/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சிட்டுக் குருவிகளுக்கு கூடுகட்டித்தரும் குருவி கணேசன்!
/
சிட்டுக் குருவிகளுக்கு கூடுகட்டித்தரும் குருவி கணேசன்!
சிட்டுக் குருவிகளுக்கு கூடுகட்டித்தரும் குருவி கணேசன்!
சிட்டுக் குருவிகளுக்கு கூடுகட்டித்தரும் குருவி கணேசன்!
PUBLISHED ON : மார் 16, 2025

மார்ச் 26 சிட்டுக்குருவி தினம்!
கணேசன் என்றால் யாருக்கும் தெரியாது, 'குருவி கணேசன்' என்றால், அனைவருக்கும் தெரியும்.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த இவருக்கு, இயற்கையிலேயே பறவைகள் மீது, ஆர்வம் அதிகம். அதிலும், எந்த நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும் சிட்டுக்குருவி மீது, அலாதிப்பிரியம்.
நகர்ப்பகுதிகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது குறித்து வருத்தப்பட்டார். மொபைல்போன் டவரில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு காரணமாகவே, சிட்டுக்குருவி இனமே அழிந்துவிட்டதாக கூறுவதும் சரியோ என, சந்தேகித்தார்.
ஆனால், அதே மொபைல்போன் டவர்கள் உள்ள சிற்றுார்கள் மற்றும் கிராமங்களில், சிட்டுக்குருவிகள் இருக்கவே, அதுமட்டும் காரணம் அல்ல என்பது தெரிந்தது. நகர மக்களின் வாழ்வியல் முறை மாறி போனது தான், அதற்கு காரணம் என தெரிந்தது.
முன்பெல்லாம் சாப்பிட்டு முடித்து, மீதமான சாதம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை, வீட்டின் பின்புறம், புழக்கடை மற்றும் கிணற்றடியில் போடுவோம். அப்போது சிந்தும் உணவுப் பொருட்களை, சிட்டுக்குருவிகள் வந்து கொத்தித் தின்னும்.
அது மட்டுமல்ல, சிட்டுக்குருவிகள் வீட்டிற்குள் வந்து, தோதான இடங்களில் கூடுகட்டி, குஞ்சு பொரிக்கும்.
தற்போது, இது எதற்கும் நகர்புறங்களில் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
சிட்டுக்குருவிகளுக்கு ஒரு குணம் உண்டு. அது மரத்திலோ, வெளியிலோ கூடு கட்டாது. காரணம், இதன் முட்டை மற்றும் குஞ்சுகளை, காக்கா போன்ற பறவைகள் உணவாக்கி கொள்ளும் என்பதால், ஆபத்து இல்லாத இடத்தில் தான் கூடு கட்டும்.
ஒரு கூண்டை வடிவமைத்து, அதை வீட்டின் தாழ்வாரம், வராண்டா போன்ற பாதுகாப்பான பகுதியில் வைத்துவிட்டால் போதும். குருவிகள் தானாகவே அந்த கூண்டுகளைத் தேடி வந்து, அதில் தனக்கு தேவையான மரக்குச்சி, வைக்கோல், பஞ்சு ஆகியவற்றையும் சேகரித்து வைத்துவிடும். பிறகு, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, அது, அதன் வாழ்க்கையை வாழ்ந்து கொள்ளும்.
ஒரு இடத்தில் குருவிகள் இருந்தால், அதன் சங்கீதமான சப்தமும், சுறுசுறுப்பும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்; பெரியவர்களுக்கும் சந்தோஷத்தை தரும்.
இதை உணர்ந்து கணேசன், 150 ரூபாய் செலவில் ஒரு பிளைவுட் கூடு தயாரித்து, தன் வீட்டில் வைத்தார். அடுத்த சில நாட்களிலேயே கூட்டில் குருவியின் சத்தம்.
சந்தோஷப்பட்ட கணேசன், மேலும் சில கூடுகளை தயாரித்து, வீட்டின் பல்வேறு இடங்களில் வைத்தார்; வைத்த இடங்களில் எல்லாம் குருவிகள் வந்தன.
