
ஷங்கர் படத்தில், ரன்வீர் சிங்!
இந்தியன்- 2 படத்தை அடுத்து, தமிழில், விக்ரமை வைத்து தான் இயக்கிய, அந்நியன் படத்தை, ஹிந்தியில், ரன்வீர் சிங்கை வைத்து, 'ரீ - மேக்' செய்வதாக கூறி வந்தார், இயக்குனர் ஷங்கர். ஆனால், ௧,௦௦௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் இயக்க உள்ள, வேள்பாரி என்ற சரித்திர படத்தில், அவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார், ஷங்கர்.
'முதலில் தென்னிந்திய நடிகர்களை இப்படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டேன். பாலிவுட், 'ஹீரோ'களை நடிக்க வைத்தால் தான், படத்தை, பெரிய அளவில் வியாபாரம் செய்ய முடியும் என்பதால், ரன்வீர் சிங்கை, வேள்பாரி படத்தின் நாயகனாக்கி, அப்படத்தை உலக அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
'ஆக் ஷன்' கோதாவில் குதிக்கும், ரஜினி!
ரஜினி நடித்த, அண்ணாத்த உள்ளிட்ட சில, 'சென்டிமென்ட்' படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இதற்கு காரணம், தன் பெருவாரியான ரசிகர்கள், 'ஆக் ஷன்' பிரியர்கள் என்பதால், ஜெயிலர் படத்தில், மீண்டும், 'ஆக் ஷன் ஹீரோ'வாக உருவெடுத்திருக்கிறார், ரஜினி.
இந்த படத்தில், ஏழு சண்டை காட்சிகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், சண்டை காட்சிகளில் பழையபடி, 'பவர்புல்'லாக தன்னை கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதற்காக, தீவிர பயிற்சி எடுத்து, 'ஆக் ஷன்' காட்சிகளில் நடித்து வருகிறார்.
அதனால், 'ரஜினியின், ஜெயிலர் படம், 'ஆக் ஷன்' பிரியர்களுக்கு, செம, 'மாஸ்' படமாக இருக்கும்...' என்கின்றனர், படக்குழுவினர்.
—சி.பொ.,
அடம் பிடித்த, வடிவேலு!
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம், மிகப்பெரிய அளவில், ரசிகர்களை கவர வேண்டும் என்பதில், தீவிரம் காட்டி வருகிறார், வடிவேலு. அதன் காரணமாக, இந்த படத்தில், ஏற்கனவே நடித்த பல காட்சிகளை, திரும்பத் திரும்ப நடித்துக் கொடுத்தவர், 'எனக்கும், 'ஹீரோ'களை போன்று, ஒரு அதிரடி பாடல், இந்த படத்தில் இடம்பெற வேண்டும்...' என்று தயாரிப்பாளரிடம் அடம் பிடித்துள்ளார்.
இதற்காகவே, மும்பையில் இருந்து ஒரு மாடல் அழகியை வரவழைத்து, பிரமாண்ட செட் அமைத்து, 'அப்பத்தா...' என்ற பாடல் காட்சியை படமாக்கி இருக்கின்றனர். இந்த ஒரு பாடலை படமாக்குவதற்கே, இரண்டு கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* தளபதி நடிகர் நடித்த சில படங்கள், ஏற்கனவே வெளியான, 'ஹிட்' படங்களின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. தற்போது தெலுங்கில், தளபதி நடித்துள்ள மூன்றெழுத்து படத்தின் பாடல் ஒன்றும், ஏற்கனவே தெலுங்கில், 'ஹிட்' அடித்த ஒரு படத்தின், 'டியூனை' அப்பட்டமாக காப்பி அடித்து, 'கம்போஸ்' செய்யப்பட்டதாக, சர்ச்சை எழுந்திருக்கிறது.எனவே, இனிமேல் தான் நடிக்கும் படங்களின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர்களிடம், 'ஏற்கனவே வெளியான படங்களின் கதைகள் மற்றும் பாடல்களை தயவு செய்து காப்பி அடித்து விடாதீர்கள். இதனால், உங்களை விட நான் தான் அதிகமாக விமர்சிக்கப்படுகிறேன்...' என்று, முன்கூட்டியே நிபந்தனை போட திட்டமிட்டுள்ளார், தளபதி.
* காக்கா முட்டை நடிகையை மேல் தட்டு, 'ஹீரோ'கள் அனைவருமே கழற்றிவிட்ட போதும், அவர் கலங்கவில்லை. இப்போது, கதையின் நாயகி, 'ரூட்'டை கையில் எடுத்திருப்பதால், சில மேல் தட்டு இயக்குனர்களுக்கு கல்லெறிந்து வருகிறார்.
அதோடு, தாரா மற்றும் மூனுஷா நடிகையருக்கு இணையாக, தன்னை மையமாக கொண்ட கதைகளை உருவாக்கினால் உடனடியாக, 'கால்ஷீட்' கொடுத்து, நடிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார்; சம்பள விஷயத்திலும் நிறையவே விட்டுக் கொடுக்கிறார்.
அதோடு, கருத்து சொல்லும் படமாக இருந்தாலும், குளியல் மற்றும் படுக்கையறை காட்சிகளில், சன்னி லியோன் ரேஞ்சுக்கு புகுந்து விளையாட தான் தயாராக இருப்பதாகவும் சொல்லி, இயக்குனர்களை அலறவிட்டுள்ளார், அம்மணி.
சினி துளிகள்!
* சீரியல்களில் நடித்து வரும், தன் அண்ணன் மணிகண்டனுக்கும், தான் நடிக்கும் படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடிப்பதற்கு, வாய்ப்பு வாங்கிக் கொடுத்து வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.* நடிகர் விஜய் -ராஷ்மிகா நடித்துள்ள, வாரிசு படத்தின், 'ரஞ்சிதமே...' என்ற பாடல், பீஸ்ட் படத்தின், 'அரபிக் குத்து...' பாடலைப் போலவே, 'சூப்பர் ஹிட்' அடித்துள்ளது!
* சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில், சந்திரமுகி வேடத்தில், ஜோதிகா நடித்தார். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்சுடன் சந்திரமுகியாக, நடிகை கங்கணா ரனாவத் நடிக்கப் போகிறார்.
அவ்ளோதான்!