
ரஜினி கொடுத்த, 'அட்வைஸ்!'
பவர்பாண்டிக்கு பிறகு, அடுத்தடுத்து சில படங்களை இயக்க, களமிறங்கினார், தனுஷ். ஆனால், அவரது மாமனார் ரஜினியோ, 'ஒரே நேரத்தில் நடிப்பு, இயக்கம் என, இரட்டைக் குதிரையில், சவாரி வேண்டாம். அது, இரண்டுக்குமே ஆபத்தாகி விடும்...' என்று சொல்லி, நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு, 'அட்வைஸ்' கொடுத்துள்ளார். அதன் காரணமாக, பல, 'ஸ்கிரிப்ட்'டுகளை தயார் செய்துகொண்டிருந்த, தனுஷ், அவற்றை கிடப்பில் போட்டு, மாமனார் காட்டிய வழியில், முழு நேர நடிகராகி விட்டார்.
சினிமா பொன்னையா
'ஹேக்கர்ஸ்'க்கு சாபம் கொடுத்த, அனுபமா!
தனுஷுடன், கொடி படத்தில் நடித்தவர், மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன். தற்போது அதர்வாவுடன், தள்ளிப்போகாதே படத்தில் நடிக்கும் இவர், இப்போது வரை, கவர்ச்சிக்கு கட்டுப்பாடு வைத்து நடித்து வருகிறார். அனுபமாவின் புகைப்படங்களை, 'மார்பிங்' செய்து, நிர்வாண புகைப்படமாக மாற்றி, அதை அவரது, 'பேஸ்புக்'கிலேயே வெளியிட்டு விட்டனர், 'ஹேக்கர்ஸ்!' இதனால், அதிர்ச்சியடைந்த அனுபமா, 'உங்களுக்கெல்லாம் அம்மா, அக்கா, தங்கச்சி இல்லையா... என் பாவம், உங்களை சும்மா விடாது...' என்று, அவர்களுக்கு சாபம் கொடுத்து, 'சைபர் கிரைமில்' புகாரும் அளித்திருக்கிறார்.
— எலீசா
'டப்' கொடுக்க வரும், 'டப்பிங் ஆர்ட்டிஸ்ட்' ரவீனா!
நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால், அமலாபால், ஸ்ரீதிவ்யா மற்றும் எமிஜாக்சன் என, பல நடிகையருக்கு, 'டப்பிங்' பேசுபவர், ரவீனா ரவி. இந்நிலையில், விதார்த் நடித்த, ஒரு கிடாயின் கருணை மனு படத்தில், திடீரென்று கதாநாயகியான, ரவீனாவின் நடிப்புக்கு, நல்லவிதமான விமர்சனங்கள் கிடைத்தன. விளைவு, இப்போது, அவரும் முழுநேர நடிகையாகி விட்டார். அந்த வகையில், ராக்கி, காவல்துறை உங்கள் நண்பன் மற்றும் வட்டார வழக்கு என, பல படங்களில் நடித்தபடி, தான், 'டப்பிங்' குரல் கொடுத்த நடிகைகளுக்கே, 'டப்' கொடுக்கும் நாயகியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார். உனக்கும் பெப்பே; உங்கள் அப்பனுக்கும் பெப்பே!
— எலீசா
கருத்து கந்தசாமியான, அஜீத்குமார்!
எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை, அஜீத்குமார். ஆனால், தன் சினிமா நண்பர்களை வாழ்த்த தவறுவதில்லை. அந்த வகையில், விஜய் போன்ற நடிகர்கள் மற்றும் தன் நட்பு வட்டார இயக்குனர்களின் படங்களை பார்த்து, முதல் நபராக கருத்து சொல்லி வருகிறார். அப்படி அவர், தங்களது படம் குறித்து சொல்லும் கருத்துகள், 90 சதவீதம் சரியாக இருப்பதால், 'அஜீத், தங்கள் படத்தை பார்த்து, எப்போது கருத்து சொல்வார்...' என்று, பல சினிமா பிரபலங்களும் எதிர்பார்க்கத் துவங்கி விட்டனர்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
'செகண்ட் இன்னிங்சில்' இறங்கியடித்து வரும், சேவல் நடிகை, உடம்பை குறைத்து விட்டதோடு, சினிமா பிரபலங்களுடனான இடைவெளியையும் குறைத்திருக்கிறார். முதல் ரவுண்டில், 'கேப்' விட்டே பழகி வந்த அம்மணி, இப்போது, 'கேப்' விடாமல் இறங்கியடிப்பதால், இதுவரை, அம்மணி மீது, 'கேர்லஸ்'ஆக இருந்தவர்கள், இப்போது அவரை, 'கேர்' பண்ண துவங்கி விட்டனர். இதையடுத்து, சில புது வரவு இயக்குனர்களை, 'கவர்' பண்ணியுள்ள அம்மணி, அவர்களை அன்பால் அரவணைத்து, புதுப்பட வாய்ப்புகளுக்கான அடித்தளத்தை அழுத்தமாக போட்டு வருகிறார்.
'நம்ம வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்தாளே பூனம் என்ற மும்பை பொண்ணு, அவ ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்தாளே, நினைவிருக்கிறதா...'
'ஆமாம்... அவளுக்கு என்ன இப்ப...'
'அவ, இப்ப தனியா, 'ரெடிமேட் ஷாப்' ஆரம்பிச்சு, புதுப்புது, 'மாடலில்' ஆடை வடிவமைப்பும் செய்து அசத்தறா... கூட்டம் அலைமோதுது...' என்று பேசிக் கொண்டனர், தோழியர் இருவர்.
சினி துளிகள்!
குத்துப்பாட்டு மற்றும் வில்லி வேடங்களில் நடிக்கவும் தயாராக இருப்பதாக, பட வேட்டை நடத்தி வருகிறார், 'மாஜி ஹீரோயினி' பூனம் பாஜ்வா.
அவ்ளோதான்!