உயிரே...உனக்காக... தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் - ஏ.நடராஜன் - பகுதி (4)
உயிரே...உனக்காக... தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் - ஏ.நடராஜன் - பகுதி (4)
PUBLISHED ON : டிச 26, 2010

இதுவரை:
அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களான கம்ப்யூட்டர் விஞ்ஞானியான நரேனுக்கும், கதக் கலைஞரான மதுரிமாவுக்கும் திருமணம் முடிந்து, அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சுக்கு சென்றனர். அங்கு, மதுரிமாவின் பிரமாண்டமான வீட்டை பார்த்து பிரமித்து போனான் நரேன். விருந்து உபச்சாரம், முதலிரவு போன்ற சம்பிரதாயங்கள் முடிந்து, அலுவலகம் செல்வதாக கூறிச் சென்றான் நரேன். ஆனால், அவன் அலுவலகமே செல்லவில்லை என்ற தகவல் கிடைத்தது மதுரிமாவுக்கு —
மதுரிமாவுக்கு குழப்பமாக இருந்தது. அலுவலகம் செல்வதாகச் சொல்லிவிட்டு, அவசர அவசரமாக சென்ற நரேன், அலுவலகம் பக்கமே போகவில்லையா?
இது தவறான தகவலாக இருக்கக்கூடும் என்று, தலையை உலுக்கிக் கொண்டாள்.
பந்தம் ஏற்பட்டு பத்து நாட்கள் தான் ஆயிற்று என்றாலும், பரவசமான இந்த சூழ்நிலையில், தன்னை தனியாக விட்டு சடுதியில் மறைந்து போன நரேனை கோபிப்பதா?
இல்லை... கோபம் என்பதே தெரியாத மதுரிமா, தன்னைத் தானே வருத்திக் கொண்டாள். தானும் சாப்பிட வில்லை.
மறுநாளுக்கு மறுநாள் ஆட இருந்த அயிட்டத்தை ஒத்திகை பார்க்கவும் மனம் ஈடுபடவில்லை. எத்தனை முறை மொபைல்போனை வெறித்துப் பார்ப்பது. கண்ணுக்கினியவனின் குரல் மொபைல்போனில் ஒலிக்காதா என்று ஏங்கியது தான் மிச்சம். அப்படியே சோபாவில் அயர்ந்து தூங்கிப் போனாள்.
விமானப் பயண ஜெட்லாக், முந்தைய இரவு நரேன் வாரி வழங்கிய இன்ப அதிர்வுகள் அனைத்தும் அவளுக்கு தாலாட்டாக அமைந்து விட்டது.
எதேதோ கனவுகள்... சொர்க்கலோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த மதுரிமா, சட்டென்று விழித்துப் பார்த்தாள். அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த நரேனின் முகம், அவளை சிலிர்ப்புக்குள்ளாக்கியது.
வார்த்தைகள் வரவில்லை. மென் முறுவல் மட்டுமே தவழ்ந்தது.
முறுவலிக்கும் உதட்டிற்கு, மென்மையாக தன் அதரத்தால் பரிசளித்தான் நரேன்.
''சாரி டியர்... கொஞ்சமும் எதிர்பார்க்காதபடி நிகழ்ந்து விட்டது!''
நிகழ்ந்தது என்னவென்று சொல்லவில்லை. பகல், மாலையாகி, மாலை முன் இரவாகி விட்டது.
அவனைத் தழுவியவாறு எழுந்து நின்றாள். சடுதியில் முகத்தை கழுவி, துடைத்து, ஒப்பனை எதுவுமில்லாமல், புனையா ஓவியம் போல அவன் முன் நின்றாள்.
அவனிடம், 'ஏன் தாமதம்? எங்கே போனீங்க?' என்றெல்லாம் கேட்கவில்லை.
''சாப்பிடலாமா? பசிக்கலையா...''
''வா...'' என்று அவள் கையை பற்றினான் மெதுவாக. அவளுக்கு அப்போதே இணக்கம் முகிழ்த்துவிட்டாலும், மெதுவாக அவனை டைனிங் டேபிள் பக்கம் அழைத்துப் போனாள்.
அவர்கள் உட்கார்ந்ததுதான் தாமதம், பணியாட்கள் பரிமாறத் துவங்கி விட்டனர். அமெரிக்காவில், பணியாட்களை அமர்த்திக் கொள்ள கோடீஸ்வரர்களால் தான் முடியும்.
