sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தெய்வத்தாய்!

/

தெய்வத்தாய்!

தெய்வத்தாய்!

தெய்வத்தாய்!


PUBLISHED ON : ஜூன் 23, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 23, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூன் 24 - வாசவி ஜெயந்தி

புராணங்களில், வாசவி என்ற பாத்திரம் இரண்டு இடங்களில் வருகிறது. இவளை வியாசரின் தாய், பராசர முனிவரின் துணைவி என்றும், தேவேந்திரனின் மனைவி இந்திராணி என்றும், பழைய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. மகாபாரதத்தில், சத்தியவதி, மச்சகந்தி என்று அழைக்கப்பட்ட இவள், பிதுர்லோகத்தில் வசித்தவள். யோக சித்தி உடையவள். உலகிலுள்ள அனைத்து பிதுர்களும் (மறைந்த முன்னோர்) அவளை, தங்கள் மகளாக எண்ணி வளர்த்தனர். பிதுர்களுக்கு சேவை செய்வதை தன் கடமை யாகக் கொண்டிருந்தாள். ஒருமுறை, அவளது சேவையில் குறை கண்ட பிதுர்கள், அவளை பூலோகத்தில் மீனின் வயிற்றில் பிறக்குமாறு சபித்து விட்டனர்.

அவள் பூமியில் பிறந்தது அதிசயமானது. சேதி நாட்டு அரசன் உபரிசரவசு. அக்காலத்தில், பெண்கள் ருதுவாகும் முன்பே, திருமணம் செய்து வைத்து விடுவர். உபரிசரவசுக்கும் அவ்வாறே திருமணம் நடந்தது. அவனது மனைவி ருதுவான சமயத்தில், ஒருநாள் வேட்டைக்குப் போனான். அவளது நினைவில், அவனது வீர்யம் ஸ்கதலிமாகவே, அதை ஒரு பச்சிலையில் மடித்து, பருந்து ஒன்றின் மூலம் தன் மனைவியிடம் சேர்த்து விடும்படி கொடுத்து அனுப்பினான். அது பறந்து வரும் வழியில், இன்னொரு பருந்து அதை மாமிசம் என, நினைத்து பறிக்கும் முயற்சியில் ஈடுபடவே, அது, பருந்தின் வாயிலிருந்து தவறி, கீழிருந்த யமுனை ஆற்றுக்குள் விழுந்தது. ஒரு மீன் அதை விழுங்கிவிட, அது கர்ப்பமானது. அதை, 'உச்சைச்ரவஸ்' என்ற மீனவர் தலைவன் பிடித்தான். மீனை அறுத்த போது, உள்ளே ஆண், பெண் என, இரு குழந்தைகள் இருந்ததைக் கண்டான். இந்தத் தகவல் உபரிசரவசுக்கு தெரிய வர, அவன் ஆண் குழந்தையை வாங்கிச் சென்று விட்டான். பெண் குழந்தையை மீனவர் தலைவன் வளர்த்தான். அவளுக்கு சத்தியவதி என்று பெயர் வைத்தான். அவளையே வாசவி என்றும் அழைத்தனர். அவள், தந்தைக்கு உதவியாக படகு ஓட்டி வந்தாள்.

ஒருசமயம், பராசர மகரிஷி அவளைக் கண்டார். அப்போது மிகப் புண்ணியமான நேரம் ஒன்று வந்தது. அப்படி ஒரு நேரம், இந்தப்பூமி இனி எத்தனை முறை சுற்றினாலும் வராது. அந்த சமயத்தில், ஒரு குழந்தை பிறந்தால், உலகத்திற்கு தர்மத்தைப் போதித்த பாக்கியம் கிடைக்குமென வாசவியிடம் சொன்னார் பராசரர். அவள் முதலில் மறுத்தாலும், உலக நன்மை கருதி சம்மதிக்க, அவர்களுக்கு பிறந்த பிள்ளையே வியாசர்.

அவர் பிறந்ததுமே ஏழு வயது குழந்தையாக <வளர்ந்து நின்றார். அது பராசரரின் தவவலிமையால் நிகழ்ந்தது. குழந்தையை அள்ளி அணைக்க முயன்ற தாயை, அந்தக் குழந்தை தடுத்து, 'நான் கர்ப்பத்தில் இருந்த போதே வைதீகம் அனைத்தும் அறிந்தேன். நீ மீனவப்பெண் என்பதால், வைதீகமான என்னை தாயானாலும் தொடக்கூடாது...' என்றது குழந்தை.

அந்தக் குழந்தைக்கு பராசரர், தாயின் பெருமை பற்றி எடுத்துச் சொன்னார்.

'உன் தாய் மீனுக்கு பிறந்ததால் குறைந்தவளாகி விட மாட்டாள். ரிஷ்யசிருங்க மகரிஷி (ராமனின் பிறப்புக்காக யாகம் நடத்தியவர்) மானுக்கும், கண்வர் (சகுந்தலையை வளர்த்தவர்) மயிலுக்கும், தேவ வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள் குதிரைக்கும் பிறந்தவர்கள். அவர்களை உலகம் வணங்கியுள்ளது. அவர்களும் பெற்றவர்களைப் புறக்கணிக்கவில்லை. அது மட்டுமல்ல, உன் தாய் பிதுர்லோகப் பெண் என்பதும், சாபம் காரணமாக இவ்வாறு ஆனாள் என்பதையும் தெரிந்து கொள்...' என்றார்.

அதன்பின் வியாசர் மனம் திருந்த, குழந்தையை அள்ளி அணைத்தாள் தாய். அந்த வியாசர் தான், தர்மத்தைப் போதிக்கும் மகாபாரதத்தை உலகுக்கு அளித்தார். நல்ல பிள்ளையைப் பெற்ற, அந்தத் தெய்வத்தாயின் பிறந்தநாளை வாசவி ஜெயந்தியாக ஒரு காலத்தில் கொண்டாடினர். இப்போது, இந்த வழக்கம் மறைந்து விட்டது.

ஒரு சிலர் செல்வ விருத்திக்காகவும், சுமங்கலி பாக்கியத்திற்காகவும் இந்திராணியை பூஜிக்கும் வழக்கம் இந்நாளில் உள்ளது.

***

தி. செல்லப்பா






      Dinamalar
      Follow us