PUBLISHED ON : மே 15, 2011

பரமேஸ்வரனை, 'முக்கண்ணப்பா' என்று ஒருவர் அழைத்தாராம். இதில், 'அப்பா' என்ற சொல் குறிப்பிடத்தக்கது. அப்பாவுக்கு குழந்தைகளிடம் பரிவும், பாசமும் இருக்கும்.
நாள் முழுவதும் ஓடியாடி வேலை செய்த பிள்ளையை, 'கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளடா; ஓடி, ஆடியது போதும்...' என்கிறார் அப்பா. இதே பரமேஸ்வரன் தான், பிரளயத்தை உண்டாக்குகிறார். அப்போது, சகல ஜீவராசிகளும் ஒடுங்கிப் போய் விடுகிறது.
பல ஜென்மாக்கள் எடுத்து, இந்த ஜீவன்கள் அலைந்து, திரிந்து அல்லல் பட்டது போதும்; கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும் என்ற கருணையால், பிரளயத்தை ஏற்படுத்துகிறார். ஜீவன்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட பின், மீண்டும் சிருஷ்டி செய்கிறார் பிரம்மா. மறுபடியும் ஜீவன்களின் பிறப்பு, இறப்பு என்பது பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி ஏற்படுகிறது.
எந்த ஜீவனானாலும், ரட்சிப்பது விஷ்ணுவின் வேலை; அவர், அதை செய்கிறார்.
பகலெல்லாம் வேலை செய்தவன், இரவு வந்ததும் ஆனந்தமாகத் தூங்குகிறான். பொழுது விடிந்தால், மறுபடியும் ஓடி, ஆடி வேலை செய்கிறான்; இதை, நித்ய பிரளயம் என்றனர். ஜகம் முழுவதும் அழிந்து போகும்படி ஏற்படுவது மகா பிரளயம்; இதில் தான் எல்லாமே அழிந்து போகிறது.
பிரளயம் முடிந்த பிறகு, மீண்டும் சிருஷ்டி தொழிலை ஆரம்பிக்கிறார் பிரம்மா. அடுத்த பிரளயம் வரையில் அவரது தொழில் தொடர்கிறது. ஒருவரது வேலை ஆக்கல்; ஒருவரது வேலை காத்தல்; ஒருவரது வேலை அழித்தல்! இதில், மூன்றாவதாக ஒரு பிரளயத்தைச் சொல்லி இருக்கின்றனர்; அதற்கு, ஆத்யந்திக பிரளயம் என்று பெயர்.
இரண்டு, மூன்று என்று வேறுபாடாகத் தோன்றும் பேத ஞானத்தை ஒழித்து, எல்லாம் ஒன்றே என்ற அத்வைத ஆனந்த அனுபவத்தை அளித்து, மோட்சத்தைக் கொடுக்கிற பிரளயம் இது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று பெயர்களுடன் முத்தொழில் நடந்து வருகிறது. பார்ப்பதற்கும், படிப்பதற்கும் இந்த மூன்று பேரும் தனித் தனியானவர்கள் என்று எண்ணத் தோன்றும்; ஆனால், அப்படியல்ல. ஒரே பொருளிலிருந்து மூன்றாகப் பிரிந்து, ஒவ்வொருவர் ஒவ்வொரு தொழிலை செய்வதாக சொல்லப்பட்டுள்ளது.
அந்த ஒன்றிலிருந்து தான் பலவும் தோன்றியது. ஆக, எல்லாமே ஒன்று தான்; பேதமில்லை. பரமாத்மா ஒருவன் தான் காரிய காரணங்களுக்காக பலவாறாக தோற்றமளிக்கிறான் என்பதை, உணர்ந்து கொண்டாலே போதும்!
சிவன் உயர்வா, விஷ்ணு உயர்வா; சைவம் உயர்ந்ததா, வைணவம் உயர்ந்ததா என்ற சர்ச்சையே இராது; சமத்துவமும், சமாதானமும் நிலவும்.
***
ஆன்மீக வினா-விடை!
வீட்டில், வில்வ தள மரம் வைத்து பராமரிக்கலாமா? வில்வத்தை, வீட்டில் உள்ள சிவபெருமான் படத்துக்கும், கோவிலுக்கும் கொண்டு சென்று அர்ச்சிக்கலாமா?
வில்வத்துக்கு தனி இடம் ஒதுக்கி வளர்க்கலாம். வில்வ இலையை, வீட்டிலுள்ள சிவன் படத்துக்கும், கோவிலுக்கும் கொண்டு சென்று பூஜை செய்யலாம்.
***
வைரம் ராஜகோபால்
