தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நல்லாட்சி மலரட்டும்!...

நல்லாட்சி மலரட்டும்!...

நல்லாட்சி மலரட்டும்!...


PUBLISHED ON : ஆக 26, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக., 29 - ஓணம் பண்டிகை

இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். மூன்றடியானால் என்ன... மூன்று லட்சம் அடியாய் இருந்தால் என்ன! வாழ்வதற்கு என்ன தேவையோ அது போதாதா! அதிகமாய் சேர்ந்தால் ஆணவம் ஏற்படும். அந்த ஆணவம், மற்றவர்களை அழித்து, முடிவில் தன்னையே அழித்து விடும். இதுதான் மகாபலி சக்கரவர்த்தியின் வரலாறு உணர்த்தும் பாடம்.

திருமாலின் ஐந்தாவது அவதாரம் வாமனம். இந்த அவதாரத்தில், குறுகிய மனித வடிவம் எடுத்து, நீண்டு நெடிதுயர்ந்து, உலகளந்த விக்ரமன் ஆகி, மகாபலி மன்னனை ஆட்கொண்டார். இந்த அவதாரத்தில், இன்னொரு விசேஷமும் உண்டு. தசாவதாரத்தில், இரண்டு அவதாரங்கள், ஒரே குடும்பத்துக்காக உருவானது. நரசிம்மனாய் பிரகலாதனுக்கும், வாமனனாய் அவரது பேரன் மகாபலிக்கும் அவர் அவதரித்தது குறிப்பிடத்தக்கது.

விரோசனன் என்ற அசுரனுக்கும், அவனது மனைவி தேவிக்கும் பிறந்த மகனே மகாபலி. இவன் ஒரு யாகம் செய்து, மின்னலென பறக்கும் குதிரை, தேர், சிங்கக்கொடி, வில், இரண்டு அம்பறாத்தூளி (அம்புகள் வைக்கப் பயன்படுவது), ஒரு கவசம் ஆகியவற்றை பெற்றான். இவனது தாத்தா பிரகலாதன், ஒரு கவசத்தை அளித்தார். குரு சுக்ராச்சாரியார், வெற்றிச்சங்கு ஒன்றை வழங்கினார். எவராலும் அழிக்க இயலாத இந்த ஆயுதங்களை வைத்து பூலோகம், தேவலோகம், பாதாளம் உள்ளிட்ட எல்லாவற்றையும் ஜெயித்தான். இவனது ஆட்சி நல்லாட்சியாக அமைந்தது. இல்லை என்ற சொல் மக்களிடம் இல்லை. இதன் காரணமாக, தன்னை விட்டால் ஆளில்லை என்ற ஆணவத்துடன் திரிந்தான்.

தேவர்களின் தாயான அதிதிக்கு, தன் பிள்ளைகளான இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மகாபலிக்கு அடிமையாகி பட்டபாடு சகிக்கவில்லை. அவள் விஷ்ணுவை பிரார்த்தித்தாள். அவளுக்கே மகனாகப் பிறந்து, தேவர்களை மீட்பதாக வாக்களித்தார். அதன்படியே அவள் வயிற்றில், திருவோண நட்சத்திரம் துவாதசி திதியில் பிறந்தார். பு@ராகிதர் வடிவில் மகாபலியை தேடிச் சென்றார்.

புரோகிதர் என்ற சொல்லில் உள்ள, புரோ என்பது, மேலே அல்லது இனி என பொருள்படும். இதம் என்றால் நல்லதை எடுத்துரைப்பது. அதாவது, எதிர் காலம் நல்லதாக இருக்க யோசனை சொல்பவர் புரோகிதர்.

திருமால் புரோகிதர் வடிவில் வந்ததற்கு காரணம் உண்டு. மகாபலி எல்லா வகையிலும் நல்லவன் தான், திறமைசாலி தான்; ஆனால், ஆணவம் அவன் கண்ணை மறைக்கிறதே! அதை அழித்து, அவனுக்கு இனி வரும் காலம் நல்லதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இப்படி ஒரு வடிவில் வந்தார். அது மட்டுமல்லாமல், முந்தைய அவதாரத்தில், தன் பக்தன் பிரகலாதன், தன் மீது செலுத்திய பக்திக்கான நன்றிக்கடனை, அவனது சந்ததிக்கும் தருகிறார். இதனால் தான், ஒருவர் இன்று செலுத்தும் பக்தியும், செய்யும் நற்செயல்களும், அவனது தலைமுறையையும் பாதுகாக்கும் என்கின்றனர்.

மகாபலிக்கு புரோகிதராக இருந்தவர் சுக்ராச்சாரியார், அவர், 'வந்திருப்பது எல்லாம் வல்ல ஹரி, அவர் கேட்பதை மட்டும் கொடுத்து விடாதே...' என்று எடுத்துச் சொன்னார்.

மகாபலியோ, 'இறைவனே ஒரு பொருளை யாசித்து என்னிடம் வந்திருக்கிறான் என்றால், நானல்லவோ உயர்ந்தவன், நீர் சொல்வதைக் கேட்க மாட்டேன்...' என குரு நிந்தனை செய்தான். குருவுக்கு மகாகோபம். 'உன் செல்வத்தையெல்லாம் இழப்பாய்...' என சாபமிட்டார். பின், விஷ்ணு ஈரடியால் உலகளந்து, மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து ஆட்கொண்டது தெரிந்த கதை.

'அந்தணரே... வெறும் மூன்றடி நிலம் கேட்கவா இவ்வளவு தூரம் வந்தீர்... உலகத்தையே என் வசம் வைத்திருக்கிறேன். அவ்வளவையும் கேட்டாலும் தருகிறேன்...' என்றான் மகாபலி.

அதற்கு வாமனர், 'ஒருவனுக்கு தேவை என்னவோ, அதைத் தான் கேட்க வேண்டும்...' என்றார்.

இதன்மூலம், இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை, திருமாலும், தன்னைப் போல் மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டுமென மகாபலியும், உலகத்துக்கு உணர்த்தி யிருக்கின்றனர். இனியேனும் நாட்டில் நல்லாட்சி மலர, வாமனர் அருள் செய்யட்டும்.

***

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us