PUBLISHED ON : ஆக 16, 2020

கொழுக்கட்டை மாவு தயார் செய்வது எப்படி என்று, முதலில் பார்ப்போம்:
ஒரு கப் கொழுக்கட்டை மாவுடன், ஒரு கப் தண்ணீர், அரை தேக்கரண்டி உப்பு, ஒண்ணே கால் தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் கை விடாமல் கிளறி, மாவு வெந்து, கெட்டிபட்டதும், நன்கு கலந்து இறக்கி வைக்கவும். கை பொறுக்கும் சூட்டில் நன்றாக பிசைந்தால், கொழுக்கட்டைக்கான மேல் மாவு தயார்.
பிசைந்த மாவிலிருந்து எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்யவும். முதலில் உருண்டையை தட்டையாக்கி, ஓரங்களை சுற்றிலும் மெல்லியதாக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் தடவி, விரல்களினால் சொப்பு போல குழியாக செய்யவும். பூரணம் வைத்து பிறை சந்திர வடிவில் அல்லது சமோசா போல ஒட்டவும். ஓரங்களை விரல் நுனிகளால் முறுக்கி கொழுக்கட்டை செய்யவும்.
இட்லி வைக்கும் பாத்திரத்தில் அல்லது குக்கரில் தண்ணீர் விட்டு, குக்கர் தட்டினுள் எண்ணெய் பூசி, தகுந்த இடைவெளியில் வைக்கவும். வாழை இலையை வெட்டி, தட்டின் உள்ளே விரித்தும் அடுக்கலாம்.
இட்லி அவிப்பது போல், 10 நிமிடம் வேக வைத்து எடுத்து, ஆறியவுடன் பரிமாறவும்.
முளைக் கட்டிய பச்சை பயறு இனிப்பு மோதகம்!
தேவையான பொருட்கள்:
கிளறிய கொழுக்கட்டை மேல் மாவு - தேவையான அளவு, முளைக் கட்டிய பச்சை பயறு, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், வெல்லத் துருவல் - ஒண்ணே கால் கப், ஏலக்காய் - கால் தேக்கரண்டி, நெய்யில் வறுத்த முந்திரி தேவையான அளவு.
செய்முறை:
முளைத்த பச்சை பயறோடு தேங்காய் துருவலை சேர்த்து, மிக்சியில் லேசாக ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அதனுடன் வெல்ல துருவலை சேர்த்து, அடுப்பில் வாணலி வைத்து, மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருந்தால் கெட்டி படும். அதோடு ஏலக்காய் துாள், பொடியாக நறுக்கி வறுத்த முந்திரியை கலந்து பூரணமாக செய்யவும். இதில் மோதகம் அல்லது கொழுக்கட்டை செய்து, ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
கார கொழுக்கட்டை!
தேவையான பொருட்கள்:
கொழுக்கட்டை மாவு, தண்ணீர் தலா ஒரு கப், துருவிய பீட்ரூட் - கால் கப், உப்பு தேவையான அளவு, எண்ணெய் ஒரு தேக்கரண்டி, பொடித்த அவல் அரை கப், புளித்த தயிர் ஒன்றரை கப், தேங்காய் துருவல் - கால் கப், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - ஒன்றரை தேக்கரண்டி, கடுகு - கால் தேக்கரண்டி.
செய்முறை:
கொழுக்கட்டை மாவுடன், பீட்ரூட் துருவல், உப்பு, தண்ணீர், எண்ணெய் சேர்த்து கலந்து, கனமான வாணலியில் கெட்டி படும் வரை நன்றாக புரட்டி எடுக்கவும். அவலுடன் மற்ற பொருட்களை கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு தாளித்து, அவல் கலவையை சேர்த்து கெட்டிபடும் வரை கலந்து இறக்கவும். ஆறியதும் உருண்டைகள் செய்யவும். இந்த பூரணத்தை கொண்டு கொழுக்கட்டை செய்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
கலவை சுண்டல்!
தேவையான பொருட்கள்:
வேக வைத்த மணி கொழுக்கட்டைகள் - விரும்பும் அளவு, வெள்ளை கொண்டை கடலை, வேர்க்கடலை, டபுள் பீன்ஸ், பச்சை பட்டாணி, பச்சை பயிறு, மொச்சை பயறு எல்லாம் சேர்ந்த கலவை - ஒரு கப், உப்பு, எண்ணெய், தேங்காய் துருவல் தேவையான அளவு. இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - ஒன்றரை தேக்கரண்டி.
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காய துாள் சிறிதளவு.
வறுத்து பொடிக்க: சிவப்பு மிளகாய், தனியா ஒரு தேக்கரண்டி.
செய்முறை:
பச்சை பட்டாணி, வெள்ளை கொண்டை கடலையை தனி தனியாக ஊற வைத்து, நான்கு விசில் வரும் வரை குக்கரில் வேக வைக்கவும். பச்சை பயறை தனியாகவும், மற்றவற்றை ஏழு விசில்கள் வரும் வரையும் வேக வைத்து வடிகட்டவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பிறகு இஞ்சி விழுது, வெந்த சுண்டல், மணி கொழுக்கட்டைகளை சேர்த்து நன்றாக சூடானதும், வறுத்து பொடித்த பொடியை துாவி, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
