
ரசிகர்களிடம், 'டைட்டில்' கேட்கும் பார்த்திபன்!
எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று யோசித்து செய்யக் கூடியவரான, நடிகர் பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் -- 7 என்ற படத்தை இயக்கி, தயாரித்து, படம் முழுக்க தான் ஒருவரே நடித்திருந்தார். அவரது இந்த புதிய முயற்சிக்கு மிகப்பெரிய பாராட்டும், இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன. அதனால், அடுத்து ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலும் அப்படத்தை, 'ரீமேக்' செய்யப் போகிறார். இந்நிலையில், 'ஹிந்தி பதிப்புக்கு நல்ல, 'டைட்டில்' இருந்தால் சொல்லுங்கள்...' என்று ஹிந்தி தெரிந்த ரசிகர்களிடம், 'டுவிட்டரில்' கேட்ட அவருக்கு, ஏராளமானோர் டைட்டில் கொடுத்துள்ளனர். அப்படி தனக்கு ரசிகர்கள் அனுப்பியதில், ஒரு நல்ல டைட்டிலை, ஒத்த செருப்பு சைஸ் - 7 படத்தில் ஹிந்தி, 'ரீமேக்'கிற்கு வைக்கப் போவதாக சொல்கிறார்.
— சினிமா பொன்னையா
கொல வெறியில், பூர்ணா!
சில படங்களில், வில்லியாக மிரட்டிய வரலட்சுமி, டோலிவுட்டில் ஒதுங்கி விட்டதால், இளவட்ட வில்லியாக கோலிவுட்டில் வலம் வரத் துவங்கியிருக்கிறார், பூர்ணா. அதோடு, தான், 'டூயட்' பாடிய, 'ஹீரோ'களின் படங்களில், அதிரடி வில்லியாக நடிப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார். 'எதற்காக, உங்கள் 'மாஜி ஹீரோ'களின் படங்களில் வில்லியாக நடிக்க விரும்புகிறீர்கள்...' என்று கேட்டதற்கு, இப்போது, என் பெயரைக் கேட்டாலே, 'இந்த நடிகை வேண்டாம்...' என்கின்றனராம். அதனால், அவர்கள் மீது, எனக்கு செம கோபம் உள்ளது. அப்படிப்பட்ட அவர்களை, 'அட்டாக்' பண்ண வேண்டுமென்றால், நான் வில்லியாக நடித்தால் தானே மொத்த ஆத்திரத்தையும் கொட்ட முடியும். அதனால்தான், என், 'மாஜி ஹீரோ'களின் படங்ளாக, தட்டித் தூக்குகிறேன்... என்கிறார்.
எண்ணத்தொலையாது; ஏட்டில் அடங்காது!
- எலீசா
விஜயுடன் நடிக்க, முதல் தகுதி இது தான்!
விஜய் படங்களில் நடிக்கும் நடிகையருக்கு, பெரும்பாலும், அவருடன் பாடல் காட்சிகளில் நடனமாடும் வாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக, விஜய் படங்களில் நடிக்க, நடிகை தேர்வு நடத்தும்போது, அவர், அதிரடி நடனமாடிய பாடல் காட்சிகளை போட்டு காண்பித்து, 'இதுபோன்ற பாடல்களில், விஜய்க்கு இணையாக நடனமாட முடியுமா?' என்று தான் கேட்கின்றனர், இயக்குனர்கள். அதையடுத்து, அவர்களை நடனமாட வைத்து, அந்த வீடியோவை, விஜய்க்கு அனுப்பி, அவரது ஒப்புதல் பெற்ற பிறகே, அந்த நடிகையரை, 'டிக்' அடிக்கின்றனர். அந்த அளவுக்கு விஜயுடன், 'டூயட்' பாடும் நடிகையரை, நடிப்பை விட நடனத்தை முன் வைத்தே தேர்வு செய்கின்றனர்.
— சி.பொ.,
சகோதரியையும் களமிறக்கிய, சாய்பல்லவி!
சைவ நடிகையாகவே வலம் வரும், சாய் பல்லவி, தன் தங்கை பூஜாவுக்கும் நல்ல கதைகளாக தேடி வந்தார். தற்போது, ஒரு தமிழ் படத்தில், அவரை இறக்கி விட்டுள்ளார். ஆனால், அக்கா தான் சுத்த சைவம், தங்கையாச்சும் கொஞ்சம் அசைவ நெடி வீசுவாரா என்று பார்த்த, 'கமர்ஷியல்' இயக்குனர்களுக்கு, 'அக்கா பாதையில் தான், நானும் பயணிக்கப் போகிறேன். அதனால், கொஞ்சுண்டு தொட்டுக்க, கடிச்சிக்க என்று யாராச்சும், அசைவ கதைகளோட தப்பித்தவறி, என் வீட்டுப் பக்கம் வந்துடாதீங்க...' என்று, முதலிலேயே தன் கொள்கையை அடித்து சொல்லி, கதவை இழுத்து மூடி விட்டார், பூஜா. ஒண்ணுக்குள்ளே ஒண்ணு, கண்ணுக்குள்ளே மண்ணாகியது!
