இளமையாக இருப்பதற்கு அனைவருமே விரும்புகின்றனர். வயதானவர்கள் கூட பியூட்டி பார்லருக்கு சென்று, தங்கள் தோற்றத்தை இளமையாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.
என்னதான் பியூட்டி பார்லருக்கு சென்றாலும், ஒருவருடைய இளமைத் தோற்றத்தை தீர்மானிப்பது அவர் அணியும் ஆடைகள்தான்! ஒருவருடைய நிறத்துக்கும், உருவத்துக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்தால், அவர் அதிக வயதுடையவராக இருந்தாலும், குறைந்த வயதுடையவர் போல இளமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பார். இன்றைக்கு பெரும்பாலானவர்கள் விரும்புவது தொள, தொளவென்று இல்லாமல், அளவு குறைவாக இருக்கும் ஆடைகளைத்தான்.
முட்டியைத் தொடும் சட்டையும், தரையைக் கூட்டும் பேண்ட்டும் அணிந்த காலம் மலையேறி விட்டது.
அதேபோல், பெண்களும் முழங்கை வரை நீளும் ரவிக்கையையும், எட்டு கஜம் புடவையையும் மறந்து, ஸ்கர்ட், டி-சர்ட், டாப்ஸ், கவுன் என்று மாறி விட்டனர். அதிலும், தற்போது மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் டி-சர்ட் மற்றும் டாப்ஸ் என்று ஆடைகளின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது நீங்கள் விரும்பும் பிரபல கம்பெனிகளின் ஆடைகளை தவணை முறையில் பணம் கொடுத்து வாங்கும் வசதியும் வந்து விட்டதால், உங்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்குவதற்குத் தடையேதுமில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்தி, மீதியைக் கொஞ்சம், கொஞ்சமாக செலுத்தினால் போதும். இதனால், கொண்டு செல்லும் பணத்துக்கு ஏற்ற ஆடையாக பார்த்து தேர்ந்தெடுப்பது குறைந்து, நமக்கு விருப்பமான அதிக விலையுள்ள ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சேலை கட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, தென் மாநிலங்களின் பாரம்பரிய உடையாகவும் சேலை இருப்பதால், இங்கு விதவிதமான சேலைகள் கிடைக்கின்றன. எப்போதும் அணியாவிட்டாலும், விழாக் காலங்களில் சேலை அணிவதை பெரும்பாலான இளம்பெண்கள் விரும்புகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சேலை கட்டத் தெரியாததால், அவர்களின் அம்மாக்களே சேலை கட்ட உதவி செய்கின்றனர்.
இவர்களின் கவலையைத் தீர்க்கும் விதமாக தற்போது, 'ரெடிமேட் சேலைகள்' தயாரிக்கப்பட்டுள்ளன. இதை, இரண்டு நிமிடத்திலேயே அணிந்து கொள்ளலாம். கொசுவம், மடிப்பு என எந்தத் தொந்தரவும் இல்லாமல், எல்லாம் ஏற்கனவே மடிக்கப்பட்டு, 'பின்' செய்யப்பட்டிருக்கும். இது தவிர, இரண்டு பக்கமும் அணிந்து கொள்ளக் கூடிய ரிவர்சபிள் சேலைகள், பாக்கெட் வைத்த சேலைகள் என்று புதிய வடிவமைப்புடன் கூடிய சேலைகளைத் தயாரிப்பதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. ஆடை உலகில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மாற்றங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பாவாடை, சல்வார் கமீஸ்,சுடிதார் ஆகியவற்றில் உள்ள நாடாவுக்கு பதிலாக எலாஸ்டிக் வைத்து பயன்படுத்துவது.
சிலருக்கு இடுப்பு மட்டும் பெரிதாக இருக்கும். இவர்களுக்கு எலாஸ்டிக் வைத்த ஆடைகள் நன்கு பொருந்திப் போகும்.
இது தவிர, ஜிப் வைக்க வேண்டிய இடத்தில் பட்டன் வைப்பது, ஒரு பக்கம் மட்டும் ஸ்லீவ் வைத்துக் கொள்வது என்று மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது கர்ப்பமான பெண்களுக்கான உடைகளும் வடிவமைக்கப்படுகின்றன. கர்ப்பிணிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் அவர்களின் உடலில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சில சமயம் முதல் வாரம் அணிந்த ஆடையை மறுவாரம் அணிய முடியாமல் போய்விடும். இதைத் தவிர்ப்பதற்காக கர்ப்பிணிகளுக்கென்று தனி உடைகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் அணிவதற்கு எளிதாகவும், உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்ச்சி அடைவதாகவும் இருக்கும். அதே
நேரம் துவைப்பதற்கும் எளிதானதாக இருக்கும். சிந்தடிக், காட்டன் போன்ற துணிகளில் இவை தயாராகின்றன.
