PUBLISHED ON : ஜூலை 02, 2023

அடியார் ஒருவரும், அவரது மனைவியும் மூச்சுவிட மறந்தாலும், பெருமாளை மறக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பெருமாளிடம் பக்தி கொண்டவர்கள்.
தினமும் அரிசியை யாசகம் பெற்று, அதை அன்றாட சாப்பாட்டிற்கு உபயோகிப்பது, அடியாரின் வழக்கம். அடுத்த நாளுக்கென எதையும் சேமித்து வைக்க மாட்டார், அந்த அடியார்.
ஒருநாள், அடைமழை பெய்து கொண்டிருந்தது. யாராலும் வெளியில் வர முடியவில்லை.
அதன் காரணமாக, அடியாரும், அவர் மனைவியும், அன்று பட்டினி. பூஜையில், பகவானுக்கு அர்ப்பணிக்க ஏதுமில்லை. பட்டினியாகவே உறங்கினர்.
அந்த நேரத்தில், கோவிலில் இரவு வழிபாடு, மிகவும் கோலாகலமாக நடந்தது. மேள -தாளங்கள், எக்காளம் என, ஒரே முழக்கம் தான். அக்கார அடிசல், பாயசம் நைவேத்தியம் செய்தனர்.
இந்த முழக்கம் எல்லாம், அடியாரின் மனைவி காதுகளில் விழுந்தது.
'பெருமாளே, உம் பக்தர் இங்கு பட்டினி இருக்கிறார். நீர் ஆரவாரமாக அமுது செய்கிறீரோ?' என்று, அவரது மனம் எண்ணியது.
அடியார் மனைவியின் நினைப்பை அறிந்தார், பகவான்.
உடனே, கோவில் அதிகாரியின் கனவில் காட்சியளித்து, 'நம் பக்தர், பசியோடு இருக்கிறார். அவருக்கு, சகல மரியாதைகளோடும் பிரசாதம் கொண்டு போய் கொடு...' என்று கட்டளையிட்டார், பகவான்.
பகவான் கட்டளையை மீற முடியுமா...
உடனே, இரவு நேரத்தில், வாத்தியங்கள் முழங்க, பகவான் பிரசாதங்களுடன் பக்தர் வீட்டை அடைந்தார், கோவில் அதிகாரி.
தெய்வ அருள் பிரசாதம், வீடு தேடி வந்ததை கண்டு மகிழ்ந்து, உச்சி மேல் வைத்துக் கொண்டாடி, மனைவிக்கு அளித்து, தானும் உண்டார், அடியார்.
அப்போது, தன் மனைவியிடம், 'நீ ஏதாவது நினைத்தாயா?' என கேட்டார்.
தான் நினைத்ததை, மறைக்காமல் அப்படியே சொன்னார், மனைவி.
அதைக் கேட்ட அடியார், 'நீ இப்படிச் செய்யலாமா?' என்று கேட்டு, மனம் வருந்தி, பெருமாளின் கருணையை நினைத்து, உள்ளம் உருகினார்.
தெய்வம், நாம் நினைப்பதை அறியும்; உடனடியாக துயர் துடைக்கும் என்பதை விளக்கும் வரலாறு இது.
இது நடந்த திருத்தலம், ஸ்ரீரங்கம். அந்த அடியார் பெயர், கூரத்தாழ்வார்.
பி. என். பரசுராமன்
