
சோழ மன்னர் வேடத்தில் அஜித்!
ஆரம்பம் படத்தை அடுத்து, அஜித்தை வைத்து இயக்க, ஒரு சரித்திர கதையை, எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து, தயார் செய்து வருகிறார், இயக்குனர் விஷ்ணுவர்தன். அப்படம், தஞ்சை பெரிய கோவிலை மையப்படுத்திய கதையில் உருவாக உள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், இதுபற்றி எழுத்தாளர் பாலகுமாரன் கூறுகையில், 'அஜித் நடிக்கும் படத்திற்கான கதையை தயார் செய்து வருகிறோம்; ஆனால், அது தஞ்சை பெரிய கோவில் கதையோ, ராஜராஜ சோழனுடைய கதையோ அல்ல; இது, வேறு ஒரு சோழ மன்னனின் வாழ்க்கை வரலாறு...' என்றார்.
— சினிமா பொன்னையா
ஆக் ஷன் ரோலில் நயன்தாரா!
அஜித் நடித்த, பில்லா படத்தில், பிகினி உடையில் நடித்த நயன்தாரா, ஆக் ஷன் காட்சியிலும் நடித்திருந்தார். அதையடுத்து, தற்போது, விக்ரமுடன், இருமுகன் படத்தில் இணைந்துள்ளவருக்கு, மீண்டும் ஆக் ஷன் வேடம் கிடைத்துள்ளது. இப்படத்தில், ரகசிய உளவாளியாக சண்டை காட்சியில் நடிக்கயிருக்கிறார். அக்காட்சியை படமாக்குவதற்கு முன், அவருக்கு சில தினங்கள், சண்டை பயிற்சி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!
— எலீசா
கதாநாயகர்களை முந்திச் செல்லும் தமன்னா!
பாகுபலி படத்திற்கு பின், தமன்னாவின் படக்கூலி எகிறியுள்ளது. சீனுராமசாமி இயக்கத்தில், தர்மதுரை படத்தில், கதாநாயகன் விஜயசேதுபதியை விட, அதிகம் சம்பளம் வாங்கி உள்ளார். அதேபோல், தற்போது ஜீவாவின் புதிய படத்தில் நடிப்பதற்கும், ஜீவாவை விட அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!
— எலீசா
சர்ச்சை படத்தை தவிர்த்த வரலட்சுமி!
கேரள அமைச்சர்கள் மீது, ஆபாச குற்றச்சாட்டு வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை சரிதா நாயர். அதை மையமாக வைத்து, தற்போது, மலையாளத்தில் ஒரு படம் தயாராகிறது. இப்படத்தில் நடிக்க, தாரைத்தப்பட்டை நாயகியும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமியை அணுகினர். ஆனால், தன் தந்தையும் ஒரு அரசியல்வாதி என்பதால், 'அரசியல்வாதிகளுக்கு எதிரான கதையில் நடிக்க வேண்டாம்...' என்று முடிவெடுத்து, அப்படத்தை தவிர்த்து விட்டார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
தாரா நடிகையுடன் நடித்த பின், மீண்டும், பீட்சா நடிகரின், மார்க்கெட் எகிறி விட்டது. அதனால், மறுபடியும் நடிகையுடன் கூட்டணி அமைக்க, விருப்பம் தெரிவித்து வருகிறார் நடிகர். ஆனால், நடிகையின் மார்க்கெட் கருதி, பல நடிகர்கள் ஏற்கனவே, 'வெயிட்டிங் லிஸ்டி'ல் இருப்பதால், பீட்சா நாயகனுக்கு டேக்கா கொடுத்து வருகிறார் தாரா நடிகை.
தன் முதல் பட நாயகனான தல நடிகரை வைத்து, படம் இயக்க முயற்சித்த கத்தி இயக்குனரை, மேற்படி நடிகர் கண்டுகொள்ளவே இல்லை. அவரிடம் கதை கூற, மாதக்கணக்கில் அலைந்து, நொந்து போன அவர், இப்போது, அக்கதையை தெலுங்கு, சூப்பர் ஸ்டார் நடிகரை வைத்து, இயக்க தயாராகி விட்டார்.
சினி துளிகள்!
* தமிழில் வெளியான, மவுனகுரு என்ற படத்தை, இந்தியில், அகிரா என்ற பெயரில், ரீ-மேக் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
* ஓவியம் வரைவதில் கைதேர்ந்த நடிகையான ஹன்சிகா, விரைவில் சென்னையில் ஓவிய கண்காட்சி நடத்த இருக்கிறார்.
* துல்கர் சல்மான் நடித்து வெளியான, சார்லி மலையாள படத்தின் தமிழ் ரீ -மேக்கில் நடிக்க, விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
* மாதவன் நடித்து வெளியான, இறுதிச்சுற்று படம், இதுவரை, 11 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
* அர்த்தநாரி படத்தில், போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார், வெளுத்துக்கட்டு அருந்ததி.
அவ்ளோதான்!

