
மீண்டும், பாகுபலி!
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து, ஒரே படமாக மீண்டும் வெளியிட இருக்கிறார், ராஜமவுலி. அதற்காக, தற்போது, தேவையற்ற காட்சிகளை, 'எடிட்' செய்து வருகிறார். அடுத்தபடியாக, பாகுபலிக்கு இணையாக பிரமாண்ட பட்ஜெட்டில், மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
— சினிமா பொன்னையா
விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
பசங்க, களவாணி மற்றும் வாகை சூடவா ஆகிய படங்களுக்கு பின், விமலின் மார்க்கெட் சரிந்து விட்டது. இந்நிலையில், தற்போது, களவாணி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகயிருப்பதால், உற்சாகமடைந்துள்ளார் விமல். மேலும், முதல் பாகத்தில் நடித்த, சூரி மற்றும் கஞ்சா கருப்புவின் காமெடி பெரிதாக பேசப்பட்டதால், இரண்டாம் பாகத்திலும், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு, இயக்குனர் சற்குணத்தை கேட்டுக் கொண்டுள்ளார், விமல்.
— சி.பொ.,
'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
கும்கி படத்தை, கேரளா காடுகளில் தான் படமாக்கினார், அதன் இயக்குனர், பிரபு சாலமன். தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை, தாய்லாந்து நாட்டு காடுகளில் படமாக்கி வருகிறார். தாய்லாந்தில் யானைகள் உலவும் காடுகள் அதிகம் உள்ளதால், அங்கு படப்பிடிப்பு நடத்தி வருகிறார். இப்படமும், யானைகள் சம்பந்தப்பட்ட கதையில் தான் உருவாகிறது. மேலும், இப்படத்தில், டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா நட்சத்திர தம்பதியரின் மகளான, ஷிவானி நாயகியாக அறிமுகமாகிறார். கூத்துக்கு தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!
— எலீசா
காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
இதுவரை, விஜய்யுடன் காமெடியனாக நடித்து வந்த வடிவேலு, மெர்சல் படத்தில், குணசித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து, இனிமேல் காமெடி மட்டுமே இல்லாமல், குணசித்திர வேடங்களிலும் நடிக்க முடிவெடுத்துள்ளவர், படிப்படியாக காமெடியில் இருந்து விலகி, தன், 'இமேஜை' மாற்றப்போவதாக கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
இஞ்சி இடுப்பழகி நடிகையின் மார்க்கெட், சரிந்து கிடப்பதால், அவருக்கான படக்கூலியும், 'கிடுகிடு'வென இறங்கியுள்ளது. ஆனாலும், அதை வெளிக்காட்டாமல், இப்போதைக்கு கொடுக்கிற சம்பளத்தில் நடிக்க, தான் தயாராக இருப்பதாக கூறி வருகிறார். அதோடு, ஓரிரு படம் ஹிட் அடித்த பின், மறுபடியும் சம்பளத்தை சத்தமில்லாமல் உயர்த்தி விடலாம் என்பதே, நடிகையின் தற்போதைய நோக்கமாக உள்ளது.
தாரா நடிகையின் முகத்தில், முதிர்ச்சி ஏகத்துக்கு தென்படுவதால், கேஷூவலாக இருப்பதை தவிர்க்கிறார். தன்னிடம் யாராவது கதை சொல்ல வந்தால் கூட, 'மேக்- அப்' இல்லாமல் முகத்தை காட்டுவதில்லை. அத்துடன், ஸ்பாட்டில் முகம் காட்டும் போது, தன், 'மேக்- அப்' துளியும் கலைந்து விடக்கூடாது என்பதற்காக, ஒரு ஒப்பனை பெண்ணை கூடவே வைத்திருக்கிறார்.
சினி துளிகள்!
* 'கலெக்டராக நடித்துள்ள, அறம் படம் எனக்கு புதிய இமேஜை ஏற்படுத்திக் கொடுக்கும்...' என்கிறார், நடிகை நயன்தாரா.
* பாக்மதி சரித்திர படத்தை அடுத்து, புதிய பட கதை கேட்டு வருகிறார், நடிகை அனுஷ்கா.
* பேரன்பு படத்தை அடுத்து, காளி படத்தில், விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேருகிறார், நடிகை அஞ்சலி.
அவ்ளோதான்!

