PUBLISHED ON : மே 08, 2011

அமைதி நிலை!
* அலைந்து கொண்டிருக்கும்
மனதிற்குள்
மரத்திற்கு மரம் தாவும்
குரங்காக...
தாவிப் பாயும் எண்ணங்கள்
நிலை கொள்ளாமல்...
* ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு
மாறும் - கணப் பொழுது
காட்சிகள்...
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்
ஓடி வந்து
கரையேற முடியாமல்
சுருண்டோடும் தோல்வி நிலை போல!
* நிமிடத்திற்கொரு முறை
மாறிப் போகும்
அலை பாயும் எண்ணங்கள்!
* வித்தியாசமாக —
பணம் தேடி
மனம் தேடி
மார்க்கம் தேடி
புகழ் தேடி
பதவி தேடி...
* அமைதியாய்,
ஆவேசமாய்,
எரிமலையாய்
எப்படியெல்லாமோ
ஏறிச் சாடி
தொட்டு விடத் துடிக்கும்
தூரங்கள்
வித விதமாய்!
* தூங்கும் போதும்
இமைப் பறவைகளுக்குள்
இன்னும் கனவுத் திரைகளில்
காட்சித் தீவனங்கள்...
அமைதியில்லாமல்
மனச் சஞ்சலங்களுக்குள்...
* எத்தனை ஓடியும்,
எவ்வளவு தேடியும்
கிடைக்காமல் போகும்
அமைதியின் மோன நிலை!
* என்றேனும் உள்ளுக்குள்ளே
தேடிப் பார்த்து புரிந்து
கொண்டோமா...
நிம்மதி வேறு எங்குமில்லையடா
நமக்குள்ளேயே உள்ளது என்று!
— ரஜகை நிலவன்,
துபாய்.