இதைப் பார்த்து, கேட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, தன் சொந்த செலவிலேயே கூடுகளை செய்து கொடுத்தார்.
இப்படி கூடுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றாலும், அவை நுாற்றுக்கணக்கில் தான் இருந்தன. ஆயிரக்கணக்கில் இதை கொண்டு செல்ல எண்ணினார். அதற்கு மாணவர்கள் தான் சரியானவர்கள் என்பதை முடிவு செய்தார்.
ஒவ்வொரு பள்ளியாகச் சென்று, மாணவர்களிடம் கொடுத்தார்; மேலும், அவர்களுடன் கூடவே சென்று, வீட்டில் கூடுகளை மாட்டியும் கொடுத்தார்.
இப்போது கூடுகளின் எண்ணிக்கை பல ஆயிரமானது.
குருவி மீது கொண்ட கணேசனின் இந்த பாசம் காரணமாக, இவரது பெயரே, 'குருவி கணேசன்' என்றானது.
அதிகமான கூடுகள் செய்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க, கணேசன் ஆசைப்பட்டாலும், அதற்கு பொருளாதாரம் தடையாக இருந்தது. இதனால், 'கூடு அறக்கட்டளை'யை துவக்கினார். இப்போது நல்லோர் பலர், இந்த அறக்கட்டளைக்கு உதவுவதால், பொருளாதாரம் ஒரு தடையாக இல்லை.
குருவி கணேசனின் மனைவியும், கல்லுாரி பேராசிரியையுமான சாந்தினியும், கணவருடன் இந்த தொண்டில் கைகோர்த்துள்ளார். வார விடுமுறையை கூடு செய்வதற்காகவே செலவிடுகின்றனர்.
இவர்களைப் பற்றி அறிந்த பிரதமர் மோடி, தன், 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியின் மூலம், கணேசனை பெரிதும் பாராட்டிப் பேசினார்.
தொல்காப்பியத்தில் சிட்டுக்குருவியைப் பற்றிப் பாடப்பட்டுள்ளது. தன் கவிதைகளில் பல இடங்களில் பாடியுள்ளார், பாரதியார். சினிமாவில் நுாற்றுக்கணக்கான பாடல்கள், சிட்டுக்குருவியை மையப்படுத்தி இடம்பெற்றுள்ளன.
அணில், குருவி போன்றவை வீட்டில் கூடு கட்டினால், தெய்வீகத்தன்மை வளரும் என்பதுடன், அதிர்ஷ்டமும் அமையும் என்பது, நம் முன்னோர் நம்பிக்கை. ஆகவே, சிட்டுக்குருவிக்கு உங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்க, இது போன்ற கூட்டை நீங்களே உருவாக்கி, தாராளமாக உபயோகிக்கலாம்.
குருவி கணேசனுடன் பேசுவதற்கான மொபைல் எண்: 95006 99699.
நீங்கள் அழைத்தவுடனே பேசவில்லை என்றால், பணியில் இருக்கிறார் என, அர்த்தம். பேச வேண்டிய விஷயத்தை, 'வாட்ஸ் - அப்' தகவலாக தந்து விட்டு காத்திருங்கள். நேரம் ஒதுக்கி, பின் அவரே பேசுவார்.
உணவு பற்றாக்குறை!
உலக சிட்டுக்குருவிகள் தினம், ஆண்டு தோறும், மார்ச் 20ம் தேதி, உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை, அண்மைக் காலங்களில் குறைந்து வருகிறது. தினமும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்னைகள், மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியற் பல்வகைமை மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை கூறி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள், 2010ம் ஆண்டில் இருந்து, உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவு கூரப்படுகிறது. உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடிய சிட்டுக்குருவிகள், தற்போது மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்களால் அழியத் துவங்கியுள்ளன. நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம், அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை, கடந்த 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். வெளிக்காற்று வர முடியாதபடி, குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து, குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள், பட்டினி கிடந்தே அழிகின்றன. பலசரக்கு கடைகள் மூடப்பட்டு, அதற்கு பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன. - சவுமியா சுப்ரமணியன்.
எல். முருகராஜ்