PUBLISHED ON : மே 02, 2021

ரசிகர்களுக்கு, விஜய் கொடுத்த, 'அட்வைஸ்!'
சமீபகாலமாக, விஜய் நடிக்கும் படங்கள், ஓடினாலும், ஓடாவிட்டாலும், அந்த படங்கள் பல நுாறு கோடி வசூலித்ததாக, அவரது ரசிகர்கள், 'சோஷியல் மீடியா'வில் அலப்பறை செய்கின்றனர். இதனால், ஓடாத படங்களும், 'ரெய்டு' பிரச்னையில் சிக்கி வருகிறது. இந்நிலையில், தன், 65வது படத்தில் நடிக்க செல்வதற்கு முன், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய், 'என் படங்களுக்கு, 'சோஷியல் மீடியா'வில், 'பப்ளிசிட்டி' செய்வது நல்ல விஷயம் தான். ஆனால், பெரிதாக ஓடாத படத்தை கூட, பெரிய அளவில் வசூலை குவித்ததாக வெத்து, 'பில்ட் - அப்' கொடுக்க வேண்டாம். இதனால், எனக்கு தேவையற்ற தலைவலி ஏற்படுகிறது. எனவே, இனி கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்...' என்று, ரசிக கோடிகளுக்கு, அன்பான, 'அட்வைஸ்' கொடுத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
எதிரிகளே இல்லாத ஒரே நடிகர், விஜய் சேதுபதி!
பொதுவாக, சினிமாவில், ஒரு நடிகர் வேகமாக வளருகிறார் என்றால், அவர் மீது ஏகப்பட்ட கல்லடி விழும். சில நடிகர்களாவது, அவரை பொறாமைக்கண் கொண்டு பார்ப்பர்; இன்னும் சிலர், போட்டியாகவே பார்ப்பர். ஆனால், விஜய் சேதுபதியை, எந்த நடிகரும் அப்படி பார்ப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம், மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை, எந்த நடிகரின் படமாக இருந்தாலும், பார்த்த பிறகு, அவர்களை புகழ்ந்து தள்ளி விடுகிறார், விஜய் சேதுபதி. இதனால், அவரை பொறாமையோடு பார்த்தவர்கள் கூட, பெருமையாக பார்க்கத் துவங்கி விடுகின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்களை, 'கவர்' பண்ணுவது போன்று, நடிகர்களையும் அழகாக, 'கவர்' பண்ணி வைத்திருக்கிறார்.
— சினிமா பொன்னையா.
கறுப்புப்பூனை!
ஆபாச பட நடிகர் என்ற, 'இமேஜில்' இருந்து, தன் மகனை வெளியில் கொண்டு வந்து விட்டார், நவரச நாயகன். இருப்பினும், படப்பிடிப்பு தளங்களில் அம்மணியர்களை உஷார்படுத்தும் வேலைகளில் மகன் இறங்குவதை அறிந்து, அடிக்கடி, 'ஸ்பாட்'டுக்கு, 'விசிட்' அடிக்கிறார். அப்போது, மகனைச் சுற்றி அம்மணியர் கூட்டம் அமர்ந்திருந்தால், அவர்களை விரட்டியடிக்கும் நவரசம், 'இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம். இது, வாலிபத்தை மட்டுமில்லாமல், வாழ்க்கையையும் அழித்து விடும்...' என்று, மகனுக்கு பாடம் எடுத்து, வெளியேறுகிறார். திடீர் திடீரென்று, 'விசிட்' அடித்து, தந்தை குலம் பாடம் எடுப்பதால், அம்மணியரை, 'ஸ்பாட்'டிலேயே உஷார்படுத்தும் வேலைகளை நிறுத்தி, நட்சத்திர விடுதிகளில் தன் லீலைகளை வாரிசு நடிகர் அரங்கேற்றம் செய்து வருவதாக, கோலிவுட்டில் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதோடு, 'ஒரு காலத்தில், அப்பா எட்டடி பாய்ந்தார். இப்போது, மகன் பதினாறு அடி பாய்கிறான்...' என்றும், கிண்டலாக பேசிக் கொள்கின்றனர்.
