியின் பெயரைத்தான் முன்மொழிந்து வருகிறார், நடிகர். ஆனால், இப்படி அவர் புதிய டிராக்கில் கார் ஓட்டும் விவகாரம், நடிகரின் குடும்பத்திற்குள் புகைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.
'ஏம்மா... கேத்ரின் தெரசா... அன்னை தெரசா மாதிரி, பேரும், புகழும் பெறணும்ன்னு தான், உனக்கு அந்த பெயரை சூட்டினோம். நீ என்னடாவென்றால், எடுத்ததெற்கெல்லாம் பொய் சொல்லிட்டு, யார் தோள் மீதாவது சவாரி செய்யலாம்ன்னு இருக்கியே... இது, உனக்கே சரியா படுதா...' என்று, கோபித்துக் கொண்டார், அம்மா.
சினி துளிகள்!
* விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகன்னா மற்றும் கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
* விஜயின், பிகில் படத்தை இயக்கியுள்ள, அட்லி, அடுத்தபடியாக, ஹிந்தியில், ஷாரூக்கானை வைத்து, ஒரு படம் இயக்க, பேசி வருகிறார்.
அவ்ளோதான்!