PUBLISHED ON : மே 22, 2022

முதல்வராக ஆசைப்படும், தனுஷ்!
புதுப்பேட்டை மற்றும் கொடி என, சில அரசியல் படங்களில் நடித்துள்ள, தனுஷுக்கு, முதல்வர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது, தீராத ஆசையாம். அதனால், தெலுங்கில், ராணா நடித்த, லீடர் என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். காரணம், இந்த படத்தில், ராணா முதல்வர் வேடத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கு இயக்குனர், சேகர் கம்முலா, 'ஹீரோ' வேட்டையில் ஈடுபட்டபோது, தனுஷே தேடிச்சென்று அந்த வாய்ப்பை கைப்பற்றியுள்ளார். 'திரில்லர் கலந்த அரசியல் கதையில் உருவாகும் இந்த படத்தில், தற்போதைய அரசியல்வாதிகளை எல்லாம் அலற விடக்கூடிய ஒரு அதிரடியான முதல்வர் வேடத்தில், வரிந்து கட்ட போகிறேன்...' என்கிறார், தனுஷ்.
சினிமா பொன்னையா
சினிமாவுக்கு திரும்பிய, நடிகர் - நடிகையர்!
தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்ற, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெரிய அளவில் சாதனை செய்ததால், கமலஹாசன், சரத்குமார், குஷ்பூ, நமீதா மற்றும் கருணாஸ் என, பலரும் அரசியலுக்கு சென்றனர். ஆனால், அரசியலில் பெரிதாக சாதிக்க முடியாததை அடுத்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பி விட்டனர்.
அந்த வகையில், கமலஹாசன், இந்தியன் - 2, விக்ரம் படங்களில் நடிக்க துவங்கி விட்டார். சரத்குமார், தற்போது, என்கவுன்டர் என்ற படத்தில், 'ஹீரோ'வாக நடிக்க, குஷ்பு, அண்ணாத்த படத்திற்கு பிறகு, சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். கருணாசும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இப்படி, தாய் வீட்டுக்கே திரும்பி, 'இனிமேல், எக்காரணம் முன்னிட்டும், அரசியல் பக்கம் செல்லப் போவதில்லை. முழுநேர நடிகராகப் போகிறோம்...' என்று கூறுகின்றனர்.
— சி.பொ.,
தீயாக வேலை செய்யும், அஜித்குமார்!
ஒரு படத்தில் நடித்து முடித்து, திரைக்கு வந்த பின் தான், அடுத்த படம் குறித்த தகவலை அறிவித்து வந்தார், அஜித்குமார். தற்போது, ஒரு படத்தில் நடிக்க துவங்கியதுமே, அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளை வெளியிட துவங்கி விட்டார்.
இதுவரை ஆண்டிற்கு ஒரு படம் என்பதை, ஆண்டுக்கு இரண்டு படங்கள் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதே, அதற்கு காரணம்.
மேலும், ஒவ்வொரு படத்திலும் அதிக கால அவகாசம் எடுத்து நடித்து வந்தவர், இப்போது தீயாக வேலை செய்ய துவங்கி விட்டார். அடுத்து நடிக்கப் போகும் படங்கள் குறித்த கதை விவாதத்திலும் கலந்து கொள்கிறார். அந்த அளவுக்கு முன்பைவிட தற்போது, தன் திரைப் பயணத்தில் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளார்.
சினிமா பொன்னையா
இரட்டிப்பு மகிழ்ச்சி!
நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து, விருது பெற்ற, கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து வியந்து போன நடிகர்களில், ஜெயம் ரவியும் ஒருவர். அதனால், அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மணிரத்னத்தின், பொன்னியின் செல்வன் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷை நடிக்க கேட்டபோது, தன் ஆசை நிறைவேறப் போவதாக நினைத்துள்ளார், ஜெயம் ரவி.
ஆனால், அப்போது, அண்ணாத்த படத்தில் நடித்ததால், 'கால்ஷீட்' பிரச்னையால், கீர்த்தி சுரேஷால் ஒப்பந்தமாக முடியவில்லை. ஆனபோதிலும் இப்போது, ஜெயம்ரவி நடிக்கும் இரண்டு படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ். அதனால், 'ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது அவரோ, என் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி, இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்து விட்டார்...' என்கிறார், ஜெயம் ரவி.
— சி.பொ.,
சினி துளிகள்!
* சிவகார்த்திகேயன் நடித்துள்ள, அயலான் படம், இந்தியாவில் உருவாகும் முதல், 'ஏலியன் சயின்ஸ் பிக் ஷன் கிராபிக்ஸ்' படமாக உருவாகி இருக்கிறது.
* கமல் நடித்துள்ள, விக்ரம் படத்தில், அவருக்கு ஜோடியாக, 29 வயது, ஷன்வி என்ற கன்னட நடிகை நடித்திருக்கிறார்.
அவ்ளோதான்!
