
ஆல் இந்திய நடிகராக முயலும், சமுத்திரக்கனி!
தமிழ் சினிமாவில் பல, 'ஹிட்' படங்களை இயக்கியவர், சமுத்திரகனி. ஆனால், நாடோடிகள் -- 2 தோல்விக்கு பிறகு, படம் இயக்குவதை மூட்டை கட்டி விட்டு, முழு நேர நடிகரானார்.
அந்த வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில், 'பிசி'யாக நடித்து வந்தவர், இப்போது, பாலிவுட்டிலும் கால் பதிக்க, தீவிர பட வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்நேரத்தில் தன் நட்பு வட்டார நடிகர்கள், 'அடுத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள்?' என்று சமுத்திரக்கனியை கேட்டால், 'சினிமாவில் நடிப்பதற்கே போதிய நேரமில்லை. பல தயாரிப்பாளர்கள், 'கால்ஷீட்' கேட்டு, 'கியூ'வில் நிற்கின்றனர்.
'அதனால், மீண்டும் படம் இயக்க வேண்டும் என்பதை நான் மறந்து, ரொம்ப காலம் ஆயிற்று. இனிமேல், இந்திய அளவில், ஒரு முன்னணி நடிகராக வேண்டும் என்பதை நோக்கியே, என் கலைப்பயணம் சென்று கொண்டிருக்கிறது...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
ஜெயம் ரவியின், 'சென்டிமென்ட்!'
மணிரத்னத்தின், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த, ஜெயம்ரவி, கோலிவுட்டில் தன்
முத்திரையை அழுத்தமாக பதித்திருக்கிறார். இதன் காரணமாக, அவரை வைத்து படம் இயக்க, பல இயக்குனர்கள் படையெடுத்தனர்.ஆனால், ஜெயம்ரவியோ, ஏற்கனவே தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்த, தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாக சொல்லி தவிர்த்து விட்டார். அதோடு, தனி ஒருவன் முதல் பாகம், 'சூப்பர் ஹிட்' படம் என்பதால், அந்த, 'சென்டிமென்ட்' காரணமாக, அப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த, நயன்தாராவுக்கு, இரண்டாம் பாகத்தில் நடிக்க, அழைப்பு விடுத்துள்ளார், ஜெயம் ரவி.
— சி.பொ.,
கொடூர வில்லனுக்கு, 'நோ' சொன்ன, சத்யராஜ்!
தமிழ் சினிமாவில், வில்லனாக நடித்து பிரபலமாகி, அதன் பின், 'ஹீரோ' ஆனவர் தான், சத்யராஜ். சமீப காலமாக, குணச்சித்திர வேடங்களில் நடித்து, தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படத்தில், கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்க, சத்யராஜை அணுகினர்.
'தற்போது, 'சென்டிமென்ட்' ஆன கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறேன். இந்நிலையில், கொடூரமான வில்லனாக நடித்தால் அந்த, 'சென்டிமென்ட்' இடம் பறி போய்விடும். அதிகப்படியான கொடூரத்தனம் இல்லாத, 'சாப்ட்' ஆன வில்லன் என்றால், நடிக்க தயாராக இருக்கிறேன்...' என்று சொல்லி, இந்தியன் - 2 படத்தில் நடிக்க, மறுத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* முன்பெல்லாம் இயக்குனர்கள் கதை சொல்லும்போது, கை கட்டி வாய் மூடி கேட்டு வந்த மெரினா நடிகர், சமீபகாலமாக, இயக்குனர்கள் சொல்லும் கதையில், கை, கால், மூக்கு எல்லாவற்றையும் நுழைக்கிறார். அதோடு படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பிறகும், ஏகப்பட்ட திருத்தங்கள் செய்யச் சொல்லி, இயக்குனர்களை, 'டார்ச்சர்' செய்கிறார். இதன் காரணமாக, மெரினா நடிகர் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி புகை மண்டலம் கிளம்பி கொண்டிருக்கிறது.
* குழந்தை பெற்ற பிறகும், 'கிளாமரை' தெறிக்க விட்டபடி மறுபிரவேசத்தை துவங்கியிருக்கும், 'ஸ்வீட்' கடை பெயருள்ள நடிகையை, மேல்தட்டு, 'ஹீரோ'கள் சுத்தமாக ஓரங்கட்ட துவங்கி விட்டனர். என்றாலும், அம்மணி அசரவில்லை.
அடுத்தபடியாக இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு 'ஹீரோ'களை, 'அட்டாக்' பண்ணி வருகிறார். அதோடு, குழந்தை பிறப்பு தன் இளமை மினுமினுப்பை குறைத்து விட்டதாக கருதும் அம்மணி, விரைவில் வெளிநாடு சென்று, அதிநவீன லேசர் சிகிச்சை செய்து, மீண்டும் புதுப்பொலிவுடன் வந்து கோலிவுட், 'ஹீரோ'களை கிறங்கடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
சினி துளிகள்!
* முன்பெல்லாம் தன் மானேஜருடன் மும்பையில் இருந்து சென்னை வரும், காஜல் அகர்வால், இப்போது, கணவருடன் வந்து இறங்குகிறார்.* சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும், 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த நிலையில், தீபாவளிக்கு, அவர் நடிப்பில் வெளியான, பிரின்ஸ் படம் தோல்வி அடைந்து விட்டதால், கடும், 'அப்செட்'டில் இருக்கிறார்.
* தனுஷ் நடித்துள்ள, வாத்தி படம், தெலுங்கில், சார் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக, மலையாள நடிகை, சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார்.
அவ்ளோதான்!