வகை வகையான இரவு உணவு —
செட்டிநாட்டு பலகாரமா... நாகர்கோவில் அயிட்டமா... கர்நாடக மாநில போளியா... எல்லாம் விதவிதமாக போட்டி போட்டன. நரேனுக்கு எரிச்சலாக இருந்தது. உணவுக்கு அதிக முக்கியத்துவம் தராதவன் அவன். புது மாப்பிள்ளையை கவனிக்க, மதுரிமாவின் பெற்றோர் முழு வீச்சில் இருந்தனர். அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் என்று பதார்த்தங்களை தொட்டுவிட்டு, கையை கழுவினான் நரேன்.
கையை துடைப்பதற்கு, சின்ன டவலை நீட்டினாள் மதுரிமா. அவன் செல்லமாக, மதுரிமாவின் சுடிதார் துப்பட்டாவில் துடைத்தான்.
மதுரிமாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
மீண்டும் தங்கள் அறைக்கு போனதும் உரிமையோடு கேட்டாள்.
''அப்படி பறந்தீர்கள்... கடைசியில் அலுவலகத்திற்கே போகவில்லையா?''
''யார் சொன்னது?''
''நான் தான் விசாரிச்சேன்...''
''வேவு பார்த்தியா மதுரிமா?'' அவன் பேச்சில் உக்கிரம் எட்டிப் பார்த்தது.
''சே... சே! மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டேன். உங்க மொபைல் ஸ்விட்ச் ஆப் என்று தகவல் சொல்லியது; பயந்து போனேன். அதனால்...'' என்று தயங்கினாள் மதுரிமா.
''ஓ.கே., நான் ஒண்ணும் தப்பா நினைக்கலே. அலுவலகத்திற்குத் தான் புறப்பட்டேன். திடீர்ன்னு கவிதா போன் செஞ்சா... ஏதோ பிராப்ளம்ன்னு. அதான் அங்கே போகும்படி ஆகி விட்டது.''
என்ன பிரச்னை என்று மதுரிமா கேட்கவில்லை; அவனும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம், 'டிவி' பார்த்தனர்; கொஞ்ச நேரம் கல்யாண ஆல்பம் பார்த்தனர். மதுரிமா அப்படியே அயர்ந்து தூங்கி விட்டாள். கனவு அவளை ஆட்சி செலுத்தியது.
காலை மலர்ந்தது —
அவனுக்கு முன்பாக குளித்து, மலர்ந்த தாமரைப் பூப் போல, அவன் பக்கம் வந்து நின்றாள். மதுரிமா எதையாவது கேட்பாள். என்ன பதில் சொல்வது என்று மனதில் யோசித்தவாறு இருந்தான் நரேன்.
மஜந்தா கலர் புடவையில் அம்சமாக இருந்தாள் மதுரிமா. லேசான ஒப்பனை செய்திருந்தாள்.
''இன்றைக்கு மாலை எங்கே போக வேண்டும் தெரியுமா?'' மெலிதான குரலில் கேட்டாள்.
அமைதியாக தலையை ஆட்டினான் புன்னகையுடன் —
''சாண்டியாகோ போறோம்... மாலையில் அங்கே நமக்கு, எங்கள் நாட்டிய பள்ளியில் வரவேற்பு.''
''எஸ் மேடம்... நான் தயார்,'' என்றான் நாடக பாணியில் —
'கல கல'வென இரண்டு பேரும் சிரித்தனர். முதல் நாளை இருவரும் மறந்திருந்தனர்.
சாண்டியாகோ விமான நிலையம் பிரமாண்டமாக இருந்தது; கூட்டமும் அலைமோதியது.
கூட்டத்தில் ஒரு முகம், மதுரிமாவை இம்சைப்படுத்தியது. அந்த முகம் கவிதா —
''யார் இந்த கவிதா? எனக்கும், நரேனுக்கும் இடையில் எதற்காக இவளது பிரவேசம்? கவிதாவின் பிரவேசம், வானத்திலும், வானூர்தியிலும் மட்டும் தானா? இல்லை, தரை இறங்கிய பின்னும் தொடரப் போகும் கண்ணாமூச்சி விளையாட்டா? நரேனுக்குள் ஏனிந்த தவிப்பு?''
மதுரிமாவின் உள்ளத்தில், கவிதாவை பற்றிய எண்ண அலைகள், கேள்விகளாய், ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து, அவள் மனதை அலைக்கழித்தன.
இந்த கவிதா எனும் அலை, கரையில் நிற்கும் என் கால்களைத் தொட்டு விளையாடி, கடலுக்கே திரும்பிச் செல்லும் சாதாரண அலையா... இல்லை, என்னை முழுவதுமாய் நனைத்து, காலை வாரி என்னை கடலுக்குள் சுருட்டி இழுக்க பார்க்கும் சுனாமி அலையா?
