/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
காந்தியின் புகழ்பாடும் காந்திகிராமம்!
/
காந்தியின் புகழ்பாடும் காந்திகிராமம்!
PUBLISHED ON : அக் 02, 2011

பல்வேறு மொழிகள், மதங்கள், இனங்கள் கொண்ட இந்தியாவை ஒருங்கிணைத்து, ஆங்கி லேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றுத் தரப் போராடிய காந்திஜியை, தெய்வப் பிறவியாகவே மக்கள் கருதினர். அவரை ஒருமுறையாவது தரிசனம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியரும் அக்கால கட்டத்தில் நினைத்தனர்.
கடந்த, 1946ம் ஆண்டு, காந்திஜி தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். ரயில் மூலம், திருச்சியில் இருந்து மதுரை சென்ற அவரை, திண்டுக்கல்லை அடுத்து உள்ள சின்னாளபட்டி அருகே, அந்த ஊர் மக்களும், சுற்றுப்புற கிராம மக்களும் தரிசனம் செய்துவிட நினைத்தனர். ஆனால், காந்திஜி அங்கு கலந்து கொள்வதற்கான எந்த நிகழ்ச்சியும் இல்லை. இதையறிந்த மக்கள், ரயிலை வழிமறித்து, எப்படியாவது காந்திஜியை தரிசிக்க திட்டமிட்டனர். சின்னாளபட்டி கிராமத்தின் கிழக்கே, சிறுமலையின் அடிவாரத்தில், ரயில்வே லைன் அருகே ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். அவ்வழியாக காந்திஜி பயணம் செய்த ரயில் வந்தவுடன், ஓடோடிச் சென்று மறித்தனர்.
மக்களின் மாசில்லாத அன்பை உணர்ந்த மகாத்மா, பொக்கை வாய் சிரிப்போடு, தான் பயணம் செய்த பெட்டியில் இருந்து எழுந்து வந்து, ரயில் பெட்டி கதவருகே நின்று, அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்தார். தெய்வத்தை தரிசித்த பரவசத்தை மக்கள் அடைந்தனர். பின், தன் தமிழக பயணத்தை காந்திஜி தொடர்ந்தார்.
காந்திஜி தரிசனம் தந்த அந்த இடம் தான், காந்திகிராமம் என்ற பெயரில், சர்வதேச அளவில் புகழ் பெற்ற சேவை இல்லமாக தற்போது செயல்பட்டு வருகிறது. காந்திகிராம அறக் கட்டளை, காந்திகிராம பல்கலைக் கழகம் என, ஆலமரம் போல் விரிந்து, பரந்து, கிராமப்புற மக்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த காந்திகிராமம் உருவானதற்கு ஒரு வரலாறே உள்ளது.
நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற காந்திஜியின் வேட்கையை உணர்ந்து, அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர் கஸ்தூரிபா காந்தி. சுதந்திரப் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்த போது, கஸ்தூரிபா மறைந்தார். எதற்கும் மனம் தளராத காந்திஜி, கஸ்தூரிபா இறந்த போது, கண்ணீர் சிந்தினார். அந்த கால கட்டத்தில், நாடெங்கும் இருந்து நன்கொடைகள் குவிந்தன. அவற்றை ஒன்று திரட்டி, ஒரு கோடி ரூபாயை, காந்திஜியிடம் வழங்கினார் டாக்டர் சரோஜினி நாயுடு. அந்த வினாடியே, 'நன்கொடையாக திரட்டப்பட்ட பணத்தை கொண்டு, கஸ்தூரிபாவின் பெயரில் ஒரு அறக்கட்டளை துவக்கப்படும். இந்த அறக்கட்டளை நாடு முழுவதும் உள்ள அபலை பெண்கள், குழந்தைகளின் நல்வாழ்விற்காக பாடுபடும்...' என்று அறிவித்தார் காந்திஜி.
இதையடுத்து, கஸ்தூரிபா பெயரில் துவக்கப்பட்ட அறக்கட்டளையின் சார்பில், சமூக மேம்பாட்டு பணிகள் துவக்கப் பட்டன. இதன் ஒரு பகுதியாக, காந்தீய தம்பதிகளான டாக்டர் சவுந்திரம், டாக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் காந்தி தரிசனம் தந்த இடத்தில் காந்திகிராமத்தை துவக்கினர். சின்னாளபட்டி மக்கள் மனம் உவந்து கொடுத்த பல ஏக்கர் நிலப்பரப்பில், காந்திகிராமம் செயல்படத் துவங்கியது. கஸ்தூரிபாவின் பெயரில் பல்வேறு சேவை நிலையங்கள் துவக்கப்பட்டன. கல்வி, மருத்துவம், குழந்தை பராமரிப்பு, ஆதரவற்ற பெண்களுக்கு நல்வாழ்வு, கிராமத் தொழில் முன்னேற்றம் என, பல தொண்டுகளை செய்து, இன்றைக்கும் இந்நிறுவனம் கஸ்தூரிபாவையும், காந்திஜியையும் மக்கள் நினைவு கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறது. தன்னலமற்ற இந்த நிறுவனத்தின் சேவையை இன்றைக்கு தரணியே பாராட்டுகிறது.
***
எஸ். உமாபதி