PUBLISHED ON : ஜூலை 24, 2011

இயக்குனர்கள் நடிக்கும், ஞானி!
இயக்குனர் தருண்கோபி, முரடனாக நடிக்கும் படம், ஞானி. இப்படத்தில், இவருடன் சேர்த்து மொத்தம், 16 இயக்குனர்கள் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். அதுமட்டுமின்றி, தலா ஒரு பாடல் வீதம் மொத்தம், ஐந்து இசையமைப்பாளர்களும் இப்படத்தில் இடம் பெறுகின்றனர். இந்திய சினிமா வரலாற்றில் இது புதுமை...' என்கிறார் பட நாயகனான தருண்கோபி.
— சினிமா பொன்னையா.
ஸ்ரேயா - மேக்னாவுக்கு எதிர்ப்பு!
சமீப காலமாக சினிமா விழாக்களுக்கு அரைகுறை ஆடை அணிந்து, ஆபாசமாக வருகை தரும் ஸ்ரேயா, மேக்னா ராஜுக்கு, இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, மேற்படி நடிகை களுக்கு சேலைகள் அனுப்பி வைத்து, பெண்மையின் பெருமை காக்குமாறும் அறிவுரை வழங்க திட்ட மிட்டுள்ளனர். மூன்று முழமும் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று!
— எலீசா.
நடிகர் அஜ்மல்கான், தன் பெயரை, 'யுவன்' என்று மாற்றியுள்ளார்.
அதிர்ச்சியில் கோலிவுட் நடிகைகள்!
உதயன் படத்தில் நடித்த பிரனீதா, அடுத்து, சகுனி படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க தமன்னா, அமலா பால் உள்ளிட்ட நடிகைகள் முயற்சி எடுத்து வந்த நிலையில், திடுதிப்பென்று பிரனீதாவுக்கு அந்த வாய்ப்பு சென்றிருப்பதால், மேற்படி நடிகைகள் மட்டுமல்லாது, கோலிவுட்டின் ஏனைய முன்னணி நடிகைகளும் அதிர்ச்சியில் உள்ளனர். காலம் செய்த கோலத்துக்கு யாரை வெறுப்பது?
— எலீசா.
தயாரிப்பாளரான சித்தார்த்!
தற்போது நடித்துள்ள, 180 படத்துக்குப் பிறகு, தமிழில் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் சித்தார்த். மேலும், தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத் துள்ள சித்தார்த், தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளிலும் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். 'ஏற்கனவே, உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள நீங்கள் படம் இயக்குவீர்களா?' என்று கேட்டால், 'அப்படியொரு ஆசையே எனக்கில்லை. சினிமாவைப் பொறுத்தவரை, நடிப்பு பிளஸ் தயாரிப்பு இந்த இரண்டு துறையுமே எனக்கு போதும்...' என்கிறார்.
— சி.பொ.,
போஜ்பூரி சினிமா த்ரிஷாவுக்கு அழைப்பு!
மார்க்கெட் இழந்த தென்னிந்திய நடிகைகளுக்கு நீண்ட காலமாக, போஜ்பூரி மொழி சினிமாதான் புகலிடம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் நக்மா, ரம்பா உள்ளிட்ட நடிகைகள் பல ஆண்டுகளாக போஜ்பூரியில் கொடிகட்டி பறந்தனர். இந்நிலையில், தற்போது, த்ரிஷாவுக்கு அங்குள்ள படாதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அவரோ, 'இப்போதும் என் மார்க்கெட் கெட்டியாகத்தான் உள்ளது...' என்று அவர்களுக்கு பதிலுரைத்து விட்டார். மீனுக்கு வாலை காட்டு; பாம்புக்கு தலையைக் காட்டு!
— எலீசா.
மீண்டும் வீரப்பன் கதை!
ஏற்கனவே சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை சினிமா உலகினர் துருவி, துருவி படமாக்கி விட்டனர். இந்நிலையில், கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி சென்ற போது, நிகழ்ந்த சில ரகசியமான தகவல்களை மையப்படுத்தி, அட்டகாசா என்ற பெயரில் ஒரு கன்னட படம் தயாராகிறது. தமிழ்ப்பட இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் இப்படத்தில், அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!