எனக்கும், நரேனுக்கும் இடையில் கவிதாவா? இல்லை கவிதாவுக்கும், நரேனுக்கும் இடையில் நானா?
நோ... என்னையும், அவளையும் ஒப்பிட்டு பார்ப்பதே தவறு.
யெஸ்... எத்தனையோ விமானப் பயணிகளை போல், நரேனும் ஒரு விமானப் பயணி; கவிதா ஒரு விமான பணிப்பெண். கவிதா மற்ற பயணிகளுக்கு எப்படியோ, அதேபோல் தான் நரேனுக்கும் நத்திங் எல்ஸ்.
நான் அப்படி இல்லை. நரேன் என் கணவன். நான் அவன் தொட்டு தாலி கட்டியிருக்கும் மனைவி. நானும், கவிதாவும் நரேனுக்கு ஒன்றல்ல.
பெண்களுக்கே உரிய, 'பொசசிவ்னஸ்' அல்லது 'இன்செக்யூரிட்டி' மதுரிமாவை, கவிதாவின் மேல் ஆவேசம் கொள்ளச் செய்தது.
தான் நிற்குமிடம் விமான நிலையம் என்பதாலும், தன்னைச் சுற்றி ஏராளமான ரசிகர்கள் நிற்பதாலும், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் மதுரிமா.
சாண்டியாகோ விமான தளத்திலிருந்து, விமானம் ஒன்று, இரைச்சலை கிளப்பிக்கொண்டு, ரன்-வேயில் ஓடி, மெல்ல மெல்ல மேலே கிளம்ப, மதுரிமாவிற்குள் மீண்டும் கவிதாவின் நினைவு. தன் மனதிற்குள் கவிதா புகுந்து, அந்த விமானத்தை போலவே இரைச்சலிட்டு, சுற்றி சுற்றி பறப்பதை போல் ஓர் உணர்வு.
நோ... நான் தோற்கும் பெண் இல்லை. எனக்கும், நரேனுக்கும் நடந்து முடிந்த திருமணம் ஒன்றும், நான் அரங்கேறி ஆடும் கதக் இல்லை. சபாவின் அடுத்த நிகழ்ச்சியாக கவிதாவை அரங்கேற்றி ஆடவிட்டு விட்டு நான் வேஷம் கலைந்து வெளியேறும் விஷயமல்ல என் திருமணம்; இது ஆயிரம் காலத்து உறவு. இந்த கட்டை வேகும் வரை, என் உடலிலும், உள்ளத்திலும், உயிரிலும் ஒன்றாய் கலந்துவிட்ட உறவு.
மதுரிமா தலையை உலுக்கி ஆட்டினாள். தலைக் குனிந்த பின்பு ஈரக் கூந்தலை ஆட்டி சிலிர்க்கையில் தெளித்து விழும் தண்ணீர் துளி போல், தரையில் உதிர்ந்து உலர்ந்து போவாள் இவள்.
''மது... என்னாச்சு உனக்கு?''
அவள் கவிதாவை பற்றித் தான் யோசிக்கிறாள் என்பதை அறிந்து கொண்ட நரேன், ஏதும் அறியாதவனைப் போல பேசினான்.
மதுரிமா இயல்பாக கேட்டாள் —
''வேர் இஸ் கவிதா?''
''கவிதா? கவிதா போய் ரொம்ப நேரமாச்சு மது.''
அவன் மெதுவாக சிரித்தபடி சொன்னான். சிரிப்பு செயற்கையாக இருந்தது.
''யெஸ். கவிதா போயிடணும்... போயே ஆகணும்,'' எனச் சொல்லிவிட்டு, சற்று சத்தமாகவே சிரித்தாள் மதுரிமா. சிரிப்பு ரொம்பவும் இயற்கையாக இருந்தது. கூடவே, அவள் சிரிப்புக்குள் வேறு ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதை நரேனால் உணர முடிந்தது. அவள் சிரித்த விதமே, அதை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்பதை போல் அமைந்திருந்தது.
''மது... வாட் டு யூ மீன்?''
''ஐ மீன் வாட் ஐ ஸே, லெட் ஷி கான் பார் எவர்...''
மதுவையும், நரேனையும் வரவேற்க வந்திருந்தவர்களுக்கு, அவர்கள் இருவரும் என்ன பேசுகின்றனர், எதுபற்றி பேசுகின்றனர் என்பது புரியாமல் குழப்பமாக இருக்க, அவர்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது. அது நரேனுக்கு கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.