இவற்றில் பிரின்டட் மற்றும் எம்ப்ராய்டரி செய்யப்பட்டவை, பிளைன் என பல வகைகள் உள்ளன. இதுபோன்ற ஆடைகள் பெரும்பாலும் அதிக நீளமுடையதாக இருக்கும். சில ஆடைகளில் ஸ்லீவ் குறைவாகவும், நீளம் அதிகமாகவும் இருக்கும். பல வகையான வண்ணங்களில் இவை கிடைக்கின்றன. இவற்றுடன் சல்வார், பேன்ட், கோட் ஆகியவற்றை அணிந்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் மட்டும்தான் அணிய வேண்டும் என்றில்லாமல், எப்போது வேண்டுமானாலும் இவற்றை அணிந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளசுகளை மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரையும் ஈர்த்துள்ள ஆடைகளுள் ஒன்று ஜீன்ஸ். அணிவதற்கு எளிதாக உள்ளது. துவைக்காமல் பயன்படுத்தலாம், நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம். உடற்கட்டை நன்கு எடுத்துக் காட்டுகிறது போன்ற காரணங்களால், ஜீன்சை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
முதலில் ஆண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஜீன்ஸ், இன்று பெண்களாலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பூட்கட், ஸ்ட்ரெய்ட் பிட் என பல வகையான ஜீன்ஸ்கள் உள்ளன. பெண்களுக்கெனத் தனியாக ஜீன்ஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன. தற்போது கர்ப்பிணிகளுக்கான ஜீன்ஸ்களும் கிடைக்கின்றன. சுடிதாரை போலவே இருக்கும் லெகின்ஸ், சுடிதாரிலிருந்து சற்றே மாறுபடுகிறது. சுடிதாரில் இருக்கும் நாடாவுக்கு பதிலாக இதில் எலாஸ்டிக் வைக்கப்பட்டிருக்கும். மெல்லிய துணியால் தயாரிக்கப்பட்ட இவை, உடலின் வெப்ப நிலையை சமச்சீராக வைத்துக் கொள்ள உதவு கின்றன.
லைட் வெயிட் சுடிதார்கள் அணிவதற்கு எளிதாகவும், ஸ்டைலாகவும் இருக்கும். தற்போது அம்மா - மகள் டிரெண்ட் வெகு வேகமாக பரவி வருகிறது. அதாவது தாய் - மகள் இருவரும் உடை உடுத்துவதில் துவங்கி, ஹேர் ஸ்டைல், நகைகள், ஒப்பனைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது இதன் சாராம்சம். இப்போதுள்ள அம்மாக்கள் தங்களுடைய மகள்களைப் போலவே இளமையாக இருக்க விரும்புகின்றனர். அதற்கேற்றவாறு உடற்பயிற்சி செய்து, தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றனர். விளம்பரங்களில் கூட அம்மா - மகள் இணைந்து வருவது தற்போது அதிகரித்துள்ளது. அம்மா - மகளுக்கான பேஷன் ÷ஷா, சிறந்த அம்மா - மகள் போட்டி ஆகியவையும் பெரும்பாலான இடங்களில் நடத்தப்படுகின்றன. இவை தாய்க்கும், மகளுக்கும் இடையே அதிகப்படியான நெருக்கத்தை உருவாக்குகின்றன. தவிரவும், சின்னக் குழந்தைகள் அணியும் உடைகளில் உள்ள டிசைன்களை போலவே, அம்மாவின் உடைகளிலும் டிசைன்கள் வடிவமைக்கப்படுகின்றன.
பாய் பிரன்ட் டிரெண்டும் தற்போது அதிகரித்து வருகிறது. அதாவது, தங்களுடைய காதலன் அல்லது கணவருடைய ஜீன்ஸ், சட்டை, டி-சர்ட், பேன்ட், கோட் போன்றவற்றை அணிந்து கொள்வர். அதாவது, ஆண் உடைகளை பெண்ணும் அணிவது இந்த கலாசாரம். வீட்டில் இருக்கும் ஆடைகளையே அணிந்து கொள்வதால், இதற்கெனத் தனியாக செலவு செய்ய வேண்டியதில்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, பருத்தி, வாழைமட்டை போன்ற இயற்கை பொருட்களிலிருந்து நூல் தயாரித்து, அதில் இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட வண்ணங்களைச் சேர்த்து, ஆடைகள் நெய்யப்படுகின்றன. இந்த மாதிரியான ஆடைகளை தற்போது பெரும்பாலானவர்கள் விரும்பி வாங்குகின்றனர்.
- குஜிலி ஆன்ட்டி.