PUBLISHED ON : அக் 06, 2013

விக்டோரியா பெக்காம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரிட்டனின், பிரபலமான பாப் பாடகி; பிரபலமான மாடல் அழகியும் கூட. ஆனாலும், பிரிட்டனின் புகழ் பெற்ற, கால்பந்து வீரர், டேவிட் பெக்காமை திருமணம் செய்த பின் தான், இவர், உலகம் முழுவதும் பிரபலமானார்.
விக்டோரியா - டேவிட் தம்பதிக்கு, நான்கு குழந்தைகள் உண்டு. மூத்த மகன், புரூக்ளினுக்கு, 14 வயதாகிறது. லண்டனில் உள்ள, பிரபல பள்ளியில் படித்து வருகிறான். சமீபத்தில், புரூக்ளின் படிக்கும் பள்ளியில், பெற்றோர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அதே நாளில், லண்டனின் வேறு இடத்தில், அதாவது பள்ளியை விட்டு, தொலை தூரத்தில் உள்ள ஒரு இடத்தில், விளம்பர நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில், பிசியாக இருந்தார் விக்டோரியா. இதனால், பள்ளியில் நடந்த பெற்றோர் கூட்டத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்காக சற்றும் அசரவில்லை அவர். படப்பிடிப்பை, வேகமாக முடித்து விட்டு, ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தி, தன் மகன் படிக்கும் பள்ளிக்கு பறந்து சென்றார்.
குறித்த நேரத்தில், பெற்றோர் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த சம்பவம், பிரிட்டனில் பரபரப்பாக பேசப்பட்டது.'இந்த உலகிலேயே, எனக்கு மிகவும் பிடித்தது, என் குழந்தைகள் தான். அவர்களின் நலனுக்காக, எதை வேண்டுமானாலும் செய்வேன்...' என, பெருமையுடன் கூறுகிறார், விக்டோரியா.
— ஜோல்னா பையன்.
