
மார்ச் 2 - கொடை விழா ஆரம்பம்
சபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டுமென்றால், பத்து வயதுக்குள்ளோ அல்லது ஐம்பது வயதைத் தாண்டியோ இருக்க வேண்டும். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு, மாசித்திருவிழாவின் போது, பெண்கள் மாலை அணிந்து செல்வர். இயற்கை எழில்மிக்க இந்தக் கடற்கரை கோவில், நாகர்கோவிலிலிருந்து, 17 கி.மீ., தூரத்தில் உள்ளது.
ஒரு காலத்தில், இவ்வூரில் ஆடு மேய்க்கச் செல்லும் சிறுவர்கள், பொழுதுபோக்கிற்காக, 'கட்டையடி' என்ற விளையாட்டை விளையாடுவர். இது பந்து விளையாட்டு போன்றது. பந்துக்கு பதில் பனங்கொட்டையை பயன்படுத்துவர். ஒருநாள், சிறுவர்கள் அடித்த பனங்கொட்டை, ஒரு கரையான் புற்றின் மேல் விழுந்து, புற்று உடைந்து, ரத்தம் பீறிட்டது.
தகவல் அறிந்து வந்த, திருவிதாங்கூர் மன்னரின் அதிகாரிகள், அவ்விடத்தில் தேவபிரஸ்னம் (கடவுள் குறித்த ஜோதிடம்) நடத்தினர். அந்த இடத்தில் அம்மனின் சக்தி இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, புற்று இருந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது. அம்பாளை, பகவதி என, அழைத்தனர். மூலஸ்தானத்தில் இன்றும் புற்று உள்ளது.
இக்கோவிலில் செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷமான நாள். மாசி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை, கொடை விழா. அதற்கு பத்து நாட்களுக்கு முன்னதாக, கொடியேற்றம் நடக்கிறது. ஆறாம் நாள் விழாவில், 'வலியபடுக்கை' என்னும் நிகழ்ச்சியில் அவல், பொரி, பழம், அடை, வடை, அப்பம், தெரளி (ஒரு வகை இலையில் தயாரிக்கும் கொழுக்கட்டை) ஆகியவற்றை அம்பாளுக்கு படைப்பர். தேவியின் பரிவாரங்களை திருப்தி செய்வதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது.
பத்தாம் நாள் (மார்ச்11) கொடை விழா அன்று, நள்ளிரவு, 12:00 மணிக்கு நடக்கும் ஒடுக்கு பூஜை, சிறப்பு வாய்ந்தது. அவியல், கிச்சடி, சாம்பார், பருப்பு, பல்வகை கூட்டு வகைகளுடன் ஏழு பானைகளில், உணவு எடுத்து வரப்படும். இந்த பானைகள் வெள்ளைத்துணியால் மூடப்பட்டிருக்கும். விரதமிருந்த பக்தர்கள், தலைச்சுமையாக, இதை தூக்கி வந்து, அம்மனுக்கு படைப்பர். இந்தப் பானைகளைக் கொண்டு வரும் போது, ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருப்பர். ஆனால், கூட்டத்தில் ஒரு குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு, நிசப்தமாக இருக்கும்.
'ஒடுக்கு' என்றால் மன அடக்கம். மனதை ஒடுக்கி, அம்பாளை வழிபடுதல் என்ற பொருளில், இந்த அமைதி கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக, சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் போது யாரும் பேசக்கூடாது என்பது ஐதீகம். வீடுகளில், நாம் சாப்பிடும் போது, பேசக்கூடாது என்று பெரியவர்கள் கண்டிப்பது கூட இதனால் தான். ஒடுக்கு பூஜை என்றால், கடைசி பூஜை என்ற, பொருளும் உண்டு.
உடல் நலனுக்காக, அம்மனுக்கு உடல் உறுப்புகளின் உருவங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். மண்டை அப்பம், கொழுக்கட்டை, பாயசம், பொங்கல் நைவேத்யம் செய்வதுண்டு. குழந்தைகள் நலனுக்காக குத்தியோட்டம் (குழந்தைகளை அம்பாள் போல் அலங்கரித்து வழிபடச் செய்வது) என்ற நேர்ச்சையைச் செலுத்துவர். பெண்களின் இஷ்ட தெய்வமாக மண்டைக்காடு பகவதியம்மன் விளங்குகிறாள். அதனால், பெண்கள் மாசித் திருவிழாவுக்கு மாலையணிந்து, இருமுடி கட்டி வருகின்றனர். அம்பாளுக்குரிய பூஜை பொருட்கள் ஒரு முடியிலும், தங்கள் தேவைக்குரிய பொருட்கள் இன்னொரு முடியிலும் இருக்கும். பகவதியின் அருள் பெற புறப்படுவோமா மண்டைக்காடுக்கு!
தி.செல்லப்பா

