PUBLISHED ON : ஏப் 19, 2020

செல்வம் பெருகும் நாளாக, அட்சய திரிதியையை கொண்டாடுகிறோம். செல்வம் மட்டும் போதுமா, அதை அனுபவிக்க நீண்ட ஆயுள் வேண்டுமே. அட்சய திரிதியை நன்னாளில், ஆயுள் அபிவிருத்திக்காக, சிறிய பாத்திரத்தில் இருக்கும் சின்னஞ்சிறு சிவலிங்கத்தை தரிசிக்க, நாகப்பட்டினம் மாவட்டம், திருவாய்மூர் தியாகராஜர் கோவிலுக்கு செல்ல வேண்டும். இந்த லிங்கத்தை வழிபட்டால், அகால மரணம் ஏற்படாது.
சிவனிடம், 'விடங்கம்' என்ற, சிறிய லிங்கத்தை பூஜை செய்வதற்காக கேட்டான், தேவர் தலைவனான இந்திரன்.
'இந்திரலோகத்தில், அதை வைத்து பூஜை செய்வது கஷ்டம்...' எனக் கூறினார், சிவன்; இந்திரன் வற்புறுத்தியதால், அதைக் கொடுத்து விட்டார்.
அந்த லிங்கம், பூலோகத்தில் இருக்க வேண்டுமென விரும்பினார், சிவபெருமான்.
முசுகுந்த சக்கரவர்த்தி எனும் அரசன் அப்பகுதியை ஆண்ட போது, மிருகங்களால், மக்கள் துன்பப்பட்டனர். அவர் வேட்டையாட, காவிரி கரையிலுள்ள வில்வ மர காட்டுக்கு வந்தார். அங்கு, சில முனிவர்கள் இருந்தனர்.
அவர்கள் முசுகுந்தனிடம், 'இன்று, சிவராத்திரி. இந்நாளில், மிருகங்களை வேட்டையாடுவதை சாஸ்திரம் அனுமதிப்பதில்லை. எனவே, வேட்டையை கைவிடு...' என்றனர்.
அதை ஏற்று, அன்றிரவு அவர்களுடன் தங்கினார், அரசர்.
அவருக்கு காட்சி தந்த சிவன், 'இந்திரனிடம் இருக்கும் விடங்க லிங்கத்திற்கு, பூலோகத்தில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வாலாசுரன் என்பவனை கொல்பவர்களுக்கு, எதைக் கேட்டாலும் தருவதாக வாக்களித்துள்ளான், இந்திரன். நீ, அவனை கொன்று, விடங்க லிங்கத்தை பரிசாக பெற்று வா...' என்றார்.
'விடங்கம் என்றால் எப்படியிருக்கும் என்பதை, எனக்கு காட்ட வேண்டும்...' என்றார், முசுகுந்தன்.
சிவனும், சிறிய லிங்கமாக காட்சியளிக்க, அங்கு ஒளி வெள்ளம் எழுந்தது.
பரவசப்பட்ட முசுகுந்தன், 'நீங்கள், இந்திரலோகத்திலும் இருங்கள்; இங்கேயும் இருங்கள். நான் கோவில் எழுப்புகிறேன்...' என்றார்.
அதை ஏற்று, அத்தலத்தில் தங்கினார், சிவன்.
இங்கு, நவக்கிரகங்கள் நேர் வரிசையில் உள்ளது விசேஷம். காசியை போல, இங்கும், எட்டு பைரவர்கள் உள்ளனர். நான்கு பேர், சிலை வடிவிலும்; நான்கு பேர், தண்டம் என்னும் ஆயுத வடிவிலும் காட்சியளிக்கின்றனர்.
மூலவர், வாய்மூர்நாதருடன், அம்பிகை, பாலினும் நன்மொழியாள் அருள்பாலிக்கிறாள்.
நாகப்பட்டினம் - வேதாரண்யம் சாலையில், 25 கி.மீ., துாரத்தில், திருவாய்மூர் உள்ளது.
ஏப்., 25, காலை, 11:31 முதல் ஏப்., 26 மதியம், 12:21 வரை, அட்சய திரிதியை காலம். இந்நேரத்தில், இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.
காலை, 7:00 - 11:30 மணி, மாலை, 4.30 - -8.00 மணி வரை, கோவில் திறந்திருக்கும்.
தி. செல்லப்பா