மதுரிமா பற்றியும், பொதுவாக பெண்கள் பற்றியும் சிந்தித்தபடி, நரேன் அவளது கைத்தலம் பற்றியபடி, சாண்டியாகோ விமான நிலையத்தின் ஹாலை கடந்து நடந்து கொண்டிருந்தான்.
ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் எத்தனை பயணிகள். விமானப் பயணம் என்பதால், அதன் வேகத்தை போலவே, அனைவரிடத்திலும் ஏதோ ஒரு வேகம், ஒரு பரபரப்பு, புறப்படுகிற, தரையிறங்குற விமானங்கள் பற்றிய விவரங்களை, ஒலி பெருக்கியில், யாரோ ஒருத்தி அழகான ஆங்கிலத்தில் அறிவித்துக் கொண்டிருந்தாள்.
மதுரிமாவும் நரேனும் விமான நிலையத்தின் வெளிப்புறத்திற்கு வந்தனர். அமெரிக்க வல்லரசின் விமான நிலையம் என்பதால், சாண்டியாகோ விமான நிலையம் பார்வைக்கு ரம்மியமாகவும், கம்பீரமாகவும் அமைந்திருக்க, புல்வெளிகளும், பூச்செடிகளுமாய் அமைந்த லானை அடுத்து வரிசை வரிசையாய் கார்கள் நிறுத்தப்பட்டு, கண்காணிப்பில் பயணிகள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
மதுரிமாவையும், நரேனையும் அழைத்துச் செல்ல வந்திருந்த காரில், அவர்கள் இருவரும் ஏறி அமர, கார் மெல்ல நகர்ந்து, வளைந்து, மெயின்ரோட்டை நோக்கி திரும்பி ஓடிக் கொண்டிருந்தது.
மதுரிமாவும், நரேனும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருக்க, டிரைவர் காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான்.
அவர்களிடையே, அவர்கள் விரும்பாத ஒரு சிறிய மவுனம் ஆட்சி செய்து கொண்டிருந்தது.
'கவிதா விஷயத்தில், ஒருவேளை நான் அதிகமாக அவசரப்பட்டு விட்டேனோ... என் வெளிப்பாடு இப்படி இருந்திருக்கக் கூடாதோ, பெண்களுக்கே உரிய அளவுக்கு மீறிய அச்சத்தின் காரணமாக, சந்தேகத்தின் பெயரால் நான் மிகவும் அசாதாரணமாக நடந்து கொண்டு விட்டேனோ?'
இந்த நினைவோடு, பெண்களுக்கே இயல்பான இரக்கத்தோடு, அவளது பார்வையை அவன் பக்கமாக திருப்பி, அவனையே உற்றுப் பார்த்தபடி புன்னகைத்தாள்.
''சாரி...'' என்று மெதுவாக சொன்னாள்.
''கூல்... இட்ஸ் ஓ.கே.,''
பற்றியிருந்த அவளது கரத்தை விலக்கி, அவளை மெதுவாக தன் பக்கமாக இழுத்து அழுத்தி அணைத்தபடி அவனே பேசினான்...
''லுக் மது... கவிதாவை நினைத்து வீணாக குழப்பிக் கொள்ளாதே. நான் ஒரு விமானப் பயணி... அவள் ஜஸ்ட் ஏர்-ஹோஸ்டஸ்... தட்ஸ் ஆல். அவள் எந்த மாதிரி பெண் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், உன் கணவன் அந்த மாதிரியான ஆள் இல்லை. பிலீவ் மீ.''
அவன் சொல்லியதில், அவன் மீதுள்ள நம்பிக்கையில், அவனது இழுப்புக்கும், அணைப்புக்கும் தோதாக, அவன் தோள் மீது சரிந்தாள் மதுரிமா. அவளது இடுப்பைச் சுற்றி இருந்த அவனது கைகள், மெல்ல வருடியபடி, சற்றே மேலே வர, மதுரிமா அவனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை அறிந்தவளாய், அவனது கைகளை பற்றி விலக்கியபடி, நிமிர்ந்து அமர்ந்தபடி முன் சீட்டில் அமர்ந்து, காரை ஓட்டிக் கொண்டிருக்கும் டிரைவரை நினைவுப்படுத்தி, நாணத்துடன் சிரித்தாள்.
வழுவழுப்பான சாலையில் கார் வேகமாக நழுவி ஓடிக் கொண்டிருந்தது. அவளை சுலபமாய் நம்ப வைத்து, தன் மீது சரிய வைத்த வெற்றியை அல்லது சந்தோஷத்தை, நரேன் தனக்குள் நினைத்துக் கொண்டான். அந்த நினைப்பும் அதிகநேரம் நீடிக்கவில்லை. — தொடரும்.
