
'ரியல் ஹீரோ'வுக்கு பாலாபிஷேகம்!
திரையில் தங்களை, 'ஹீரோ'வாக காட்டிக்கொள்ளும் நடிகர்களின், 'கட் - அவுட்'களுக்குத்தான், பாலாபிஷேகம் செய்வர், நம் ஊர் ரசிகர்கள். ஆனால், 'கொரோனா' தொற்று காலத்தில், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்து வரும், 'ரியல் ஹீரோ'வான, பாலிவுட்டின் வில்லன் நடிகரான, சோனு சூட்டின் புகைப்படத்திற்கு, ஆந்திராவில் உள்ள பொதுமக்கள், பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து வணங்கி இருக்கின்றனர்.சோனுசூட்டுக்கு கிடைத்த இந்த கவுரவத்தைப் பார்த்து, இப்போது, இந்திய சினிமாவில் உள்ள சில நடிகர்களும், அவரை முன் மாதிரியாகக் கொண்டு, 'கொரோனா' உதவிகளில், தங்களையும் ஈடுபடுத்தி வருகின்றனர்.
—சினிமா பொன்னையா
சினேகாவின், சமூக பொறுப்பு!
'செகண்ட் இன்னிங்சை' துவங்கி விட்ட, சினேகா, 'எனக்கும் சமூகப்பொறுப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக ஒலிக்க ஆசைப்படுகிறேன். அந்த வகையில், வழக்கமான பெண்களின் பிரச்னைகளை சொல்லாமல், இன்றைய நவீன பெண்கள் சந்திக்கும் பிரச்னைக்குரிய கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதனால், புதிய தாக்கத்துடன், சினிமா களத்திற்குள் வரும் இயக்குனர்களை சந்தித்து, இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து, தீவிர பட வேட்டையில் இறங்க இருக்கிறேன்...' என்கிறார். ஆனான ஆளெல்லாம் தானானம் போடுகிற போது, கோணல் கொம்பு மாடு, கொம்பைக் கொம்பை அசைக்கிறது!
— எலீசா
அர்ஜுன் மகளுக்கு கிடைத்த ஆறுதல்!
பட்டத்து யானை மற்றும் சொல்லி விடவா போன்ற படங்களில் நடித்த, நடிகர் அர்ஜுனின் மகள், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு, அதன்பிறகு படங்கள் இல்லை. அதையடுத்து, அப்பாவிற்கு நெருக்கமான இயக்குனர்களிடத்திலும், பட வேட்டை நடத்தினார். யாரும் வாய்ப்பு தர முன் வரவில்லை. இப்போது, தனக்குள் இருக்கும் சினிமா தாகத்தை தணித்துக் கொள்ளும் வகையில், அப்பா அர்ஜுன் நடித்த படங்களின், 'ஹிட்' பாடல்களுக்கு நடனமாடி, அந்த வீடியோவை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு, ரசிகர்களிடம் பாராட்டு பெற்று வருகிறார். 'தியேட்டரில், ரசிகர்களின் கைத்தட்டல் கிடைக்காத நிலையில், இந்த பாராட்டு, மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது...' என்கிறார். ஒன்றும் இல்லாததற்கு இதுவாவது கிடைத்ததே என்பது போல்!
- எலீசா
'ரீ - என்ட்ரி'க்கு தயாரான, 'மாஜி' காமெடியன்கள்!
சந்தானம், சூரி போன்ற காமெடியன்கள், 'ஹீரோ'வாகி விட்டதை அடுத்து, கோலிவுட்டில், யோகிபாபு மட்டுமே, 'சிங்கிள்' காமெடியனாக சீறிக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், 'மாஜி' காமெடியன்களான, கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், வடிவேலு ஆகிய நால்வரும்,'ரீ - என்ட்ரி' கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில், செந்தில், ஜனகராஜ், வடிவேலு ஆகியோர், குணசித்ர வேடமாக இருந்தாலும் நடிக்க, தயாராக இருக்கின்றனர். ஆனால், கவுண்டமணி மட்டும், 'எனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன். இல்லையேல் வீட்டில் இருந்து, 'டிவி' பார்த்துக் கொண்டிருப்பேன்...' என்று கெத்தாக சொல்லி, இரண்டொரு படங்களின் கதை பிடிக்காமல், திருப்பி அனுப்பி விட்டதாகவும் கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர். அந்த அளவுக்கு, மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்கல என்பது போல், இப்போதும் சிலிர்த்து நிற்கிறார், கவுண்டர்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* இளவட்ட நடிகர்களுடனான வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து, சீனியர் சிட்டிசன்களுடன் தஞ்சமடைந்த, அங்காடித்தெரு நடிகைக்கு, அவர்கள் அமர்க்களமான வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு சீனியர் தெலுங்கு நடிகர், மேற்படி நடிகைக்கு, பங்களா கட்டிக் கொடுத்திருப்பதோடு, பஞ்சணை பைங்கிளியாகவும் அரவணைத்துக் கொண்டுள்ளார். அதனால், அவ்வப்போது ஒரு படத்தில் நடித்தபடியே, சீனியர் நடிகருடன், சீக்ரெட்டை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டார், அங்காடி நடிகை.
'நம் பண்பலை ரேடியோ ஒலிபரப்பு நிலையத்தில், ரேடியோ ஜாக்கியா இருந்த அஞ்சலிக்கு, குரலில் மாற்றம் ஏற்படவே, அவளை ஓரம் கட்டினரே... நினைவிருக்கா...
'அவளும் என்னென்னவோ செய்து பார்த்தா, எம்.டி.,யையும் தன் கைக்குள் போட்டு பார்த்தாள், ஒண்ணும் வேலைக்கு ஆகல. குரல் வளமும், கற்பனை வளமும் குறைஞ்சு போயிடுச்சு!'
'அப்புறம் என்ன ஆனாள்?'
'இப்ப அதிரடியா, ஒரு பண்பலை ரேடியோ ஸ்டேஷனையே துவக்கிட்டாள். 'இனி, யாரையும் எதிர்பார்க்கப் போவதில்லை. நிகழ்ச்சி அமைப்பாளரா இருந்து, வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கப் போறேன்...' என்று, சவால் விட்டுள்ளாள்...'
'சரியான எம காதகி தான்!'
- இப்படி இரு தோழியர் பேசிக் கொண்டனர்.
சினிதுளிகள்!
* 'இதுவரை, ரசிகர்களின் திருப்தியை மனதில் வைத்து நடித்து வந்த நான், இனி, என் திருப்தியை கருத்தில் கொண்டு, கதாபாத்திரங்களை தேர்வு செய்யப் போகிறேன்...' என்கிறார், அஞ்சலி.
அவ்ளோதான்!