
கரிகாலன் படத்தில் ஆயிரம் யானைகள்!
கரிகாலன் படத்தில், ஆயிரம் யானை களை, விக்ரம் வெட்டி சாய்ப்பது போல் ஒரு காட்சியுள்ளதாம். அதற்காக, ஆஜானபாகுவான யானைகளை தேடிய போது தமிழ்நாடு, கேரளத்தில் எங்கும் கிடைக்கவில்லை. அதனால், தாய் லாந்து, வியட்நாம் நாடுகளில் இருந்து, 50 யானைகளை கொண்டு வந்து, அவற்றை கிராபிக்ஸ் மூலம், ஆயிரம் யானைகளாக்க முடிவு செய்து உள்ளனர்.
— சினிமா பொன்னையா.
டோனி வேடத்தில் பிரகாஷ் ராஜ்!
தமிழ், தெலுங்கில் உரு வாகும் ஒரு படத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் டோனி வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். இதில், ஏற்கனவே டோனி யுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய லட்சுமி ராய் நடித்தால், படத்துக்கு பரபரப்பு கிடைக்கும் என்று அவரை அணுகினர்; ஆனால், பிரகாஷ் ராஜ் ஹீரோ என்றதும், அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டார் லட்சுமி ராய்.
— சி.பொ.,
த்ரிஷா கொடுத்த உத்தரவாதம்!
சத்யம் படத்தில், விஷாலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் த்ரிஷாவைத்தான் கேட்டனர். ஆனால், ஓவர் கிளாமர் தனக்கு செட் ஆகாது என்று அந்த படத்தை, அப்போது, தவிர்த்ததால், அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இந்நிலையில், தற்போது ஒரு படத்தில் விஷாலுடன் நடிக்கிறார் த்ரிஷா. அதோடு, கவர்ச்சிக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. கதைக்கு தேவையான ஆடை குறைப்புக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார். போன சுரத்தைப் புளியிட்டு அழைத்தது போல்!
— எலீசா.
நரேனுக்கு, 'குங்பூ' பயிற்சி!
தம்பிக்கோட்டை படத்திற்கு பிறகு, நரேனுக்கு ஹீரோ சான்ஸ் கிடைக்காததால், முகமூடி படத்தில் வில்லனாக நடிக்கிறார். வில்லன் வேடம் என்றாலும், அதை, சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் நரேன், கதைப்படி தன் வேடத்துக்கு, குங்பூ கலை தெரிந்திருக்க வேண்டும் என்பதால், பாங்காக் சென்று, குங்பூ பயிற்சி எடுத்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
— சி.பொ.,
அனுஷ்கா சாதனை!
'நான் வெற்றியை ஒருபோதும் தலைக்கு ஏற்றுவதில்லை...' என்று சொல்லும் அனுஷ்காவுக்கு, மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது லட்சியமாக உள்ளதாம். 'அப்படியொரு சான்ஸ் கிடைக்கும் போது தான், நான் சினிமாவில் சாதித்து விட்டதாக கர்வம் கொள்வேன்...' என்கிறார். இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடித்த கதை.
— எலீசா.
தமிழ் சினிமாவில் உலக அழகிகள்!
ஏற்கனவே உலக அழகிகள் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகியோர் சினிமாக்களில் நடித்ததைத் தொடர்ந்து, தற்போது, மேலும் சில அழகிகள் அறிமுகமாகின்றனர். அவர்களில், முகமூடி பட நாயகி பூஜா ஹெக்டே, தடையறத்தாக்க பட நாயகி ராகுல் பரீத்சிங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வந்த பேரை வாழ வைக்கும் வைகுண்ட மாநகர் இதுவே!
— எலீசா.
ஜீவா கொடுத்த அதிர்ச்சி!
கோ படத்திற்கு பிறகு, நீதானே என் பொன் வசந்தம் படத்தில், ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ள ஜீவா, அதன் பிறகு வந்த படங்களில் நடிக்க, மூன்று கோடி ரூபாய் கேட்டுள்ளார். ஜீவாவின் படங்களுக்கு அந்த அளவு வியாபாரமே இல்லை என்பதால், அவரிடம் கதை சொல்லி, கால்ஷீட்டுக் காக காத்திருந்த எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்ட சில இயக்குனர் கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!