— எலீசா
வில்லனாக கொம்பு சீவும் ஜெய்!
ஜெய்யின், கதாநாயகன் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்திருப்பதை அடுத்து, அவரும் ஆர்யா, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி பாணியில், வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். அதோடு, மேற்படி நடிகர்களெல்லாம் வில்லன் என்றாலும், சில நிபந்தனைகளை போட்டே நடிக்க, ஜெய்யோ எந்த மாதிரியான கொடூரமான வில்லனாக நடிக்கவும் தயாராக இருப்பதாக, கொம்பு சீவிக் கொண்டு நிற்கிறார். அதையடுத்து, 'இதுவரை, கதாநாயகிகளை கதற கதற காதலித்தேன். இனிமேல், கதாநாயகர்களை கதற கதற அடித்து பந்தாடப் போகிறேன். இதுவும் ஒரு சுகமான அனுபவம் தான்...' என்று, வில்லன் தோரணையில் கெத்தாக, 'பஞ்ச்' பேசுகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
'நடிப்புக்கு முழுக்குப் போட்டு, அரசியலில் புகுந்து கலக்கப் போகிறேன்...' என்று, அதிரடி காட்டி வந்த, ரயில் நடிகையால், எதிர்பார்த்தபடி முடியவில்லை. இதனால், 'மேக் - அப்' போட்டோமா, வசனம் பேசினோமா, துட்ட எண்ணினோமா என்பது மாதிரி இல்லை, அரசியல். வேர்த்து, விறுவிறுக்க உழைக்க வேண்டும். மேலும், மொத்த நிம்மதியும் போய் விடும் என்பதை புரிந்து கொண்டவர், தன் அபிமானிகளிடத்தில் சொல்லி, புலம்பி வருகிறார். அதையடுத்து, மலையை பிடிக்கப் போகிறேன் என்று சொல்லி, கையில் இருக்கிறதை விட்டு விடவேண்டாம் என்று நினைக்கும், ரயில் நடிகை, மறுபடியும் அரிதாரம் பூச திட்டமிட்டிருக்கிறார்.
'இருக்கறத விட்டுட்டு, பறக்கிறதுக்கு ஆசைப்பட்ட கதைத் தெரியுமா, உனக்கு?'
'ஆமாம்... அதுக்கென்ன இப்ப...'
'வீட்டிலிருந்தபடியே, முறுக்கு, தட்டை, வற்றல், வடாம், ஊறுகாய் போட்டு, சின்ன அளவில் வித்துட்டு இருந்த, நம்ம ராதிகா அம்மா, பெரியதாக சாதிக்க நினைச்சு, 'மார்க்கெட் பகுதியிலே பெரிய அளவில் கடை போட்டு, வியாபாரத்தை விருத்தி செய்யப் போகிறேன்'னு சொல்லி, அகல கால் வெச்சா... முதலுக்கே மோசம் போச்சு... வழக்கமா வர்ற வாடிக்கையாளர்கள் கூட, 'கடை துாரமா இருக்கு'ன்னு, போக முடியாம போச்சு.
'வியாபாரத்துக்கு வியாபாரமும் போய், கைக் காசும் போனது தான் மிச்சம். இப்ப திரும்பவும், வீட்டிலிருந்தபடியே, கேட்கிறவர்களுக்கு செஞ்சு குடுத்தா போதும் என்ற முடிவுக்கு வந்துட்டா...' என, இரு பெண்கள் பேசிக் கொண்டனர்.
சினி துளிகள்!
* இளவட்ட, 'ஹீரோ - ஹீரோயின்'களுக்கு அம்மாவாக நடிக்கும் ராதிகா, தனக்கான கேரக்டர், படம் முழுக்க இடம்பெறுவதாக இருந்தால் மட்டுமே, நடிக்க சம்மதிக்கிறார். 'டம்மி'யான அம்மா வேடம் என்றால், தடாலடியாக மறுத்து விடுகிறார்.
* 'தெலுங்கில் நான் நடித்த, மிஸ்டர் காமரேட் என்ற படத்தை பார்த்துதான், ஹிந்தி பட வாய்ப்பு என்னைத் தேடி வந்தது...' என்கிறார், ராஷ்மிகா மந்தனா.
அவ்ளோதான்!