
வழிபாட்டில் பூக்களுக்கு என்றுமே முக்கியத்துவம் தரப்பட்டு வந்துள்ளது. ஒரு காலத்தில், பூக்களை, தெய்வத்துக்கும் மேலாக மதித்தனர். சிவனுக்கு சமர்ப்பிக்க இருந்த மாலையின் பூவை நுகர்ந்து பார்த்ததற்காக, அரசியின் மூக்கையே வெட்டிய சிவ பக்தர், செருத்துணை நாயனார்.
திருப்பதியில், பெண்கள் யாரும் பூ வைப்பதில்லை. அங்கு பூக்கும் மலர்கள் யாவும் மாதவனுக்கு உரியது. இறைவனுக்கு சாத்தப்படும் இத்தகைய சிறப்பு மிக்க பூக்கள் கட்டுபவர் காலில் கூட, பூ பட்டுவிடக் கூடாது என்பதற்காக, திருநெல்வேலி மாவட்டம், ஊர்க்காடு கோட்டியப்பர் கோவிலில், 'திருப் பூ பலகை' என்ற அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது.
மார்கழி மாதத்தில் பூக்கோலமிடுவது வழக்கம். அந்த மாதத்தில், இந்தக் கோவிலுக்குச் சென்று வருவது உத்தமம்.
அகத்தியர், தென் திசை வந்த போது, தாமிரபரணிக் கரையிலுள்ள தாத்ரிவனம் எனப்படும் ஊர்க்காட்டில், சிவ பூஜை செய்வதற்காக, ஆற்று மணலை எடுத்து, லிங்கம் வடித்தார். ஆனால், அது சரியாக வரவே இல்லை. மணல் உதிர்ந்தபடியே இருந்தது.
கோபமடைந்த அகத்தியர், 'சிவனே... உனக்கு கோட்டி - பைத்தியம் பிடித்து விட்டதா... இப்படி அடம் செய்கிறாயே...' என்றபடியே, மணல் உதிர்ந்த லிங்கத்தை மார்பில் சாய்த்தார். அப்போது, லிங்கம் நிலைபெற்றது.
தான் பயன்படுத்திய கோட்டி என்ற வார்த்தையையே பயன்படுத்தி, 'கோட்டியப்பர்' என்று, சிவனுக்கு பெயர் சூட்டினார்.
இன்னொரு கருத்தும் உண்டு. 'கோஷ்டி' என்றால் ஒருங்கிணைதல். மணல் ஒருங்கிணைந்ததால், கோஷ்டியப்பர் என்ற பெயர் உருவாகி, கோட்டியப்பராக மருவியிருக்கலாம் என்றும் சொல்வர்.
இந்தக் கோவிலில் எல்லா பரிவார தெய்வங்களின் கையிலும், தாமரை மலர் இருக்கிறது. இங்குள்ள தெய்வங்களுக்கு, காலில் மிதி படாமலும், சம்மணமிட்டும் பூ கட்டும்போது, காலுக்கு கீழே மலர்கள் சென்று விடாமல் இருக்க, பூப்பலகை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
அந்தக் கல் பலகையில், புத்தம் புதிதாக பறித்த மலர்கள் கொட்டப்படும். பலகையின் முன், காலைக் கீழே தொங்கவிடும் வகையில் மற்றொரு கல் பலகை பதித்துள்ளனர். பூ கட்டுபவர்கள் அதில் அமர்ந்து பூ கட்டுவர். இப்போதும், திருவிழா காலத்தில், இந்த பலகையில் அமர்ந்தே பூ கட்டுகின்றனர்.
பக்திக்கு தேவை, மரியாதை. அதைக் கற்றுத்தரும் கோவிலாக இது உள்ளது.
இங்கு, சிவகாமி அம்பாள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கின்றனர். திருநெல்வேலி- - பாபநாசம் சாலையில், அம்பாசமுத்திரம், 40 கி.மீ., இங்குள்ள கிருஷ்ணன் கோவில் திருப்பத்தில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் ஊர்க்காடு கிராமம் உள்ளது. மார்கழியில் இங்கு சென்று வாருங்கள்.
தி. செல்லப்பா