விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! - கொழுக்கட்டை செய்யப் போகிறீர்களா...
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! - கொழுக்கட்டை செய்யப் போகிறீர்களா...
PUBLISHED ON : செப் 17, 2023

கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வேக வைப்பதற்கு பதில், மூங்கில் தட்டின் மீது இலை அல்லது துணி விரித்து வைத்தால், சீக்கிரம் வேகும்
* கொழுக்கட்டைக்கு பூரணம் கிளறும் போது, பாகு அதிகமாகி விட்டால், பருப்பு பூரணமாக இருந்தால், கடலை மாவை பொன்னிறமாக வறுத்து சேர்க்கலாம். தேங்காய் பூரணமாக இருந்தால், அரிசி மாவை சேர்க்கலாம். இப்படி செய்தால், பூரணம் கெட்டியாவதுடன், உதிராமல் உருட்ட முடியும்
* கொழுக்கட்டைகளை உருட்டி, சிறிது நல்லெண்ணெய் தடவி ஆவியில் வேக வைத்தால், ஒட்டாமல், உடையாமல் அழகாக இருக்கும்
* கொழுக்கட்டைக்கு மாவு கிளறும் போது, தண்ணீரோடு ஒரு கரண்டி பால் சேர்த்தால், விரிந்து போகாது
* கடலை பூரணம் செய்யும் போது, அதை மசிய அரைக்காமல், ஒன்றிரண்டாக அரைத்து, சுருள கிளற வேண்டும். அதன் பிறகு, ஏலக்காய் பொடி, துண்டுகளாக்கிய தேங்காய் கீற்று போட்டு கொழுக்கட்டை செய்தால், சுவையாக இருக்கும்
* கொழுக்கட்டை மாவு தயாரிக்கும் போது, மாவை நீர்க்க கரைத்து, நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால், மேல் தோல் கனமாக இல்லாமல், மெல்லியதாக, சொப்பு செய்ய வசதியாக இருக்கும்
* வெல்லப் பூரணம் தயார் செய்யும் போது, தேங்காயை பல்லு பல்லாக சேர்த்தால் உதிர்ந்து விடும். தேங்காயை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து கிளறினால், பூரணம் பிரியாது; சாப்பிடும் போது திப்பி பல்லில் அகப்படாது.
மோதகம்!
தேவையான பொருட்கள்:
மேல் மாவிற்கு: பச்சரிசி மாவு - 2 கப். பூரணத்திற்கு: கடலை பருப்பு - அரை கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி, தேங்காய் துருவல் - அரை கப்.
செய்முறை: கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, வேக வைக்கவும். தண்ணீரை வடிகட்டி, அதை மிக்சியில் ஓட விட்டு, கொர கொரப்பாக அரைக்கவும். வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, வெல்லப்பாகு, தேங்காய் துருவல், வேகவைத்து அரைத்த கடலைப் பருப்பு எல்லாவற்றையும் போட்டு கிளறவும். உருளும் பதத்தில் இறக்கி, சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, ஒரு சிட்டிகை உப்பு, அரிசி மாவில் போட்டு லேசாக பிரட்டி கொள்ளவும். கொதிக்கும் நீரை அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறவும்.
மாவு நன்றாக திரண்டு, கையில் ஒட்டாமல் வருவது தான், சரியான பதம். இந்த மேல் மாவை, கையில் நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு உருண்டைகளாக உருட்டி, சொப்பு செய்து பூரண உருண்டையை வைத்து மூடி, இட்லி தட்டில் வேக வைத்து எடுத்தால், மோதகம் ரெடி!
எள் கொழுக்கட்டை!
மோதகம் செய்தது போல், மேல் மாவு தயார் செய்து கொள்ளவும்.
வறுத்த எள்ளையும், வெல்லத்தையும் பொடித்து, வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, நன்றாக பிரட்டி எடுக்கவும். அதை பூரணமாக சொப்பினுள் வைத்து வேக வைத்தால், எள்ளு கொழுக்கட்டை தயார்!