'காலேஜுக்கு போனமா, வந்தமான்னு இல்லாம, படிக்கும் பெண்களோடு என்ன, 'லுாட்டி' வேண்டியிருக்கு. உங்க பையன் கவுதமை கொஞ்சம் கண்டிச்சு வையுங்க...' என்று, எச்சரித்து சென்றார், பக்கத்து வீட்டுக்காரர்.
'டேய்... கவுதம், இதெல்லாம் வேண்டாம்டா, நான் சொல்றத கேளுடா... இல்லாட்டி, உங்க பிரின்சிபல்கிட்ட வந்து புகார் கொடுத்துடுவேன்...' என்று கண்டித்தார், அப்பா.
'சரி... சரி...' என்று தலை ஆட்டிய கவுதம், கல்லுாரி விடுமுறை என்பதால், நண்பர் யார் வீட்டிலாவது, தோழிகளுடன் கும்மாளம் அடிக்க சென்று விடுகிறார்.
சினி துளிகள்!
* மற்ற நடிகையரெல்லாம் கவர்ச்சி புகைப்படங்களை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட, நடிகை சாயிஷாவோ, தான் அதிரடி நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு, ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
* 'இளவட்ட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள், என் சீனியாரிட்டியை முன்வைத்து, அக்கா என்று அழைத்து, வயதை ஏற்றி விடாதீர்கள். சிம்ரன் என்ற அழகான பெயர் இருக்கும்போது, எதற்காக அக்கா என்கிறீர்கள்...' என்று, அன்பான, 'ஆர்டர்' போடுகிறார், சிம்ரன்.
* சிவகார்த்திகேயனுடன், வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த, மலையாள நடிகர் பகத்பாசில், மீண்டும், கமல் நடிக்கும், விக்ரம் படத்திலும், வில்லனாக நடிக்கிறார்.
* இயக்குனர் மிஷ்கின் பாதியில் வெளியேறியதால், துப்பறிவாளன் - 2 படத்தை தானே இயக்கிய விஷால், அதில் திருப்தி இல்லாமல், கிடப்பில் போட்டுள்ளார்.
* 'லாக்டவுனு'க்கு பிறகு, பல படங்கள், தியேட்டருக்கு வராமல், ஓ.டி.டி., தளங்களிலேயே வெளியாகி வருவதால், அதற்கான தேவை அதிகரித்து விட்டது. இந்நிலையில், இயக்குனர் டி.ராஜேந்தர், தானும் ஒரு ஓ.டி.டி., தளம் துவங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
* சுராஜ் இயக்கிய, தலைநகரம் படத்தில், நாய் சேகர் என்ற காமெடி ரோலில் நடித்தார் வடிவேலு. இப்போது, சுராஜின், நாய் சேகர் என்ற படத்தில், 'ஹீரோ'வாக நடிக்கப் போகிறார்.
* விஜயின்,மாஸ்டர் படத்தை, ஹிந்தியில், 'டப்' செய்து வெளியிட்டபோது, பெரிதாக ஓடவில்லை. இருப்பினும், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும், ஹிந்தியிலும் வெளியிட்டு, மார்க்கெட்டை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார், விஜய்.
* மலையாளத்தில் தான் இயக்கி, நடிக்கும் பரோஸ் என்ற, '3டி' படத்தில், அஜீத்குமாரையும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார், நடிகர் மோகன்லால்.
* தமிழில் வெளியான, மாநகரம் படம், மும்பைகார் என்ற பெயரில், ஹிந்தியில், 'ரீ - மேக்' ஆகி வரும் நிலையில், அடுத்தபடியாக, துருவங்கள் 16 என்ற படமும், ஹிந்தியில், 'ரீ - மேக்' ஆகிறது.
* பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் நடித்து வரும், காஜல் அகர்வால், அனுஷ்கா போன்ற நடிகையர், இன்னும் தமிழில் ஓரிரு வார்த்தை பேசவே தடுமாறி வருகின்றனர். இந்நிலையில், சுல்தான் என்ற ஒரு தமிழ்ப்படத்தில் மட்டுமே நடித்துள்ள, ராஷ்மிகா மந்தனா, சரளமாக தமிழில் பேசி, அனைவரையும் அசர வைத்துள்ளார்.
* சிம்புவின், பத்துதல படத்தில், இன்னொரு, 'ஹீரோ'வாக நடிக்கிறார், கவுதம் கார்த்திக்.
அவ்ளோதான்!
