PUBLISHED ON : ஜூலை 23, 2017

உதவும் மனம் இருந்தால் போதும்; காசு, பணம் முக்கியமல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக, வழி தவறி வந்த மனநலம் பாதித்தோர், முதியோர் என, 260க்கும் மேற்பட்டோரை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார், ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேலப்பாளையத்தை சேர்ந்த, 53 வயதான, தர்மலிங்கம். இவரது சேவைக்காக, கலெக்டர், எஸ்.பி., முதலான அதிகாரிகள், எந்த நேரத்திலும் தங்களை தொடர்பு கொள்ளும் சுதந்திரத்தை இவருக்கு கொடுத்துள்ளனர்.
நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்து, நெசவுத் தொழில் செய்து வரும் இவர், தன் சமூக சேவை குறித்து, கூறியதாவது:
சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஒலித்துக் கொண்டே இருந்தது. கடந்த, 25 ஆண்டுகளாக பல்வேறு வகையான சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
சாலையில், அனாதைகளாக விடப்பட்ட முதியவர்கள் மற்றும் மனநல பாதிப்பால் வழிதவறி வந்தவர்களை மீட்டு, காப்பகத்தில் சேர்த்து வருகிறேன்.
இதுவரை, 260 பேரை மீட்டுள்ளேன். அதில், 200 பேர் முதியவர்கள், மற்ற அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.
இப்பணியை தெய்வத்துக்கு செய்யும் சேவையாக கருதுகிறேன். முதியவர்கள் பல்வேறு எண்ணச் சிதைவுகளுடன் இருப்பர். அதனால், அவர்களை நம் வசப்படுத்த முதலில், ஆறுதலாக பேசி, பின், உணவு, உறைவிடம் கிடைக்க செய்வேன். அவர்கள் சம்மதம் பெற்று, புகைப்படம் எடுத்து, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிப்பேன். பின், போலீசாரிடம் அனுமதி கடிதம் பெற்று காப்பகத்தில் சேர்த்து விடுவேன்.
மீட்கப்படும் நபர்களை காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல வாகன வசதி, பாதுகாப்பு ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு பெற்றுள்ளேன்.
காப்பகங்களில் விடப்பட்ட பலர், இன்று நல்ல நிலையில் உள்ளனர். என்னைப் பார்க்கும் போது, உச்சி முகர்ந்து வாழ்த்துவர்.
சில நேரங்களில் மன வேதனையான தருணங்களும் உண்டு. கோபி, கடத்தூர் பகுதியைச் சேர்ந்த, 83 வயது முதியவரை மீட்டு, திண்டுக்கல் காப்பகத்துக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே இறந்து விட்டார். உடலை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தபோது, திண்டுக்கல் காப்பகத்தை சேர்ந்த நிர்வாகிகள், 'எப்படி இருந்தாலும் பரவாயில்லை; இங்கு கொண்டு வந்து விடுங்கள். ஆக வேண்டிய சடங்குகளை பார்த்துக் கொள்ளலாம்...' என்று கூறி, அனைத்தையும் செய்தனர்.
அதேபோல், சென்னிமலையில் மனநலம் பாதித்த, 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை மீட்கச் சென்றபோது, கற்களை வீசி தாக்கினார். கல்லடியை பொறுத்து, போலீசார் உதவியுடன் அவரை மீட்டு, திண்டுக்கல் காப்பகத்தில் சேர்த்தேன். காப்பகத்தில் சேர்த்து விட்ட பலரில், ஒரு சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
என் பணியை பாராட்டி பலர், 'பண உதவி, தேவையான இடம் தருகிறோம்; நீங்களே காப்பகம் துவக்குங்கள்...' என்றனர்; மறுத்துவிட்டேன். காரணம், காப்பகம் நடத்தினால், ஒரு சிலருக்குத்தான் உதவ முடியும், சுதந்திரமாக செயல்பட்டால், ஆயிரக்கணக்கானோருக்கு உதவ முடியும்.
இன்றைய இளைஞர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்... நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை பேணிக் காப்பது, நம் கடமை. இன்றும், நம் தேசம் உலகளவில் மரியாதையுடன் பார்க்கப்படுவதற்கு காரணம், நம், கலாசாரம் தான்.
— இவ்வாறு அவர் கூறினார்.
முதியவர்கள் ஆதரவற்ற நிலையில் சாலையில் திரிந்தால், 94863 07484 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தர்மலிங்கத்திடம் தெரிவிக்கலாம்.
எஸ்.சண்முகசுந்தரம்
