PUBLISHED ON : ஆக 05, 2018

மனிதன், கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குகிறான்; ஆனால், கடவுளே, கடவுளை வணங்குகிற கோவில், மதுரை மேலமாசி வீதியில் உள்ளது. பொதுவாக, சிவாலயங்கள் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், இங்கு, மேற்கு நோக்கி, உருவ வடிவில், பார்வதியுடன் அமர்ந்து, தன் இன்னொரு வடிவான, லிங்கத்திற்கு பூஜை செய்கிறார், சிவபெருமான்.
மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாக பிறந்தாள், அன்னை மீனாட்சி. சுந்தரேஸ்வரர் எனும் பெயரில் மானிடராக வந்து இவளை மணந்து கொண்டார், சிவன். பின், பாண்டிய மன்னராக பொறுப்பேற்க தயாரானார். பதவியேற்கு முன், மன்னர்கள் சிவ பூஜை செய்ய வேண்டும் என்பது மரபு. அதன் அடிப்படையில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தன் மனைவியுடன் இணைந்து பூஜை செய்தார், சிவன். அதுவே, இம்மையில் நன்மை தருவார் கோவில்!
சிவ பூஜை செய்யும் போது, மேற்கு நோக்கி அமர வேண்டுமென்பது நியதி; அதனால், சிவன், அம்பிகையுடன் மேற்கு நோக்கி அமர்ந்து, பூஜை செய்ய, கருவறையில் லிங்கத்தின் முன்பகுதி அவரை நோக்கி இருக்கிறது. இதனால், பக்தர்களுக்கு லிங்கத்தின் பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது, அவர், இங்கு எழுந்தருளி, சிவலிங்க பூஜை செய்யும் வழக்கம் இப்போதும் உள்ளது.
தலைமைப் பதவி கிடைக்கவும், பணி உயர்வு பெறவும், சிவனுக்கு, 'ராஜ உபச்சார அர்ச்சனை' இங்கு நடத்தப்படுகிறது. தங்கள் பணிகள் இடையூறின்றி இருக்க, இங்கு அருள்பாலிக்கும் சிவனை வணங்குவர்.
பாவ நிவர்த்திக்கு உகந்தது, சிவ பூஜை; செய்த பாவங்களை, இந்தப் பிறவியிலேயே மன்னித்து, நன்மை அருள்பவர் என்பதால், இந்த சிவனுக்கு, 'இம்மையிலும் நன்மை தருவார்' என்ற பெயர் ஏற்பட்டது.
தனி சன்னிதியில் வீற்றிருக்கிறாள், அம்பாள் மத்தியபுரி நாயகி. மதுரையின் மத்தியில் இருப்பதால் இவளுக்கு இப்பெயர் வந்தது. திருமணமாகாதவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்ள, நல்ல வரன் அமையும் என்பதால் இவளுக்கு, 'மாங்கல்ய வர பிரசாதினி' என்றும் பெயருண்டு. தாமரை பீடத்தின் மீது நிற்கும் இந்த அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்கரம் உள்ளது.
இங்கு, பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சம்பக சஷ்டி, மார்கழி அஷ்டமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடைபெறும். அப்போது, ஒரு பங்கு அரிசியுடன், மூன்று பங்கு மிளகாய் வற்றல் சேர்த்து (ஒரு கிலோ அரிசிக்கு, 3 கிலோ மிளகாய்) மிகவும் காரமான புளியோதரை செய்து, படைக்கின்றனர்.
மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து, கல் யானையை கரும்பு தின்னச் செய்தார். அவர், இங்கு பத்மாசனத்தில் அமர்ந்து, வலது கையால் ஆகாயத்தைக் காட்டுகிறார். இடக்கையில், சாம்பிராணி இருக்கிறது. நினைத்தது நிறைவேற, பவுர்ணமி திங்களன்று சித்தருக்கு பூப்பந்தல் இட்டு வழிபடுவர். சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசையன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
முன் மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி உள்ளனர். சிவ பக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க, ராமேஸ்வரத்தில் மணலால் லிங்கம் அமைத்து பூஜித்தார். அதன் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. லிங்கத்தின் பின்புறம், வில்லுடன் காட்சி அளிக்கிறார், கோதண்டராமர்.
தீராத பிரச்னைகளுக்கும் தீர்வு தருபவராக இருக்கிறார், இங்குள்ள சண்டிகேஸ்வரர். சிவனுக்கு மாலை அணிவித்து, பூஜை செய்து, அந்த மாலையை சண்டிகேஸ்வரருக்கு அணிவித்து வழிபட்டால், சண்டிகேஸ்வரர், சிவனிடம் நமக்காக சிபாரிசு செய்து கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். எனவே, இவருக்கு, 'பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்' என்று பெயர்.
அம்மன் கோவில்களில் பூக்குழி இறங்குவர். இங்கு, வைகாசி விசாகத்திற்கு மறுநாள், முருகனை வேண்டி, பூக்குழி இறங்குவர். 60 மற்றும் 80ம் திருமணம் (சஷ்டியப்தம், சதாப்தி) செய்து கொள்கின்றனர்.
பல விசேஷங்கள் உள்ள இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவனை தரிசனம் செய்தால், இந்தப் பிறவியிலேயே நமக்கு நன்மைகளை வாரி வழங்குவார், சிவபெருமான்!
தி.செல்லப்பா
