
செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
தமிழ் சினிமாவில், 1980 - 90களில், கவுண்டமணியுடன் இணைந்து, காமெடியில் கலக்கியவர், செந்தில். அந்த வகையில், 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சமீபகாலமாக, குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது, 69 வயதாகும் செந்திலுக்கு, ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய, சுரேஷ் சங்கைய்யாவின் படத்தில், 'ஹீரோ'வாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கவுண்டமணி, வடிவேலு, விவேக் மற்றும் சந்தானம் என, பல காமெடியன்கள், மார்க்கெட் இருக்கும்போதே, 'ஹீரோ'வாகவும் நடித்து விட்டனர். இந்நிலையில், செந்திலுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இப்போது தான் முதன் முறையாக, 'ஹீரோ'வாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும், சிரிப்பு நடிகரான செந்தில், இந்த படத்தில், 'சீரியஸ் ரோலில்' நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா
'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
தன் மீது விழுந்துள்ள குடும்ப நடிகை என்ற, 'இமேஜை' மாற்றி, 'மாடர்ன்' நடிகையாக ஜொலிக்க ஆசைப்படுகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்காக, விதவிதமான, 'மாடர்ன்' உடைகளில் படம் பிடித்து, சினிமா வட்டாரங்களில் உலவ விடுகிறார். அப்படி அவர் அனுப்பும் புகைப்படங்களை பார்த்து, 'காக்கா முட்டை ஐஸ்வர்யாவா இது, சூப்பரா இருக்கே...' என்று சொல்லும் இயக்குனர்கள் கூட, 'மாடர்ன்' வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை அவர் வெளிப்படுத்தும்போது, 'நீங்கள், அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க. உங்கள் மீது, ஆணி அடிச்சா மாதிரி, குடும்ப, 'இமேஜ்' பதிஞ்சு போச்சு...' என்று, மறுக்கின்றனர். இதனால், அடுத்த, 'லெவல்' நடிகையாக முடியாமல் தடுமாறி நிற்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். இட்டப்படியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!
— எலீசா
ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
நடனமாடுவது, மரம் நடுவது போன்று, பல இந்திய திரை பிரபலங்கள், ஒருவருக்கொருவர், 'சோஷியல் மீடியா'வில் சவால் விட்டு வருகின்றனர். ஆனால், ஸ்ருதிஹாசனோ, தன்னுடன் நடிக்கும், 'ஹீரோ'களை, தனக்கு இணையாக உடற்பயிற்சிக்கு வருமாறு சவால் விட்டு வருகிறார். அந்த வகையில், தெலுங்கு நடிகர், ரவிதேஜாவுடன், சரிக்கு சமமாக, 'பிளாங்க்' உடற்பயிற்சி, சவாலை, 'அசால்ட்'டாக செய்து காட்டியிருக்கிறார். அந்த வீடியோவை, அவர் இணையத்தில் வெளியிட்டதையடுத்து, ஸ்ருதியை, பாராட்டி வருகின்றனர், ரசிகர்கள். மலை விழுங்கி மாரியாத்தாளுக்கு உரல் சுண்டைக்காய்!
எலீசா
காமெடியனாகும், விஜய்சேதுபதி!
'ஹீரோ' - வில்லன் என, நடித்து வரும், விஜய்சேதுபதி, ஹிந்தியில் அறிமுகமாகும், மும்பைகார் என்ற படத்தில், காமெடியனாக நடிக்கிறார். இப்படம், தமிழில் வெளியான, மாநகரம் படத்தின், ஹிந்தி, 'ரீ - மேக்'காகும். தமிழில், முனீஷ்காந்த் நடித்த வேடத்தில், ஹிந்தியில் நடிக்கப் போவதாக சொல்லும் விஜய்சேதுபதி, 'தென்னிந்திய சினிமா, என்னை, 'ஹீரோ'வாகவும், வில்லனாகவும் பார்க்கிறது. ஆனால், ஹிந்தி சினிமாவோ, காமெடியனாக பார்க்கிறது. இது கூட ஒரு புதிய அனுபவமாகத் தான் இருக்கப் போகிறது...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
நான்கெழுத்து வாரிசு நடிகர், பெண்கள் விஷயத்தில் ரொம்ப, 'வீக்'காக இருப்பதாக சொல்கின்றனர். உடன் நடிக்கும் அம்மணிகள் மட்டுமின்றி, 'கேரக்டர் ரோல்'களில் நடிக்கும் நடிகையரிடமும் நுால் விடும் நடிகர், பல நாட்களில் படப்பிடிப்பு தளங்களில் இருந்து திடீர் திடீரென்று காணாமல் போய் விடுகிறார். இந்த விவகாரம் தற்போது நடிகரின் தாய்குலத்திற்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, 'உடனடியாக மகனுக்கு ஒரு கால்கட்டு போட்டால் தான், இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட முடியும்...' என்று, அவசரகதியில் வரன் தேடும் வேலைகளை துவங்கியிருக்கிறார்.
பூங்கா ஒன்றில் நடை பயிற்சியின்போது, இருவர்:
'என் நண்பனோட பையன் இப்படி மாறுவான்னு நான் நினைக்கவே இல்லைப்பா...'
'ஏன்... என்னாச்சு?'
'தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளைன்னு சொல்லிட்டே இருப்பான். அதர்வன வேதத்தை நினைவுபடுத்தும் விதத்தில், அதர்வான்னு பேர் வைச்சு, செல்லமா வளர்த்தான். ஆனா, அந்த பையனோ, தறுதலையா திரிஞ்சுட்டு இருக்கு.
'படிப்பை பாதியில் நிறுத்தி, 'ஜிம்'மே கதின்னு இருந்தான். அப்புறம், 'மாடல்' செய்ய போறேன்னு கிளம்பினான். இரண்டு, மூன்று விளம்பரங்களில், 'மாடலாக' நடித்தும் இருந்தான். சரி எப்படியோ, பிழைத்தால் போதும் என்று விட்டு விட்டான்.
'இப்ப என்னடான்னா, பொம்பள சகவாசத்துல சிக்கி, பொழைப்பை கெடுத்துக்கிறான்னு வருத்தப்படறார். திருமணம் செய்து வைத்தாலாவது, தொழிலில் கவனமா இருப்பான்னு, பெண் தேடி வருகிறார்...'
'என்னவோ... இந்த காலத்து பசங்க போக்கை புரிஞ்சிக்கவே முடியல...'
- இப்படி பேசியவாறு, நடந்து சென்றனர்.
சினி துளிகள்!
* தமிழில் மார்க்கெட் மந்தமாக இருப்பதால், தெலுங்கு சினிமாவில், பட வேட்டை நடத்தி வருகிறார், அதர்வா.
அவ்ளோதான்!